-‘ஃப்ளேர் மேனேஜ்மென்ட் கம்பெனி’ திரு. வி. விஜய் வெங்கடேசன்
இன்றைக்கு நிறுவனங்களுக்கு, வீடுகளுக்கு, தொழில் முனைவோருக்கு பல்வேறு வெளித் திறன் பகுதி நேர அடிப்படையில் தேவைப்படுகிறது. குறிப்பாக ஹவுஸ் கீப்பிங் எனப்படும் தூய்மைப் பணிகள்(Housekeeping and cleaning services), தொழில் நுட்பம் சார்ந்த பணிகள் (Technical Services), பாதுகாப்பு சார்ந்த பணிகள்(Safety and Security), வாகனப் போக்குவரத்து மேலாண்மை (Fleet Management), பூச்சிகள் ஒழிப்பு (Pest Control), அலுவலகப் பணி மேலாண்மைக்கான ஆலோசனைகள் வழங்குதல் (Workplace strategy and advice), நகல் எடுக்கும் பணிகள்(Reprographics), விருந்துச் சமையல்(Catering), அலுவலக வரவேற்பறைப் பணிகள் (Front Office), கூரியர், இடம் மாற்றுதல் (Move Management), பணியாட்கள் தேர்வு (Manpower Services) போன்ற பணிகளைச் செய்து, தொழில் முனைவோரின் பணிச் சுமையைக் குறைக்க உதவும் ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் நிறுவனமாக செயல் பட்டு வருகிறது, ஃப்ளேர் மேனேஜ் மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (Flair Management Company pvt. Ltd).
இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக திரு. வி. விஜய் வெங்கடேசன் மற்றும் இவரது வாழ்விணையர் திருமதி. சுபஸ்ரீ இருக்கிறார்கள். தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி திரு. வி. விஜய் வெங்கடேசன் அளித்த நேர்காணலின் போது அவர் கூறியதாவது,
”நிறுவனங்களுக்குத் தேவையான வெளித்திறன் வழங்கும் நிறுவனமாக எங்கள் நிறுவனத்தைக் கட்டமைத்து இருக்கிறோம். முழுநேரப் பணியாளர்கள் தேவைப்படாத, ஆனால் பொறுப்புடன் செய்து தர வேண்டிய பணிகளைச் செய்து தருகிறோம். எங்கள் நிறுவனத்தைத் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இதற்குள்ளாகவே தமிழ்நாடு முழுவதும் நாற்பது நிலையான வாடிக்கையாளர்களைப் பெற்று இருக்கிறோம். இந்த வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்து வருகிறது. தற்போது எங்களிடம் முழு நேர, பகுதி நேர பணியாளர்களாக மொத்தம் நூற்று எண்பது பேர்கள் உள்ளார்கள்.
மனிதவள மேலாண்மை மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்று இருந்த நான் அது தொடர்பான பணியைத் தேடிக்கொண்டு இருந்த போது, ஒரு வங்கியில் ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் தொடர்பான மேற் பார்வைப் பணி கிடைத்தது. அதன் பிறகு, ராயல் பாங்க் ஆஃப் சர்வீஸ், பாங்க் ஆஃப் டோக்கியோ உட்பட பல வங்கிகளில் எச்ஆர் மற்றும் ஃபெசிலிட்டி மேலாண்மை (Fecility management) பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றினேன்.
நல்ல வேலை என்பதால் நல்ல சம்பளம் வாங்கினேன். சுபஸ்ரீ என்ற வாழ்விணையரும் கிடைத்தார். 1997முதல் 2013 வரை இதே வேலையைச் செய்தாகி விட்டது. நல்ல அனுபவமும் கிடைத்து விட்டது. இதற்கு அடுத்து என்ன? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. நான் ஏன் தனியாக நிறுவனம் தொடங்கக் கூடாது? என்ற அடுத்த கேள்வியும் எழுந்தது.
நன்கு சிந்தித்த பிறகு, என் மனைவியிடம் கலந்து ஆலோசித்தேன். பெற்றோரிடமும் இது பற்றி கலந்து பேசினேன். நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டினார் கள். சொந்தமாக தொழில் தொடங்குவது பற்றி நிதானமாக சிந்தித்து தொடங்கச் சொன்னார்கள்.
தொழிலில் நல்ல அனுபவம் பெற்று விட்டேன்; தேவையான முதலீடு இருக்கிறது; சந்தைப்படுத்தும் திறமையும் இருக்கிறது; நெருக்கடிகளை சமாளிக்கும் ஆற்றல் இருக்கிறது..- இப்படி என்னிடம் உள்ள சாதகமானவற்றை பட்டிய லிட்டேன். எதிர்மறையானவற்றையும் பட்டியலிட்டேன்.
தொழிலைத் தொடங்குவதற்கான நேர்மறையான செய்திகளே அதிகம் இருந்தன. இவற்றை எல்லாம் கூறி என் மனைவியிடம் பேசியபோது, அவர், தொடங்குமாறு உற்சாகம் ஊட்டினார். தானும் தொழிலில் உதவுவதாக உறுதி அளித்தார்.
நிறுவனத்தை சென்னையின் மத்திய பகுதியான தியாகராயர் நகரில் தொடங்கி னோம். தொடக்கத்தில் நான், என் மனைவி மற்றும் இன்னொருவர் என மூன்று பேர்தான் பணியாளர்கள்.
முதல் மூன்று மாதங்களில் வாடிக்கையாளர்கள் யாரும் கிடைக்க வில்லை. ஆனால், இந்த மூன்று மாதங்களில் நான், வாடிக்கையாளர் களைப் பெற விசிட்டிங் கார்டுகளுடன் அலைந்த போது சந்தித்த எந்த நிறுவனமும் எனக்கு தரமாட்டேன் என்று சொல்லவில்லை. கொஞ்சம் பொறுங்கள் என்றுதான் சொன்னார்கள்.
அந்த சொற்களின் வலிமையை உணர்ந்து இருந்தேன். நான் நினைத்தது மாதிரி அடுத்தடுத்த மாதங்களில் ஒன்றிரண்டு வங்கிகள் வாடிக்கையாளர்களாக வரத் தொடங்கின. அப்போது, என் மனதில் இருந்தது எல்லாம் இவர்களுக்கு சிறப்பான சேவையைத் தந்து பாராட்டு பெற வேண்டும் என்பது தான். அவர்கள் தரும் பணத்தைப் பற்றி பெரிதாக எண்ணவில்லை.
என்னுடைய பணிகள் அவர்களுக்கு மனநிறைவைத் தருவதுதான், அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதை உணர்ந்து அவர்கள் தந்த பணிகளை அவர்கள் மகிழும்படி செய்து கொடுத்தேன். இப்போது, தமிழ்நாடு முழுவதும் வங்கிகள், அப்பார்ட் மென்ட்கள், தூதரகங்கள், மருத்துவ மனைகள், பன்னாட்டு நிறுவனங்கள் என்று எங்கள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நாங்கள் செய்து கொடுக்கும் பணிகளில் எங்களுக்கு சவாலாக இருப்பது ஹவுஸ் கீப்பிங் எனப்படும் தூய்மைப் பணிதான். அலுவலங்களில் மேற்கொள்ளும் இத்தகைய பணிகளுக்கு ஆண்கள்தான் பொருத்தமாக இருப்பார் கள் என்பது இத்துறையில் உள்ளவர் களின் பொதுவான நம்பிக்கை. ஆனால் ஆண் பணியாளர்கள் அவ்வளவாக கிடைப்பதில்லை. அதனால், பெண்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து ஹவுஸ் கீப்பிங் பணிகளில் ஈடுபடுத்தினேன்.
என்ன வியப்பு? ஆண்களை விட சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்களின் பொறுமையான, நேர்த்தியான வேலை யால் எங்கள் நிறுவனத்திற்கு நல்ல பெயர் கிடைத்தது.
அதே நேரத்தில் கோயமுத்தூர் மற்றும் சேலம் பகுதிகளில் அலுவலக தூய்மைப் பணிகளுக்கு ஆண்களும் வர மாட்டார் கள், பெண்களும் வர மாட்டார்கள். மற்ற நாடுகளில் தொழிலை வைத்து யாரும் கவுரவம் பாராட்டுவது கிடையாது. எந்த தொழிலை யார் செய்தாலும் ஒரே மாதிரியாக எண்ணும் மனப்போக்கு அங்கெல்லாம் இருக்கிறது. இங்கு இன்னும் அந்த மனநிலை வரவில்லை. இதனால் ஹவுஸ் கீப்பிங்கிற்கு வர மறுத்து விடுவார்கள்.
அவர்களிடம் இன்றைய நவீன காலத்தில் அனைத்துக்குமே எந்திரங்கள், கருவிகள் இருக்கின்றன. எளிதில் செய்யலாம் என்று எடுத்துக் கூறினாலும் அசைந்து கொடுப்பதாக இல்லை. சம்பளம் குறைவாக இருக்கிறது, அதனால் வர தயக்கம் என்று கூறினால் கூட பரவாயில்லை. தூய்மைப் படுத்தும் பணியை கவுரவக் குறைச்சல் என்று எண்ணும் மனநிலை மாற வேண்டும். இதற்கெல்லாம் அண்ணல் காந்தியடிகளே வழி காட்டி இருக்கிறார்.
அந்த மாதிரியான இடங்களுக்கு வேறு மாவட்டங்களில் இருந்துதான் ஆட்களை அழைத்துச் செல்கிறோம். அடுத்ததாக, செக்யூரிட்டி பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதிலும் சிக்கல் இருக்கிறது. இந்த பணிக்கு வெளி மாநில ஆட்கள் கிடைத்தாலும் அவர்களை அமர்த்த முடியாது. காரணம், அரசு மற்றும் காவல்துறை அனுமதி பெற்ற பாதுகாவலர் களைத்தான் கேட்கின்றனர். செக்யூரிட்டி பணியாளர்களைத் தேர்வு செய்து கொடுக்க என்று தனியாக ஒரு நிறுவனத்தை நடத்த முடியாது என்பதால் அரசு அனுமதி பெற்ற செக்யூரிட்டி நிறுவனங்களிடம் இருந்து ஆட்களை ஓப்பந்த அடிப்படையில் எடுத்துக் கொடுக்கிறேன்.
அப்பார்ட்மென்ட்கள் எனப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்பவர் களுக்கான பெரும்பாலான உதவிகளை செய்து கொடுப்பதில் தனிப் பெயர் பெற்று உள்ளோம். இருபத்து நான்கு மணி நேரமும் அவர்கள் கேட்கும் பணிகளைச் செய்து கொடுப்போம். அவர்களின் தேவைகளை நிறைவேற்று வதில் நாங்கள் தயக்கம் காட்டுவது இல்லை.
சான்றாக, அந்த குடியிருப்பில் உள்ள ஒருவர், ”மின்சார கட்டணம் அதிகமாக இருப்பது போல இருக்கிறது. அதற்கான காரணத்தை கேட்டு சொல்ல முடியுமா?” என்று கேட்டால், உடனே எங்கள் அலுவலகத்தில் இருந்து ஒருவரை மின்வாரிய அலுவலகத்துக்கு அனுப்பி அதற்கான தீர்வு தருவோம். ஒருவருக்கு தண்ணீர்க் குழாய் கசிவு அல்லது அடைப்பு என்றால், அவர் நடு இரவில் அழைத்தாலும் சென்று செய்து தர ஒரு பிரிவை வைத்து இருக்கிறோம். ஊழியர்களும், ஒப்பந்தப் பணியாளர் களும் எந்த வகையிலும் முகம் சுளிக் காமல் வேலை செய்து கொடுப்பார்கள்.
அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொறுத்த வரையில் செக்யூரிட்டி, தூய்மைப் பணிகள், பிளம்பிங், வீட்டு வேலைக்கான ஆட்கள் தருதல் அனைத்தையும் செய்து கொடுக்கிறோம். இவற்றைத் தவிர பெயின்ட் அடித்துத் தருதல், சிறு கட்டுமானப் பணிகளையும் செய்து கொடுக்கிறோம். அப்பார்ட் மென்ட் பணிகளுக்கு ஒரு மாதத்திற்கு இவ்வளவு என்று ஒரு தொகையை அவர்களின் சங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்வோம். மற்ற பணிகளுக்கு தனியாக கட்டணம் பேசிக் கொள்வோம்.
இப்போது, பணியாளர் கள் அதிக சம்பளம் கேட்கிறார்கள். ஆனால், அதற் கேற்ற வகையில் எங்களுக்கு கட்டணம் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. ஒரு சில அப்பார்ட்மென்டில் கேட்ட தொகை கிடைத்து விடும். சில இடங்களில் கிடைக்காது. வெளிமாநில ஆட்கள் குறைவான சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், குடியிருப்பில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் பாதுகாப்பு தொடர் பான அச்சம் காரணமாக அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. வேலைக்கு வருபவர்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை என அனைத்து ஆதாரங்களையும் கேட்கிறார்கள். அப்படி உள்ளவர்களை மட்டுமே வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். அதனால், தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களை மட்டுமே தேர்ந்து எடுக்கிறோம்.
எங்கள் நிறுவனத்தின் மேலாண்மைப்
பணிகளை மூன்று பேர்களிடம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன். இத் துறையில் பதினைந்து ஆண்டுகள் அனுபவம் உள்ள திரு. ராஜா, அவருக்கு உதவியாக திரு. கார்த்திக், இருவரும் மேலாண்மைப் பணிகள் அனைத்தையும் கவனித்துக் கொள்கின்றனர். மனிதவளம் சார்ந்த பணிகளை திரு. கிதியோன் பார்த்துக் கொள்கிறார். இவர்கள்தான் சென்னை, மதுரை, சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, பெங்களூர் என அனைத்து நகரங்களிலும் உள்ள பணி யாட்களை பார்த்துக் கொள்கின்றனர். அலுவலகப் பணிகளில் என்னுடைய மனைவி திருமதி. சுபஸ்ரீ பெரிய அளவில் உதவியாக இருக்கிறார்.
வரும் காலத்தில் ரியல்எஸ்டேட் துறையிலும் ஈடுபட இருக்கிறோம்,” என்றார், திரு. விஜய் வெங்கடேசன். (98403 78053)
-குறளமுதன்