Latest Posts

அவர்கள் முடியாது என்றார்கள்; நாங்கள் வென்று காட்டினோம்!

- Advertisement -

ஒரு குறிப்பிட்ட ஆந்திர ஐஸ்கிரீம் நிறுவனத்திடம், அவர்கள் ஐஸ்கிரீமை விற்பனை செய்ய தனி உரிமைக் கிளை (ஃப்ரான்சைஸ்) கேட்டபோது, அந்த நிறுவனத்தில் இருந்து வந்து இடத்தைப் பார்வையிட்ட அந்த நிறுவன அலுவலர்கள், இந்த இடத்தில் நம் ஐஸ்கிரீம் விற்பனை ஆகாது என்று தனி உரிமைக் கிளை தர மறுத்து விட்டார்கள். இதையே ஒரு சவாலாக ஏற்று அதே இடத்தில் தானாகவே ஒரு ஐஸ்கிரீம் விற்பனையகத்தைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார், ஸ்கூப்டு ஐஸ் கிரீம் பார் (Scooped Ice Cream Bar) உரிமையாளர் திரு. விசால். சென்னை, வேளச்சேரி, விஜய நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள இவரது விற்பனையகத்தில், இவரை பேட்டி கண்டபோது,

“ஐஸ்கிரீம் விற்பனை மற்றும் அதன் உற்பத்தி குறித்து எனக்கு எந்த ஒரு முன் அனுபவமும் இல்லை. பொதுவாக எனக்கு இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் வகை உணவுகள் மீது ஒரு தனி விருப்பம் உண்டு. விரும்பி உண்ணுவேன். எங்களின் இந்த விற்பனையகம் அமைந்திருக்கும் இடத்தில் முன்பு பொன்னு ஸ்டோர்ஸ் என்ற பெயரில் வீட்டுக்குத் தேவையான சாதனங்களை விற்பனை செய்யும் கடை வைத்திருந்தோம். பொன்னு ஸ்டோர்சின் கிளைகள் சென்னையில் நான்கு இடங்களில் இயங்கி வருகின்றன. இந்த இடத்தை மட்டும் ஐஸ்கிரீம் விற்பனையகத்துக்காக தேர்ந்தெடுத்தோம்.

இன்னொரு பிராண்டிடம் தனி உரிமைக் கிளை கேட்பதை விட, தரமான, சுவையான ஐஸ்கிரீம் வகைகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கான தகவல்களை சேகரித்து அங்கு உள்ள ஒரு புகழ் பெற்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யத் தொடங்கினோம்.

எங்கள் கடைக்கு பெரும்பாலும் பதினைந்து வயது பள்ளி மாணவர்களும், இளம் தம்பதிகளும், குழந்தைகளுடன் வரும் பெற்றோரும் அதிக அளவில் வருகிறார்கள். குழந்தைகளுக்குப் பிடிக்கும் வண்ணம் விற்பனையகத்தை வடிவமைத்து உள்ளோம். குடும்பத்துடன் வருபவர்கள் காத்திருக்கும் நேரத்தில் விளையாடுவதற்கு செஸ், பரமபதம் போன்ற விளையாட்டுகளை வைத்துள்ளோம்.

தொடர்ந்து ஐஸ்கிரீம் உண்ணு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. அதனால்தான் இப்போது மூலை முடுக்கெல்லாம் ஐஸ்கிரீம் பார்லர்கள் தோன்றி வருகின்றன. வெயில் காலம் மழைக்காலம் என்றில்லாமல் எப்போதும் ஐஸ்கிரீம் விற்பனை இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் வெயில் காலத்தில் விற்பனை சற்று அதிகமாக இருக்கும்.

ஐஸ்கிரீம் தவிர மில்க் ஷேக்குகள், டெசர்ட்ஸ் ஜார், கேக்குகள், இனிப்பு வகைகளையும் விற்பனை செய்து வருகின்றோம். எங்கள் நிறுவனத்தின் பிரவுனி நியூட்டெல்லா ஐஸ் கிரீம் அனைவராலும் அதிகம் விரும்பப்பபடும் ஐஸ்கிரீம் ஆகும். எங்கள் கடைக்கு வரும் குழந்தைகளின் முதல் விருப்பம் இந்த ஐஸ்கிரீம்தான்.

பொதுவாக ஐஸ் கிரீம் இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை உருகாமல் இருக்கும். பார்சல் வாங்க வரும் குறைந்த தொலைவில் இருப்பவர் களுக்கு அதற்கேற்ப பேக் செய்து கொடுப்போம். சற்று அதிக தொலைவில் இருந்து வருபவர்களுக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை உருகாமல் இருப்பதற்கேற்ப ட்ரை ஐஸ் போட்டு பேக் செய்து கொடுப்போம்.

18% என்ற அதிகமான ஜிஎஸ்டி வரியால் ஐஸ்கிரீம் தொழிலும் பாதிக்கப்பட்டு இருந்தது. வணிக அமைப்புகளின் தொடர் கோரிக்கைக்குப் பின் இந்த வரி 5% ஆக குறைக்கபட்டு உள்ளது. இதனால் ஐஸ்கிரீம் தொழில் மீது இருந்த சுமை குறைக்கப்பட்டதோடு, விற்பனையும் அதிகரித்து உள்ளது.

தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்விக்கி, சோமேட்டோ, ஊபர் ­ஈட்ஸ் மற்றும் ஃபுட் பாண்டா போன்ற டெலிவரி சேவைகள் ஆன்லைன் வணிகத்தை உயர்த்தி வருகின்றன. இந்த டெலிவரி சேவைகள் வந்த பின் உணவுப் பொருட்களின் விற்பனை அதிகரித்தபடியே இருக்கிறது. இந்த டெலிவரி சேவைகள் வாயிலாக நாங்களும் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்து வருகின்றோம். வாடிக்கையாளர்களும் இந்த ஆன்லைன் பதிவு டெலிவரி சேவைகளைப் பயன்படுத்தி அதிக அளவில் ஐஸ்கிரீம்களை விரும்பி வாங்குகின்றார்கள்.

எங்கள் பார்லர் காலை பதினோரு மணி முதல் இரவு இரண்டு மணி வரை செயல்படுகிறது. நள்ளிரவு பன்னிரெண்டு மணி முதல் இரண்டு மணி வரை ஆன்லைனில் மட்டும் விற்பனை நடைபெறும். பகலில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைப் போலவே இரவிலும் மக்கள் ஐஸ்கிரீமை விரும்பி உண்ணுகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் முதல் நாளில் இருந்து குறிப்பிட்ட பிளாஸ்டிக் பேக்கிங் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இதனால் எங்களைப் போன்ற ஐஸ்கிரீம் கடைக்காரர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஐஸ்கிரீம் ஒரு உருகும் உணவுப் பொருள். அதனை பேப்பர் பிளேட் மற்றும் பேப்பர் கப் போன்றவற்றில் வைத்துக் கொடுக்க முடியாது. உடனே ஈரமாகி பேப்பர் நைந்து போய் விடும்.

பிளாஸ்டிக் கப்புக்கு இணையான மாற்றுப் பொருள் ஐஸ்கிரீம் வைத்துக் கொடுக்க வேறு இல்லை. அரசு மறுசுழற்சி செய்ய முடியாத பெரிய நிறுவனங்களின் சிப்ஸ் பாக்கெட்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. பிளாஸ்டிக் கப்புகளை மறுசுழற்சி செய்ய முடியும். எனவே மீண்டும் பிளாஸ்டிக் கப்களை ஐஸ்கிரீம் தொழிலில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

இப்போது இருக்கும் புதிய தலைமுறையினருக்கு அவர்களுக்கு பிடித்த சுவை இருந்தால் போதும்; விலை சற்று அதிகமாக இருந்தாலும் கவலைப்படுவது இல்லை.. எங் களுக்குத் தேவைப் படும் பிரவுனி மற்றும் சில பொருட்களை தாங்களே தயாரித் துக் கொள்கிறோம்.

ஃப்ரீசரில் வைத்துப் பாதுகாக் கப்படும் ஐஸ்கிரீம் ஓர் ஆண்டு வரை கெடாமல் இருக்கும்.. ஆனால் எங்கள் கடை ஃப்ரீசரில் வைக்கப்படும் ஐஸ்கிரீம் ஒரு வாரத்துக் குள்ளாகவே விற்று விடும்.

கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று, ஐஸ்கிரீம் வாங்க திருமணமாகாத இளைஞரோ, இளைஞியோ வந்தால் அவர்களுக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கினால், ஒரு ஐஸ்கிரீமை இலவசமாகக் கொடுத்தோம். இந்த சலுகை இளைஞர்கள் நடுவில் பரவலாக வரவேற்பு பெற்றது. இந்த ஆண்டு காதலர் தினத்தன்றும் அந்த சலுகையை வழங்கினோம்.

அடுத்த கட்டமாக நாங்கள் எங்கள் தனி உரிமைக் கிளைகள் வழங்குவது குறித்து திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். சென்னை ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் – இல் இருக்கும் ஓஎம்ஆர் உணவுத் தெருவில் இரண்டு கடைகளை அடுத்த மாதம் ஐஸ்கிரீம் பார் பை ஸ்கூப்டு (Ice Cream Bar by Scooped) என்ற பெயரில் திறக்கவிருக்கிறோம்.

எனது துணைவியார் திருமதி. ஸ்டெபி கிரேஸ், ஒரு ஆர்க்கிடெக்ட். எங்கள் ஐஸ்கிரீம் விற்பனையகத்துக்கான இன்டீ ரியர் டிசைனை அவர்தான் இனி உருவாக்கயுள்ளார். இந்த முயற்சிகளில் பெரிய அளவுக்கு உதவியாக இருக்கிறார். கடைகளை வடிவமைப்பது முதல், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது வரை எனக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.” என்றார், திரு. விசால், பி.டெக்., (99625 05557).

– செ. தினேஷ் பாண்டியன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news