தொழில் செய்பவர்கள் அனைவரும் முகநூலில் தொழில் பக்கத்தை (Business Page) உருவாக்க வேண்டும். தொழில்பக்கத்தை உருவாக்க உங்களுடைய பொதுப்பயன்பாட்டிற்காக உள்ள முகநூலில் மட்டுமே உருவாக்க முடியும். நேரடியாக தொழில் பக்கத்தை உருவாக்க முடியாது. முகநூலில், மேல் பக்கத்தில் உள்ள Page, Ad, Group, Event என்று நான்கு வகைகள் ஆப்ஷன்கள் வரும். அதில் Page என்பதை தேர்வு செய்யவும். அங்கு Business அல்லது Brand மற்றும் Community அல்லது Public Figure என்ற இரண்டு விதமாக தோன்றும். இங்கு தொழில் தொடர்பான பக்கத்தை உருவாக்க வேண்டுமென்பதால் முதலில் உள்ள Business என்பதை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.Community அல்லது Public Figure என்பது, சமூகத்தில் அனைவருக்கும் தெரிந்த நபர்கள் இவற்றை தேர்ந்து எடுத்தால், அவர்களுடைய ரசிகர்கள், தொண்டர்கள் இவரை பின்பற்ற (Follow) இந்த பக்கம் வசதியாக இருக்கும். காரணம், தனிப்பட்ட நண்பர்கள் சேர்ப்பில் ஐந்தாயிரம் நபர்களுக்கு மேல் சேர்க்க முடியாது என்பதால் அவர்கள் இந்த பக்கத்தை தேர்வு செய்து கொள்வார்கள்.
தொழில் பக்கத்தை தேர்வு செய்த பிறகு Page Name மற்றும் Category என்ற பக்கம் தோன்றும். அந்த இடத்தில் உங்கள் முகநூல் தொழில் பக்கத்திற்கு பெயர் வைக்கவும். அடுத்து, உங்கள் தொழில் எந்த வகையில் வருகிறது (சான்று- மொபைல் விற்பனை, கார் சர்விஸ்) என்று பார்த்து அவற்றை தேர்வு செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று தொழில் முகவரி தெளிவாக கொடுக்கவும். முகவரிக்கு பிறகு உங்கள் பக்கத்திற்கு என்று Profile picture மற்றும் Cover Banner இரண்டையும் இணைக்க வேண்டும். பொதுவாக, எந்த சமூக வலைத்தளத்திலும் கணக்கு தொடங்க இருந்தால் அதற்கு முன்பு Profile picture மற்றும் Cover Banner இவை இரண்டையும் தயார் செய்து கொள்ளுங்கள். அனைத்து சமூக வலைத்தளங்களில் இவை இரண்டும் தேவைபடும். Profile Picture என்பதில் உங்கள் தொழில் Logo பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் உங்கள் தொழில் logo தெரியவரும். இவற்றை தவிர்த்து வேறு படங்களும் அங்கு பயன்படுத்தலாம். ஆனால், அவை உங்கள் தொழில் சார்ந்து இருந்தால் நன்றாக இருக்கும். Cover Picture இடத்தில் உங்கள் தொழில் புகைப்படம் வைத்துவிடுங்கள் அல்லது உங்கள் விற்பனை பொருட்கள் படங்களும் இணைக்கலாம். மாதம் ஒருமுறை Cover Picture மாற்றுங்கள். உங்கள் பக்கத்திற்கு வருபவர்களின் கவனத்தை அவை கவரும். இப்பொழுது, முகநூலில் உங்கள் தொழிலுக்கென்று பக்கம் (Business Page) தயாராகிவிட்டது.
தொடக்கத்தில், பக்கத்தில் சில அடிப்படை செய்திகளை செய்யவேண்டும். உங்கள் தொழில் பக்கத்திற்கு என்று தனியாகப் unique பெயர் தேர்வு செய்ய வேண்டும். profile picture W› create unique name என்று தோன்றும் அவற்றை தேர்வு செய்து பெயர் கொடுங்கள் அந்த பெயர் வேறு யாராவது எடுத்து இருந்தால் வேறு பெயர் தேர்வு செய்யவேண்டும். அதேபோல், நீங்கள் தேர்ந்து எடுத்த பெயர் உலகில் வேறு யாரும் தேர்வு செய்ய முடியாது. இந்த பெயரைத்தான் facebook.com/uniquename என்று உங்கள் விளம்பரத்தில் கொடுக்க வேண்டும். இந்த பெயரை கொண்டு ஒருவர் தேடினால் நேரிடையாக உங்கள் பக்கத்திற்கு வரமுடியும். தொழில் பக்கத்தில் இடதுபுறத்தில் வரிசையாக கீழ் நோக்கி Home, Service, Photos, Videos, About என்று இன்னும் நிறைய Tabs இருக்கும். அவற்றில் முதலில் About என்பதை தேர்ந்து எடுத்துகொள்ளுங்கள். அதில், உங்கள் தொழில் தொடங்கிய ஆண்டு, மின்னஞ்சல், வலைதள முகவரி, தொலைபேசி எண், இன்னும் பிற அடிப்படை தகவல்களை கொடுத்துவிடுங்கள். ஒரு வாடிக்கையாளர் உங்கள் தொழில் பக்கத்திற்கு வந்தால் உங்களைப்பற்றி முழு தகவலும் அவருக்குத் தெரியவேண்டும்.
முகநூலில் நிறைய போலி கணக்குகள் இருப்பதால் மக்களுக்கு அவற்றின் மீது, சிறிது நம்பிக்கை குறைவாகவே இருக்கும். அதனால், நம் தொழில் பற்றிய அனைத்து தகவல்களும் அங்கு இருந்தால் வாடிக்கையார்கள் உங்களை தொடர்பு கொண்டு கேட்பார்கள். அதனால், முடிந்தவரை தொழில் தொடர்பான அனைத்து தகவல்களும் கொடுத்துவிடுங்கள்.
இன்று முகநூலில் மட்டுமே நிறையபேர் பொருட்களை விற்பனை செய்து தொழில் செய்து வருகிறார்கள். ஆனால், உங்கள் தொழிலுக்கென்று வலைத்தளம் ஒன்றை உருவாக்கி அதில் முகநூலை இணைத்து விற்பனை செய்யுங்கள். நாளை முகநூலில் எந்தவித term& condition மாற்றுவார்கள் என்று தெரியாததால் வலைத்தளம் நமக்கு பலமாக இருக்கும். முகநூல் தொடர்பாக இன்னும் நிறைய பயன்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
-செழியன்.ஜா