தமிழகத்தின் மதுரை மாநகரில் உள்ள மகாத்மா மான்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி செல்வி ஜே. தான்யா தஸ்னம் வரும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அங்கே அந்நாட்டின் நாசா (NASA) எனப்படும் அமெரிக்க வான்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வு நிர்வாகத் தலைமையகத்தில்(National Aeronautics and Space Administration) ஒரு வாரம் வரை செலவிட இருக்கிறார். அப்போது நாசாவை முழுமையாகச் சுற்றிப் பார்க்கவும், அங்குள்ள விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவுமான வாய்ப்பினைப் பெறுவார்.
இணையம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்வது போன்ற சேவைப் பணிகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்க நிறுவனமான கோ4குரு(Go4Guru), 2019-ஆம் ஆண்டு இந்திய அளவில் நடத்திய அறிவியல் ஆப்டிட்யூட் மற்றும் பொது அறிவுப் போட்டியில் (Science Aptitude and General Knowledge Test) வெற்றி பெற்ற மூன்று பேர்களில் செல்வி. தான்யா தஸ்னமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரைச் சேர்ந்த பாஷ்யம் குழுமப் பள்ளிகளின் – ஐ.ஐ.டி. அறக்கட்டளைப் பள்ளி மாணவியான செல்வி. சாய் புஜிதா மற்றும் மராட்டிய மாநிலத்தில் உள்ள அலிபக் என்ற ஊரின் ஜிண்டால் வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவன் திரு. அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் 2019-ஆம் ஆண்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மற்ற இரு மாணவர்கள் ஆவர். கோ4குரு நிறுவனம் நடத்திய தேசிய விண்வெளி அறிவியல் போட்டி 2019-இல் பங்கேற்ற ஆயிரக் கணக்கான மாணவர்களில் இருந்து இந்த மூவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விண்வெளி அறிவியல் போட்டியை, கோ4குரு நிறுவனம் அண்மையில் தொடங்கி வைத்தது.. விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, தற்போது அண்டவெளியில் சுழன்று கொண்டிருக்கும் நாசாவின் சார்பாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அனுபவம் உள்ள முன்னாள் விண்வெளி வீரர் முனைவர். டான் தாமஸ் இந்தப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சவீதா குழும மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி நிறுவனத்தின் தொடங்குநரும், வேந்தருமான முனைவர் என். எம். வீரைய்யனும் கலந்து கொண்டார். மேலும், நாசாவில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானியான முனைவர் தாமஸ் தமிழகத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, மாணவர்களிடையே உரையாற்ற தேவையான ஏற்பாடுகளையும் கோ4குரு, சவீதா பல்கலைக்கழகத்தின் ஆதரவோடு ஏற்பாடு செய்து உள்ளது.
Read also:அவர்கள் முடியாது என்றார்கள்; நாங்கள் வென்று காட்டினோம்!
முனைவர் தாமஸ், அக்டோபர் 4-ஆம் தேதி வரை தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்ற இருக்கிறார்.
2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய அளவிலான அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், கோ4குரு நிறுவனத்தின் சார்பில் வரும் அக்டோபர் மாத முதல் வாரத்தில் நாசாவில் நடத்தப்பட இருக்கும் பன்னாட்டு அளவிலான விண்வெளி அறிவியல் தொடர்பான கட்டுரைப் போட்டியிலும் கலந்து கொள்கிறார்கள். இதில் வெற்றி பெறும் 5 மாணவர்களுக்கு, அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற நிறுவனம் 10 ஆயிரம் அமெரிக்க டாலரினை கல்வி உதவித் தொகையாக வழங்க முன் வந்துள்ளது.
இந்திய மாணவர்கள் மேற்கொள்ள இருக்கும் நாசா பயணம் மற்றும் அடுத்து நடக்க இருக்கும் விண்வெளி அறிவியல் போட்டிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோ4குரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான திரு. காயம்பூ இராமலிங்கம், “பன்னாட்டு அளவில் நடக்கும் விண்வெளி அறிவியல் ஆய்வுகள் மற்றும் அவற்றை மேற்கொள்ளும் நிறுவனங்கள் குறித்து இந்திய மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 2017-ஆம் ஆண்டு இந்த அறிவியல் போட்டிகளைத் தொடங்கினோம்.
இதில் சமூகத்தின் எல்லாத் தரப்பு மாணவர்களும், பங்கேற்க வேண்டும் என்பதாலேயே எளிமையான அறிவியல் மற்றும் பொது அறிவு கேள்விகளைக் கொண்டு இந்தப் போட்டியை வடிவமைத்து உள்ளோம். இது இணைய வழியில் நேரடியாக பங்கேற்கும் வகையிலான ஒரு போட்டி. மாணவர்கள், அவரவரது வீடுகளில் இருந்தும் கூட இப்போட்டியில் பங்கேற்க முடியும்” எனத் தெரிவித்தார்.
– ராகு