என் குடியிருப்புக்கு அருகே ஓர் ஆட்டோ ஓட்டுநர் இருக்கிறார். நான்கு வருடத்திற்கு முன், பிரபல அரசுக் கட்டடம் முனையில் தினசரி ஏடுகளை விற்று வந்தார். குறிப்பிட்ட ஏட்டை (15 நாளுக்கு ஒரு முறை வெளி வருவது) நான் சற்று தள்ளி வருவதைக் கவனித்துக் கொண்டிருந்து “என்னிடம் சொல்லுங்க! நான் கொண்டு வந்து போடுகிறேன்” என்றார்.
அது போலவே மறுமாதம் முதல் இல்லத்தில் போட்டார். கூடவே, பிரபல தினசரி ஏட்டையும் (சந்தா கட்டினது) வீட்டுக்குக் கொண்டு வினியோகித்தார். 2015 இறுதியில், திடீரென்று ஒரு நாள் அரசு இத்தகைய கடைகளை அப்புறப்படுத்தியது. அவ்வளவுதான்… இதுதான் சாக்கென்று பத்திரிகை வினியோகத்தையே நிறுத்திவிட்டார். “நல்ல வருமானம் இல்லீங்க இதில்” என்பது அவருடைய கோணம். அதே நேரம், வண்டி ஓட்டுவதில் முனைப்பாக இருக்கிறார் என்றும் கூற முடியாது.
ஒரு தினம் நான் அவர் வாகனத்தில் பயணம் செய்த போது உங்கள் பக்கம் ஒரு புது குடியிருப்பு வருகிறதாமே? வாடகை தர இருக்கிறார்கள் என்று வினவினார். உண்மைதான். ஆனால் வீட்டு உரிமையாளர் விதித்த நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லை என்று அந்த வாடிக்கையாளரை விட்டு வேறு ஒருவரைக் குறிப்பிட்டார். எப்போதிலிருந்து வாடகைக்கு விடுவாங்க, விசாரிச்சு சொல்லுங்க என்றார். அந்த நபரின் இயல்பு எனக்குப் புரிந்துவிட்டது. எதிலும் ஒரு தீவிர ஈடுபாடில்லை. மாங்காய் விழுந்தால் லாபம்தானே! என்கிற நினைப்பில் செயல்படுகிறார். ரியல் எஸ்டேட்டில் ஒன்று அமைந்தால்கூட, ரூ.5000 குறைந்தபட்சம் உரிமையாளரிடமிருந்து கிடைக்கும். ஆனால் அதற்கேற்ப குறிப்பிட்ட தொழிலில் சீரியஸான முனைப்பு காணோம். இது அவருடைய பலவீனம்.
மாறாக, வேறொருவரை எனக்கு அறிமுகம் உண்டு.
பல வருடங்களாகக் கோயிலுக்கெதிரில் தையல் கடை வைத்திருக்கிறார்; அவர் மனைவி எழுது பொருட்கள், பெண்களுக்கு வேண்டிய ஸ்டிக்கர் (சமீபத்திய வேலை பிரபல குரியர் நிறுவனத்துக்கு முகவர்) தையல் கடை நபர், பழைய காற்சட்டை, சட்டை இவற்றுடன் பெண்களுடைய ஜாக்கெட்டை சரி செய்வது, (இறுக்கமா இருந்தாலோ அல்லது தொள தொளவென்று இருந்தாலோ மாற்றி தைப்பது) நாங்கள் கடைக்குச் சென்று துணிகள் கொடுத்தால், வீடு தேடி வந்து திருப்பித் தந்து விட்டு பணம் பெற்றுக் கொள்வார்.
கூலி சிலநேரத்தில் அதிகமென்று தோன்றினால் தொழில் துல்லியமாக இருக்கும் என்பதில் ஒரு நிறைவு. ஆச்சரியம் என்னவென்றால், அந்த மனிதர், இவை தவிர, ரியல் எஸ்டேட் வேலையும் செய்து வருகிறார். இரு தரப்பாரிடமும் நன்கு திறம்படப் பேசி, சம்மதிக்க செய்து விடுகிறார்.
முதலில் குறிப்பிட்ட நண்பரின் குடியிருப்புக்குக்கூட நேரில் வந்து பார்த்து சில பயனுள்ள யோசனைகள் சொன்னார். வந்து பார்க்கும் போது பளிச்சென்று இருக்க வேண்டும். ஓரிரண்டு குழல் விளக்கு பொருத்தி விடுங்கள்.
அவரிடம் நான் கண்ட பிளஸ் பாயிண்ட்டுகள்:-
1. தொழிலில் உள்ள தேர்ந்த அறிவு
ஒரு சில காற்சட்டைகளை தைக்க மறுத்துவிடுவார். இவை ஆயத்த ஆடை (Ready Made)யாக வாங்கி இருக்கிறீர்கள். இதில் கை வைத்தால் கெட்டுப் போயிடும் என்று மிகச் சரியாக கணித்துவிடுவார்.
2. இதே போல்தான் ரியல் எஸ்டேட்டிலும்
சர்ச் பகுதி, தபால் நிலையம் அருகில், கடற்கரை பக்கம் என்று எங்கள் நகரிலுள்ள ஒவ்வொன்றும், இன்ன வாடகை (கட்டடமாக இருந்தால்) இவ்வளவுதான் பெறுமானம் என்று தெரிந்து வைத்துக் கொண்டு, அதற்கேற்பத்தான் பேச்சைத் தொடங்குவார்.
3. குறித்த நேரத்தில் செயல்படுவது
இரவு எட்டு மணிக்கு வருகிறேன் என்றால்… நிச்சயம் வந்து விடுவார். அதே மாதிரி செய்ய இயலவில்லை என்றால், முன்கூட்டியே தகவல் தந்துவிடுவார்.
இதேபோன்ற, தன்மையுள்ள வேறு ஒரு ஆட்டோ ஓட்டுநரையும் நான் அறிவேன். நண்பருடைய பேரனை மாலை(டியூஷன்)வகுப்புக்கு இட்டு செல்வார். சில நாட்கள் வரமுடியாவிட்டால், தெரிவித்துவிடுவார். சாலை நடமாட்டம், எதாவது, ஊர்வலத்தால் ஏற்படுகின்ற நெரிசல், திடீரென்று மாறுகிற ஒரு வழிப்பாதை என எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்து இருப்பார்.
செய் தொழிலில் முன்னேற வேண்டுமெனில் தேவையான மூன்று
(அ) தொழிலில் அறிவு
அவ்வப்போதைய மாறுதல்களைத் தெரிந்து கொண்டு, அதைப் பின்பற்றுகிற முன்னடைவு.
(ஆ) நம்பகத் தன்மை.
இந்த ஆளிடம் இந்த வேலையை நம்பிக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தை வாடிக்கையாளரிடம் வளர்ப்பது.
(இ) காலத்தை வீணாக்காதிருத்தல்…
சிந்தித்துப் பார்த்தால் இந்த மூன்றில் எந்த இயல்பும் முதல் பத்தியில் விவரித்திருக்கும் ஆட்டோ ஓட்டுனருக்கு இல்லை என்பது கண்கூடு.
– வாதுலன்