அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் 1986ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை ஆசிரியராக பணியாற்றினேன். நான் பணியில் சேரும் போது என் வயது 22. இன்றைய இணைய தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலம். நூலகத்தில் உள்ள பேராசிரியர்களின் புத்தகங்கள் மட்டுமே துணை. ஆனால் அவற்றை வைத்து நான் தெளிவு பெறலாமே தவிர கிராமங்களில் இருந்து எளிய பின்னணியில் தமிழ் வழியில் கற்ற மாணவர்களுக்கு பாடங்களை புரிய வைக்க முடியாது. அதனை சாதிக்க, அவர்களின் நிலையில் நின்று பார்த்து நாம் கீழிறங்கி வர வேண்டும்.
பொதுவாக வகுப்பில் 6 அல்லது ஏழு பெண்கள் உள்ளிட்ட 60 மாணவர்கள் இருப்பார்கள். அவர்களில் கற்றல் திறன் அதிகம் உள்ளவர்கள் 10 பேர் இருக்கலாம் (பெரும்பாலும் முன் பெஞ்ச் மாணவர்கள்). எது சொன்னாலும் புரிந்து கொள்ள இயலாத கற்றல் திறன் குறைந்த மாணவர்கள் 6 அல்லது 7 பேர் அதிக அளவாக 10 பேர் இருப்பார்கள் (கடைசி பெஞ்ச்). மற்றவர்கள் நடுத்தரமானவர்கள்.
நான் பாடம் நடத்தும் போது முன் பெஞ்ச் மாணவர்களின் முகக் குறிப்பை கவனித்து அதற்கேற்றாற் போல வேகத்தை கூட்டுவதோ, குறைப்பதோ இருக்கும். நடுத்தரத்தில் உள்ளவர்களில் சிலர் கூர்ந்து கவனிப்பார்கள்; சிலர் சற்று விட்டேத்தியாக இருப்பார்கள். அவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக சில நகைச்சுவை துணுக்குகள், எளிய எடுத்துக் காட்டுகள், நடைமுறை தகவல்கள் என சில வித்தைகளை செய்வேன். கடைசி வரிசை மாணவர்களை தூங்க விடாமல், அவர்களை கவனிக்க வைக்க அவர்களின் பெயர் சொல்லி அழைத்து, எளிதில் பதில் சொல்லத் தக்க சில சிறு கேள்விகளைக் கேட்பேன்.
சில நேரம் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால், அவர்கள் வகுப்பையும் சேர்த்து எடுக்க வேண்டி இருக்கும். அந்த மாதிரி நேரங்களில், தொடர்ந்து மூன்று மணி நேரம் வகுப்பில் நிற்க வேண்டி இருக்கும். அப்போது பெரும்பாலும் ஒரு மணி நேர இடைவெளியில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் மாணவர்களை பாடச் சொல்வது, மிமிக்ரி செய்யச் சொல்வது போன்றவற்றால் கொஞ்சம் மடை மாற்றுவேன்.
ஆனால் ஆறு ஆண்டுகளில் கடைசி இரண்டு ஆண்டுகள் சங்க நடவடிக்கைகளுக்காக அலைந்து திரிந்த போதும், சிறப்பு வகுப்புகள் வைத்தாவது நடத்த வேண்டிய பாடங்களை நடத்தி முடித்து விடுவேன். நான் நடத்தும் பாடங்களில் ஓரிரு முறைகளை தவிர 100% தேர்ச்சி இருக்கும். அதே போல் செய்முறைத் தேர்வுகளில் பழி வாங்குகிறேன் என்ற போர்வையில் யாரையும் ஃபெயிலாக்கியல்லை.
வகுப்பறையில் சந்தேகம் கேட்பவர்களை எரிச்சலோடு அணுக மாட்டேன். முடிந்தவரை ஐயங்களை தீர்க்க முயல்வேன். எனக்குத் தெரிந்ததை விட அதிகம் தெரிந்து வைத்திருந்து, அதை அவர்கள் கூறினால் அவர்களை மனம் திறந்து பாராட்டுவேன்.
பதின்பருவத்தின் இறுதியில் நிற்கும் மாணவர்களுக்கே உரித்தான சில சில்மிசங்களை சிலர் செய்வார்கள். அப்படி வகுப்பில் சேட்டை செய்பவர்களை வகுப்பறையை விட்டு வெளியே நிற்க செய்யும் கொடுமையை ஒரு நாளும் செய்தது இல்லை. தூங்குகிற மாணவன் மீது சாக்பீசை எறிந்தது இல்லை. “தம்பி, ஊர் வந்துருச்சின்னு சொல்லி அவன எழுப்பி விடு”என பக்கத்தில் உள்ள மாணவனிடம் சொல்லி அவன் எழுப்பி விடும் போது தூங்கி எழுந்தவனின் பதட்டம் வகுப்பறையில் சிரிப்பை வரவழைக்கும். அது தூக்கக் கலக்கத்தில் இருக்கும் மற்றவர்களையும் சுறுசுறுப்பாக்கி விடும்.
தூக்கம் சொக்குகின்ற மதிய நேர வகுப்புகளை கையாள்வது கடினமான வேலை. அதுவும் கலைப் பாடங்கள் போன்ற தொழிற் பாடங்களை நடத்துவது மிகவும் சிரமம். வாரத்தில் ஒரு வகுப்பு வேளை அப்படி அமைந்து விடும். அதற்கென்று அவர்கள் ஈடுபாட்டோடு கலந்து கொள்ளும் வகையில் சுவையான சில விளையாட்டுகளை அறிமுகப் படுத்துவேன். அத்துடன் பாடப்பகுதி களையும் சுவையாக நடத்தி விடுவேன்.
மாணவர்களை பேப்பர் பிரசன்டேஷன் செய்வதற்கும், செமினார் எடுப்பதற்கும் பழக்குவேன். அவர்களை செமினால் வகுப்புகள் எடுக்கச் சொல்லி நான் மாணவர்களிடையே அமர்ந்து கவனிப்பேன்.
இன்று நினைத்துப் பார்க்கும் போது பி.எட்., படிப்பு போன்ற கல்வி சார்ந்த எந்த படிப்பும் படிக்காமல், என்னுடைய மாணவர்களை மகிழ்ச்சியுடன் படிக்க வைத்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது இன்றும் என்னால் மகிழ்ச்சி அடைய முடிகிறது.
இப்போது கல்விப் பணியில் இருந்து வேறு தொழிலுக்கு மாறி விட்டாலும், கல்விமுறை பற்றிய நூல்களை இப்போது படிக்கும் போது, மாணவர்களிடையே நான் சிறப்பாகவே இயங்கி இருப்பதை உணர்கிறேன்.
அதேபோல முன் முடிவுகளோடு மாணவர்களிடம் வேறுபாடு காட்டும் பழக்கம் இயல்பிலேயே என்னிடம் இருந்தது இல்லை என்பதையும் உணர்கிறேன். இந்த என் அனுபவங்கள் இன்றைய இளம் ஆசிரியர்களுக்குப் பயன் படும் என்ற நோக்கத்திலேயே இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
-வீரஜோதிமணி அங்கிடுசாமி