நம் நாட்டின் வணிகம் சார்ந்த வரலாற்றை புரட்டிப்பார்த்தோமானால் ஆர்வம் உள்ள தொழில்முனைவோர்களுக்கு சந்தையில் சிறப்பான வாய்ப்பு இருப்பது தெரியவரும். சிலருக்கு சந்தையை கைப்பற்றும் அளவிற்கு வணிகம் சார்ந்த புத்திக்கூர்மை இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர்தான் தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி. இனி, அவர் பேசியதில் இருந்துஞ்..
தூத்துக்குடியில் எனக்கு சொந்தமாக ‘மாருதி சால்ட்’ என்ற பெயரில் உப்பள நிறுவனம் உண்டு. அப்பாவுக்கு பிறகு நான்தான் கவனிக்கிறேன். எனக்கு மீடியா மீது ஒரு விரும்பம் இருந்தது. அதனால், மீடியா தொடர்பாக படிக்க சென்னை சென்றேன். அங்கு, புகழ்பெற்ற ஒரு இன்ஸ்ட்டியூட்டில் விஸ்காம் சேர்ந்தேன். வாரத்தில் மூன்று நாட்கள் படிப்பேன். மூன்று நாட்கள் உப்பளம் செல்வேன். அப்போதான், அம்மணிய பார்த்தேன்( மனைவி). பார்த்த உடனே பிடித்தது பொய் சொல்ல மாட்டேன். நாங்க ரெண்டு பேரும் பேச பேச எங்களுக்குள் ஒரு புரிதல் ஏற்பட்டது. என் வீட்டில் என்னோட விருப்பம் என்று கூறிவிட்டனர். அவங்க வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இன்றுவரை பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. படிப்பு முடிவதற்குள்ளேயே திருமணத்தை முடித்தோம். இப்போது, மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அடுத்த கேள்விக்கு, நான் பதில் சொல்கிறேன் என்று கணவரின் வாயைப் பொத்தினார் விஜயலட்சுமி.
இவர், உப்பளம் பிஸ்னஸ் கவனித்துக் கொண்டு இருந்தார். நான் வீட்டில் சும்மாதான் இருந்தேன். எனக்கு அப்பப்போ விலை உயர்ந்த செல்போன், லேப்டாப்ன்னு வாங்கி கொடுத்துக் கொண்டு இருந்தார். அவற்றை டைம் பாஸ்காக பார்க்க தொடங்கினேன். அதுவே, ஒரு கட்டத்தின் பிஸ்னஸ் ஆசையே தூண்டி விட்டது. அப்போது, ராஜீவ்காந்தியிடம் பேசினேன். நம்ம ஏன் திருமணம் மற்றும் பிஸ்னஸ் புரோமோஷன் மாதிரியான ஈவன்ட் தொழில் செய்யக்கூடாது? என்றேன். அவருக்கு முகமெல்லாம் மலர்ச்சி. காரணம், ‘நாம படிச்ச மீடியா படிப்ப இப்போவாவது பயன்படுத்த நினைச்சயே சூப்பர்’ என்றார்.
அவர், அழகாக ஓவியம் வரைவார், வீடியோ எடிட்டிங்-ம் அற்புதமாக செய்வார். அதனால், முதலில் ‘செல்ஃபிபுள்ள’ என்கிற பேரில் ஒரு யுடியூப் சேனல் தொடங்கினோம். அதில், சில சுற்றுலா தளங்கள் பற்றியும், புது ஜோடிகள் தங்கி மகிழும் சில ரிசார்ட் பற்றியும் பதிவு செய்தோம். எங்களை வெவ்வேறு வகையான நிறுவனங்கள் நாடின. குறிப்பாக, ஜூவல்லர்ஸ் நிறுவனம் எங்களை நாடி, எங்களிடம் உள்ள திருமண நகைகளை புரோமோட் செய்ய வேண்டிக் கேட்டார்கள். சிலர் திருமணத்திற்கான ஃபோட்டோகிராஃபி மற்றும் வீடியோ கிராஃபி செய்யும்படி கேட்டனர். முதலில் அதை மட்டுமே செய்து கொடுத்தோம்.
ஃபோட்டோ கிராஃபி மற்றும் வீடியோகிராஃபியை பொறுத்தவரை விதவிதமான ஆல்பம் கொடுப்போம். அவர்கள் சொல்வதற்கு ஏற்ற மாதிரி பட்ஜெட் கொடுப்போம். எங்கள் விருப்பப்படி செய்வதற்கு நாங்கள் ஒரு பட்ஜெட் வைத்து உள்ளோம். அந்த பட்ஜெட்டில் திருமணம், வரவேற்பு மற்றும் திருமண ஜோடிகளை அழைத்து அவுட்டோர் சூட்டிங் எடுத்து ஃபோட்டோஸ் என அனைத்தும் சேர்த்து ஆல்பம் போட்டுக் கொடுப்போம். அதே போல, வீடியோவையும் எடிட்டிங் செய்து ஆவணப்படமாக கொடுப்போம். இந்த இரண்டையும் தவிர வேறு வேலைகளை எடுத்துக்கொள்ள மாட்டோம்.
அதேபோல, அவர்களின் திருமண அழைப்பிதழை வைத்து சோசியல் மீடியாவில் புரோமோ கொடுப்போம். இவை தவிர, திருமண வீட்டாரே அனைத்து வேலைகளையும் பார்க்க சொன்னால், திருமண அட்டை அச்சு செய்வது முதல் வரவேற்பு பெண்(வெல்கம் கேர்ள்), வரவேற்பு நடனம் மற்றும் மேடை அலங்காரம் என அசத்தி விடுவோம். இப்போது, தூத்துக்குடியில் திருமண நிகழ்ச்சி நடத்துவது மற்றும் ஃபோட்டோ கிராஃபி கலைக்கு முதன்மையான இடத்தில் இருக்கிறோம். தென் மாவட்டங்களில் எங்களுக்கு அதிகமான சலுகைகள் கிடைக்கிறது. தமிழ்நாடு முழுக்க முதன்மையான இடத்திற்கு வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய நீண்ட நாள் ஆசை.
இப்போது, இந்த ஈவன்ட் தொழிலில் பயண ஏற்பாடு தொழிலையும் இணைத்து உள்ளோம். இந்தத் தொழிலை இணைத்ததற்கு காரணம் உண்டு. எங்கள் குடும்பத்துடன் அண்மையில் குற்றாலம் சென்றிருந்தேன். வெறும் குற்றாலம் என்ற கோணத்தில் மட்டும் சிந்திப்பவர்களுக்கு அருவி மட்டுமே கண்களை குளிர்ச்சியாக்கும். ஆனால், அந்தத் தளத்தை சுற்றுலா தளமாக பார்க்க விரும்பினால் நிறைய உள்ளன. குறிப்பாக, ரிசார்ட் மட்டுமே பல வகையான ரிசார்ட்கள் உள்ளன. மேற்கு மலைத் தொடர்ச்சியில் இந்த மாதிரியான ரிசார்ட்கள் அமைந்திருப்பது வியப்பாக இருந்தது. நாங்கள், கொஞ்சம் இன்டீரியர் ரிசார்ட்டில் தங்கினோம். அவ்வளவு அழகாக இருந்தது. அங்குள்ள ரிசார்ட்டில் தங்தான் குற்றாலம் முதன்மை அருவி முதல் பாலருவி வரை சுற்றிப் பார்ப்பதற்கான இடங்களைப் பட்டியல் செய்தோம். 15 இடங்கள் சிக்கின. இது எங்களுக்கு வியப்பாக இருந்தது. அப்போது, இதையும் எங்களுடைய தொழிலாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தோம். அதுமுதல், நானும் என் மனைவியும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் என தென் மாவட்டங்கள் முழுவதும் சுற்றுலா தளங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் என மிகப்பெரிய பட்டியல் வைத்து உள்ளோம்.
இப்போது, நெறுங்கிய நண்பர்களுக்கு தங்கும் எற்பாடுகளையும் சுற்றி காட்டுவதற்கான வழிகாட்டியையும் ஏற்பாடு செய்து வருகிறோம். உப்பள தொழிலை பொறுத்தளவில் ஒரு நிலையான தொழில் அது கைவந்த கலை என்பதால், இந்தப் புதிய ஈவன்ட் தொழிலில் அதிக அக்கறை எடுத்து வருகிறேன். தென்னகத்தில் எங்களுக்கான மிகப்பெரிய சந்தை காத்திருப்பதாக நினைக்கிறேன்.
– தாமு. தமிழமுதன்