வங்கி ஊழியரின் விவசாயப் பயணம்

முப்பத்து எட்டு ஆண்டுகளாக வங்கியில் பணியாற்றிய செந்தமிழ்ச் செல்வன் என்பவர் வேலூர் மாவட்டம் லத்தேரிக்கு அருகில், அறிவுத் தோட்டம் என்று ஒருத் தோட்டத்தை நிறுவி விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் கூறியதாவது, நான் வங்கியில் வேலை செய்த தொடக்க காலத்தில் விவசாயிகள் கடன் வாங்கிவிட்டு ஏமாற்று பவர்களாக இருக்கிறார்கள் என்றுதான் நினைத்து இருந்தேன். பின்பு, வங்கியில் விவசாயிகளுக்கு கடன் உதவி அளிக்கும் துறையில் பணியாற்றியபோது தான் பல விவசாயிகள் கடன் வேண்டாம் என்று தவிர்ப்பது புரிந்தது. விவசாயமே ஒழுங்காக செய்யமுடியவில்லை என்ற நிலையில் கடன் வாங்கி என்னசெய்யப் போகிறோம் என்றனர். அடுத்து, பசுமைப் புரட்சிக்குப் பின்பு, இரசாயண உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துகின்றனர். அந்த கழிவுகள் உணவில் கலந்து நஞ்சு ஏற்பட்டு உள்ளது.

இதனால் பலநோய்கள் ஏற்படுகின்றன. இந்த இரண்டு செய்திகள் என்னில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. அதற்கு தீர்வுக் காணவேண்டும் என்பதற் காகவே நான் விவசாயத் தொழிலில் ஈடுபட்டேன்.

Advertisement

பத்து ஆண்டுகளுக்கு முன், இந்த நிலத்தை வாங்கும் பொழுது தென்னைமரங்கள் உயிருக்கு ஊசலாடும் நிலையில் இருந்தன. அதற்கு தண்ணீரும், இயற்கை உரங்களும் கொடுத்தேன். அந்தவகையில், கடல்பாசி உரத்தை தென்னைமரத்தின் வேர்களுக்குக் கொடுத்தேன். இது நன்கு பலன் அளித்தது. இந்த தோட்டத்தில் மாமரங்களும் நிறைய இருக்கும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், 40 எலுமிச்சைச் செடிகளை வைத்தேன். தற்போது, நிறைய காய்களைக் கொடுக்கின்றன. வாரத்திற்கு ஒருமுறை பறிப்போம். 10 கிலோ காய்கள் கிடைக்கும். குறிப்பாக, இந்தத் தோட்டத்தில் நிறைய மரங்கள்தான் இருக்கும். அவைதான் இந்த தோட்டத்தின் மிகப்பெரிய சொத்து.

இரசாயணங்கள் சேர்த்தால் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம் வரைக்கும் வளமாக இருக்கும். ஆனால், இயற்கை விவசாயத்தால் வாழ்நாள் முழுவதும் மரம் வளமாக இருக்கும் உரமிட்ட மரம் மட்டும் அல்லாது சுற்றி உள்ள அனைத்தும் வளமாக இருக்கும். காய்ப்பும் குறையாது, குறையவும் இல்லை.

இதனால், பலவகையான பறவைகளும், வண்ணத்துப் பூச்சிகளும் வந்து செல்கின்றன. விதைப் பரவலுக்கு பறவைகள் முக்கியமான காரணம் ஆகும். இதுவும் இங்கு நடைபெறுகிறது. இந்த தோட்டத்தில் நாங்கள் விதைக்காத, புதியதாக பலச் செடிகள் முளைத்து உள்ளன.

நாங்கள் மோனோ கிராஃப்ட் முறையிலும், மல்டி கிராஃப்ட் முறையிலும் பயிரிடுகிறோம். கொள்ளு, சாமை, கம்பு இவற்றை மரங்களுக்கு இடையில் விதைத்து உள்ளோம். இந்த தோட்டத்தில் பூச்செடிகளுக்கு என்று தனிப்பகுதி உள்ளது. செடிகளின் வளர்ச்சிக்கு வண்ணத்துப் பூச்சிகளும், வண்டுகளும் பெரும் உதவியாக இருக்கின்றன. இதேபோல், மூலிகைச் செடிகளுக்கும் தனிப்பகுதி உள்ளது. பிரண்டை, நொச்சி, ஆடாதொடை, சிரியா நங்கை, கற்றாழை, லெமன் கிராஸ், கல்யாண முருங்கை போன்றவைகள் உள்ளன. இந்தப் பகுதியானது சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு சிறு மருத்துவமனையாக செயல்படுகிறது.

இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் என்பது மிகவும் குறைவு, கிணறுகள் எல்லாம் வற்றி விட்டன. அதனால், போர் அமைத்து நீரைப் பயன்படுத்துகிறேன். மழைப் பெய்து சாலையில் வீணாக ஓடும் நீரை பள்ளம் தோண்டி நிலத்தடி நீராக சேமிக்கிறோம். பூமிக்கு அடியில் இருந்து எடுக்கும் நீரை திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

முதல் மூன்று ஆண்டுகள் பராமரிப்பிற்காக எடுத்துக் கொண்டேன். அதன் பிறகு, ஓரளவு இலாபம் வரத் தொடங்கியது. தென்னை ஆண்டுக்கு 10,000 காய்களைக் கொடுக்கின்றது. ஒரு காயின் விலை. 15 ரூபாய் என விற்கிறேன். தற்போது, ஏறக்குறைய ஆண்டுக்கு 4,00,000 வருமானம் வருகின்றது.

அதில் செலவிற்காக 2,00,000 போகின்றது. இன்றளவிலும், விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதல் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது. இதில் நானும் விதிவிலக்கு அல்ல. சுற்று வட்டாரத்திலும், என் நண்பர்கள் மூலமும் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டு இருக்கிறேன்.

நான் இந்த தொழிலை தொடங்கும்போது, விவசாயம் சாத்தியம், லாபகரமானது, பெரிய அளவில் பயனளிக்கும் என்பதைக் கொண்டுதான் தொடங்கினேன் என்றார்.

– சா. கு. கனிமொழி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here