18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள். 60 வயதிற்குப் பின், மாதம் 5000 ரூபாய் ஓய்வூதியம் இத்திட்டத்தின் மூலம் பெறலாம். இதில் முதலீடு செய்வதற்கு வரிச்சலுகை உண்டு.
அடல் பென்ஷன் திட்டம் சுவவலம்பன் திட்டத்திற்கு மாற்றாக, மத்திய அரசால் கொண்டுவரப் பட்டது. டிரைவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.
2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கின்றது. அனைத்து வங்கி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மூலம் இத்திட்டத்தில் சேரலாம்.
மாதாந்திர பங்களிப்புத் தொகை
18 வயதில் இத்திட்டத்தில் இணைபவர் மாதம் தோறும் ரூ.42 முதல் ரூ.210 வரை 42 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். ரூ.42 செலுத்தி வந்தால் 60 வயதுக்குப்பின் மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். ரூ.210 செலுத்தி வந்திருந்தால் 60 வயதுக்குப் பின் 5000 ரூபாய் கிடைக்கும்.
Also read: வருமான வரிச் சட்டத்தின் புதிய பிரிவு 115BAA
முதலில் பங்களிப்புத் தொகை செலுத்திய நாள் எதுவோ அதே நாளில் மாதம் தோறும் தானாகவே சேமிப்புக் கணக்கில் இருந்து மாதாந்திர பங்களிப்புத் தொகை கழித்துக்கொள்ளப்படும். 5ஆம் தேதி முதல் முறை பங்களிப்புத் தொகையை செலுத்தியிருந்தால், ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி அந்தத் தொகை தானாகவே கழித்துக்கொள்ளப்படும்.
கணக்கில் இருந்து தானாகவே கழித்துக்கொள்ளும் வசதியை விரும்பாதவர்கள் தவிர்க்கலாம். ஆனால், மாதம் தோறும் தாங்களே பணத்தைச் செலுத்த வேண்டும். தவறினால், அபராதத்துடன் செலுத்த வேண்டி இருக்கும். (ரூ.1 முதல் 100-க்கு ஒரு மாதத்துக்கு 1 ரூபாயும், ரூ.101 முதல் 500 வரை ஒரு மாதத்துக்கு 2 ரூபாயும், ரூ.501 முதல் 1,000 வரை ஒரு மாதத்துக்கு 5 ரூபாயும், ரூ.1001-க்கு மேல் ஒரு மாதத்துக்கு 10 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். தொடர்ந்து, 24 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்படுவதுடன், அடல் பென்ஷன் திட்டத்தில் இருந்து கணக்கு நீக்கப்படும். குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் இத்திட்டத்தில் இருக்க வேண்டும். எனவேதான், 40 வயதுக்கு மேல் இத்திட்டத்தில் இணைய முடியாது.
பென்ஷன் தொகை மற்றும் மாதாந்திரத் பங்களிப்பு தொகையை மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஆனால், ஆண்டுக்கு ஒரு முறை ஏப்ரல் மாதம் மட்டும் இந்த வாய்ப்பு கிடைக்கும். அதாவது, 18 வயதில் ரூ.84 செலுத்தி 60 வயதுக்குப் பின் 1000 ரூபாய் ஓய்வூதியம் பெற முடிவு செய்திருந்தவர், ஏப்ரல் மாதம் வரும்போது மாதாந்திர பங்களிப்புத் தொகையை கூட்டவோ குறைக்கவோ செய்ய முடியும். அப்போது, 60 வயதுக்குப் பின் கிடைக்கும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையும் மாறும்.
இத்திட்டத்தில், முதலீடு செய்வதற்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு இணையான வரிச்சலுகை உண்டு. வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 80சிசிடி 1பி (Section 80CCD 1B) மூலம் ரூ.50,000 வரை வரிச்சலுகையைப் பெறலாம். பிரிவு 80சி (Section 80C) மூலம் கிடைக்கும் 1.5 லட்சம் ரூபாய் வரிச்சலுகையுடன் கூடுதலாக இந்த வரிச் சலுகை கிடைக்கும்.
Also read: வங்கி ஊழியரின் விவசாயப் பயணம்
இறப்பு போன்ற இன்றியமையாத காரணத்தினால் மட்டுமே இத்திட்டத்தில் இருந்து விலக முடியும். திட்டத்தில் இணைந்தவர் இறந்துவிட்டால், அவரது வாழ்க்கைத்துணை வாழும் காலம் வரை அவரது ஓய்வூதியம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையும் இறந்த பின், உறுதி அளிக்கப்பட்ட மொத்த தொகையில் எஞ்சிய தொகை திட்டத்தில் சேர்ந்தவரின் வாரிசுதாரருக்கு மொத்தமாக வழங்கப்படும். திட்டத்தில் இணைந்தவர் 60 வயதுக்கு முன்பே இறந்து, அவரது வாழ்க்கைத் துணை மீதி காலத்திற்கு மாதாந்திர பங்களிப்புத் தொகையை செலுத்திவந்திருந்தாலும் இது பொருந்தும்.
தேசிய ஓய்வூதியத் திட்ட இணையதளத்தின் மூலமும் இத்திட்டத்தில் இணையலாம். ஆன்லைன் பதிவுக்கு எந்த ஆவணத்தையும் அச்சு நகலாக சமர்ப்பிக்க வேண்டியதில்லை. இத்திட்டத்தைப் பற்றிய சந்தேகங்களுக்கு 1800-110-069 என்ற இலவச உதவி எண்ணை அழைக்கலாம்.