அமெரிக்காவும், சீனாவும் வர்த்தகத்தில் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றன. இதனை ஒரு வர்த்தகபோர் என்று கூட சொல்லலாம். இந்த சூழலை சாதகமாகப் பயன்படுத்தி செயற்கை பஞ்சு கலந்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கவனம் செலுத்துவதன் மூலம் வேலைவாய்ப்புகள் இந்தியாவில் அதிகரிக்கலாம் என்று ஜவுளித் தொழில் முனைவோர் கருத்து தெரிவிக்கின்றனர்.
உலக அளவில், ஆயத்த ஆடை சந்தையில் மிக முக்கியமாக கருதப்படுவது அமெரிக்க சந்தையாகும். சீனா மீது அமெரிக்கா தொடுத்துள்ள வர்த்தகப் போரால், அங்கு சீனாவின் ஏற்றுமதி ஆதிக்கம் குறைந்து அந்த வணிகவாய்ப்பு மற்ற நாடுகளுக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளது.
Also read: ஏற்றுமதி தொழில் முனைவோர்களின் வர்த்தக நிலை
நடப்பு ஆண்டின் சனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலத்தில் அமெரிக்கா 57,308 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4 லட்சம் கோடி) இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால அளவைக் கணக்கிட்டால், 5.76 சதவீதம் அதிகமாகும்.
அமெரிக்க சந்தையில் சீனா 30 சதவீதத்தைக் கைப்பற்றி முதல் இடத்தில் இருந்தாலும் நடப்பு ஆண்டில் வளர்ச்சிவீதம் 1.99 சதவீதம் மட்டுமே. இதே காலகட்டத்தில் 16 சதவீத சந்தையை கைப்பற்றியுள்ள வியட்நாம் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் 12 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் வங்கதேசம் 12 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியா 5 சதவீத மதிப்பைக் கைப்பற்றி 8 சதவீத வளர்ச்சியை எட்டி உள்ளது.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஆயத்தஆடை துறை முன்னிலை வகிக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி அடைந்தால், அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். கடந்த ஆண்டைக் காட்டிலும் வியட்நாம் ரூ. 7 ஆயிரம் கோடியும், வங்கதேசம் ரூ. 3100 கோடியும் அதிகம் ஏற்றுமதி செய்துள்ளன. ஆனால், இந்தியா ரூ. 1500 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகளை மட்டுமே ஏற்றுமதி செய்து வளர்ச்சியில் 3-ம் இடத்தைப் பிடித்து உள்ளது.
அமெரிக்க சந்தையில் பருத்தி சார்ந்த ஆயத்த ஆடைகளும், செயற்கை பஞ்சு கலந்த ஆடைகளும் ஏறத்தாழ சம அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. பருத்தி சார்ந்த ஆயத்த ஆடை வளர்ச்சியில் 10.58 சதவீத வளர்ச்சியை இந்தியா எட்டி இருந்தாலும், செயற்கை பஞ்சு கலந்த ஆடைகள் ஏற்றுமதியில் பின்தங்கியே உள்ளது. அமெரிக்கா, சீனா வர்த்தகப் போரின் முழுப் பலனையும் இந்தியா பெறவேண்டுமெனில் செயற்கை பஞ்சு கலந்த ஆடை ஏற்றுமதியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
இதுகுறித்து, இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறி இருப்பதாவது, அதிக அளவில் திருப்பூர் நிறுவனங்கள் ஐரோப்பிய ஆயத்த ஆடை சந்தையையே சார்ந்துள்ளன. இந்த வர்த்தகப்போரை முறையாக பயன்படுத்தி அமெரிக்கா வர்த்தகத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
Also read: தேயிலை தோட்ட சுற்றுலா
செயற்கை பஞ்சு கலந்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் அமெரிக்காவின் சந்தையில் இந்தியா 2.7 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கிறது. கடந்த 8 மாதங்களில் வளர்ச்சி, இந்த ஆடை வகையில் இல்லை. ஏறத்தாழ 27.485 மில்லியன் டாலர் மதிப்பிலான செயற்கை பஞ்சு ஆடைகளில் அமெரிக்க இறக்குமதி சந்தையில், இந்தியாவின் பங்கு 755 மில்லியன் டாலர் மட்டும்தான். ஒட்டுமொத்த இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி பெரிதும் வளராமல் போனதற்கு இது முக்கிய காரணமாகும். எனவே, செயற்கை பஞ்சு கலந்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கூடுதல் கவனம் அவசியம். இது தொடர்பான ஜிஎஸ்டி வரி வீதங்களில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.
செயற்கை பஞ்சு மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கான இறக்குமதி வரி வீதத்திலும் திருத்தம் செய்ய வேண்டும். தேசிய அளவில், செயற்கை பஞ்சு கலந்த ஆயத்த ஆடைத் தயாரிப்பை வளர்த்தெடுப்பதற்கான குழு அமைக்கப்பட வேண்டும். என்று அவர் கூறி உள்ளார்.
– த. செந்தமிழ்ச் செல்வன்