நீர் சுத்திகரிப்பு ஆலை தொடர்பான பல்வேறு தொழில் நுட்பங்களை நன்கு அறிந்தவர் திரு. ஜி. சண்முகம். சிங்கப்பூரில் உள்ள ஒரு பெரிய நீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அதைத் தொடர்ந்து தமிழகம் திரும்பி சுமார் ஆறு ஆண்டுகள் காலம் இத்துறை சார்ந்த பிரபல நிறுவனங்களில் பணிபுரிந்து தம் அனுபவத்தை மேலும் வளர்த்துக் கொண்டவர். பன்னிரெண்டு ஆண்டுகள் அனுபவத்திற்குப் பிறகு சொந்த நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.இவருடைய குளோபல் என்விரோ சிஸ்டம்ஸ் (Global Enviro Systems) என்ற நிறுவனம் கடந்த 2014 -ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம், சென்னை, பெரம்பூருக்கு அருகே உள்ள பெரியார் நகரில் உள்ளது. ‘வளர்தொழில்’ இதழுக்காக அவருடைய அலுவலகம் சென்று அவரை சந்தித்தோம். தான் கடந்து வந்த பாதையை மகிழ்ச்சியுடன் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய பேட்டியிலிருந்து…
“நான் பிறந்து வளர்ந்தது, சென்னையில் உள்ள பெரம்பூர். அங்கு மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக்கில், மெக்கானிக் பாடத்தை முதன்மையாக எடுத்துப் படித்து டிப்ளமோ முடித்தேன்.
எளிமையான வாழ்க்கை முறையையும், தொழில் கல்வியையும் எனக்குக் கொடுத்த என் பெற்றோர் திரு. கோவிந்தராஜ் – மணிமேகலை தம்பதியர் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
அங்கிருந்து வந்தாலும் நாம் ஒரு சராசரியாக வாழ்ந்து மறைந்து விடக்கூடாது என்று என் மனதுக்குள் உறுதி பூண்டேன். இந்த குணம் எனக்குள் ஒரு இலட்சிய வேட்கையை வளர்த்தது. . ஒரு ஆற்றல் வாய்ந்த மனிதராகத் திகழ வேண்டும், உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று வர வேண்டும் என்று கனவு கண்டேன்.
இந்த உந்துதல்தான், டிப்ளமோ முடித்ததும் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்ய வைத்தது, ஓர் ஏஜென்சி மூலம் 1999 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். அது உலகளவில் புகழ்பெற்ற நீர் சுத்திகரிப்பு ஆலை ஆகும். அந்த நிறுவனத்தில் சாதாரண ஊழியராக சேர்ந்து பொறியாளர் ஆக உயர்ந்து , படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை வகித்தேன்.
அந்நிறுவனம்,பல்வேறு நாடுகளுக்கு கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரித்துக் கொடுக்கிறது. பல நாடுகளில் அதற்கு ஆலைகளும் உள்ளன. அந்நிறுவனத்தில் பணியாற்றியது ஒரு மறக்க முடியாத அனுபவம் ஆகும். கடல்நீரை மற்றும் ரசாயன தன்மை மிகுந்த, உவர்ப்பு சுவை கொண்ட நிலத்தடி நீரை குடிப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றும் தொழில்நுட்ப வழிமுறைகள் அனைத்தையும் அங்கு கற்றுக் கொண்டேன்.
என்னிடம் வழங்கப்படும் எந்த ஒரு பணியையும் சிறப்பாக செய்து முடிக்காமல் விட மாட்டேன். இரண்டு மூன்று நாட்கள் தூங்காமல் இருந்து கூட அந்தப் பணியை முடித்துக் கொடுத்து விட்டுதான் மற்ற வேலையைப் பார்ப்பேன். இந்த குணத்தால் நிர்வாகத்தின் நம்பிக்கைக்கு உரிய ஊழியர் ஆனேன் என் சீரிய பணியை பாராட்டும் வகையில் அந்த நிறுவனம் ‘மிகச் சிறந்த ஊழியர்’ என்ற விருதை எனக்கு வழங்கி பாராட்டியது.
அங்கு பணியில் சேர்ந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அந்த நிறுவனத்திடம் விடை பெற்று 2006 ஆம் ஆண்டு தமிழகம் திரும்பினேன். 2014 வரை மேலும் ஆறு ஆண்டுகள் இதே துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றினேன். தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனத்திலும் பணி புரிந்தேன
2007-ம் ஆண்டு எனக்குத் திருமணம் நடைபெற்றது. திருமதி. சத்யா என் வாழ்விணையர் ஆனார். எம்.ஏ., எம்.ஃபில், பட்டதாரியான அவர் ஒரு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
என்னுடைய பணித்திறனை கவனித்து வந்த அவர் ஒரு நாள் என்னிடம், “கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரித்துக் கொடுக்கும் நீர் சுத்திகரிப்பு ஆலை தொடங்குவதற்கான அத்தனை தொழில்நுட்ப அறிவும் உங்களிடம் உள்ளது. நிலத்தடி நீரி எத்தகைய வேதிப் பொருட்கள், மற்றும் உப்புத் தன்மை இருந்தாலும் அதை சுத்திகரிக்க என்ன செய்ய வேண்டும், என்ற தொழில்நுட்ப அறிவும் உங்களிடம் உள்ளது. அப்படி இருக்கும்போது நீங்கள் சொந்தமாக இத்துறை சார்ந்த ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்தலாமே” என்று ஆலோசனை கூறினார்.
அதுவரை அந்த நினைப்பே இல்லாமல் ஒரு பொறியாளராக பணியாற்றி வந்தேன். அவர் சொன்னதைப் பற்றி சிந்தித்தேன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கும் இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று அங்கு செயல்பட்டு வரும் நீர் சுத்திகரிப்பு ஆலைகளைப் பார்த்து வந்த அனுபவம் எனக்கு இருந்ததாலும், வாழ்விணையர் என் சிந்தனையைத் தூண்டி விட்டதாலும் சொந்தத் தொழில் தொடங்குவது குறித்து சிந்திக்கத் தொடங்கினேன்.
நீர் சுத்திகரிப்புத் தொழிலுக்கான தேவை அதிகம் இருப்பதை உணர்ந்து, 2014 டிசம்பர் மாதம் குளோபல் என்வைரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி நிர்வகிக்கத் தொடங்கினேன்.
நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் அனைத் துத் துறைகளிலும் பணியாற்றி அனுபவம் நிறைந்த ஒரு தொழில்நுட்ப ஊழியர் நான். அதனால் இந்த தொழில் தொடர்பான பணிகளை என்னால் சிறப்பாக மேற்கொள்ள முடியும். இதனால் எங்கள் நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு எங்களால் முழுமையான மனநிறைவைத் தர முடிகிறது.
இத்துறை சார்ந்த பெரு நிறுவனங்கள் பலவும் டிசைன் ஆபரேஷன், சர்வீஸ், ஆலோசனை போன்ற பணிகளுக்கு வெளி யில் இருந்து பொறியாளர்களையும், தொழில் நுட்ப வல்லுநர்களையும் அவ்வப் போது வரவழைப்பதையும், கொடுத்த வேலையை சிறப்பாக முடித்துக் கொடுக்கும் அவர்களுக்கு நல்ல தொகை வழங்கப்படு வதையும் நான் அறிந்தவன். இப்பணிகளை சிறப்பாக செய்து கொடுக்கும் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு நல்ல கிராக்கி எப்போதும் உண்டு. என்பதை உணர்ந்தவன்.
இந்த அடிப்படையில் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம் பற்றிய தகவல்களை, நான் ஏற்கெனவே வேலை பார்த்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், மேலா ளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்தேன். அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. ஆலைகள் நிறுவுதல், பழுது நீக்குதல், ஆலோசனைப் பணிகள் ஆகியவற்றை செய்து கொடுக்கும்படி பல நிறுவனங்கள் அழைத்தன.
தொடக்கத்தில் கிடைத்த பணிகளை நானே முன்னின்று செய்தேன். படிப் படியாக ஊழியர்களை அப்பணிக்குத் தேவையான பயிற்சி அளித்து உருவாக் கினேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் நிறுவனம் படிப்படியாக வளர்ந்து எதிர்பார்த்த இலக்கை எட்டியது.
எங்களுக்கு கிடைக்கும் ஆர்டர்களை திறம்படச் செய்ய, ஆலோசனை குழு மற்றும் சிறப்பாக செய்து முடிக்கும் குழு ஆகியவை உள்ளன. எங்கள் நிறுவனத்தின் வேகமாக வளர்ச்சிக்கு சீரிய பங்களிப்பை வழங்கிய தினேஷ், மகாராஜா, சிந்துஜா, முரளி, தனுசு ஆகிய ஐந்து பணியாளர் களையும் எப்போதும் பக்கபலமாக நின்று உதவும் நண்பர் பிரகாஷையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.
தற்போது 170 பேர் எங்களிடம் பணி புரிகின்றனர்,
என் மனைவி திருமதி. சத்யா, கல்லூரி ஆசிரியர் பணியிலிருந்து விலகி எங்கள் நிறுவனத்தின் நிதி மற்றும் நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு ஆறு கோடி ரூபாய் விற்றுமுதல் (டர்ன் ஓவர்) என்ற அளவிற்கு நிறுவனத்தின் வணிகம் இருந்தது.
சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இத்தருணத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், எங்கு பணி புரிந்தாலும், அது எந்த வேலையாக இருந்தாலும் சிறப்பாக செய்து முடிக்கப் பழகுங்கள். அந்த குணம் பின்னாளில் உங்களுக்கு பெரும் பயன்களைத் தரும். வாழ்க்கையில் ஏற்றத்தைக் கொடுக்கும். இது நான் அனுபவத்தில் கண்டது.
நடுவண் அரசு நிறுவனமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் எண்ணூரில் உள்ளது. அந்நிறுவனத்திற்கும் தேவைப்படும் பணிகளை செய்து கொடுக்கிறோம்.
கடந்த ஆண்டு முதல் சமுத்ரா (Samudra) என்ற பெயரில் மினரல் வாட்டரையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இதற்கான தொழிற்சாலை சென்னை அருகே படப்பையில் உள்ளது. அரை லிட்டர் முதல் பத்து லிட்டர் வரையிலான பாட்டில்/கேன்களில் அடைத்து விற்கிறோம்.
எதிர்காலத்தில், கடல் நீரை குடிநீராக்கும் மற்றும் நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றும் செயல்பாட்டுக்கும் மிகுந்த தேவை இருக்கும். அதற்கேற்ப திட்டங்களை வகுத்து வருகிறோம். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் பயணிப்போம்.
நம் நாட்டில் ஆயிரக்கணக்கான அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீர் பயன்பாடு தவிர மற்ற அனைத்துக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நான் தூத்துக்குடியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது உடல் எடையைக் குறைக்க அதிகாலையில் ஓடத் தொடங் கினேன். அது பழக்கமாகி, தற்போது ராரத்தான் ஓட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன்.
முதலில் 5 கிலோ மீட்டர் தொலைவு ஓடினேன்.அண்மையில் கர்நாடகாவில் நடைபெற்ற ஓட்டத்தில் பங்கேற்று 110 கிலோமீட்டர் ஓடினேன். இந்த ஓட்டங் களில் போட்டியாளர் இல்லை. இறுதி வரை ஓடி முடிப்பவராக (திவீஸீவீsலீமீக்ஷீ) திகழ வேண்டும். விரைவில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடைபெறும் மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்க உள்ளேன்.
இப்பயிற்சிக்காக தினமும் அதிகாலையில் எழுந்து விடுவேன். அதிகாலை எழும் பழக்கத்தை என் அம்மா வழிப் பாட்டி கோவிந்தம்மாள் கற்றுக் கொடுத்தார். அவர் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து தயிர் வியாபாரத்திற்கு தயாராகிக் கொண்டு இருப்பார். தயிர்ப் பானையை சுமந்தபடி சூரியன் உதிப்பதற்குள் பல தெருக்களை சுற்றி வந்து விடுவார்.
காலை ஏழு மணிக்கு ஓட்டப் பயிற்சி முடிந்ததும் அன்றைய நாளில் என்ன பணிகள் செய்யப்பட வேண்டுமோ அவை பற்றி முடிவு செய்து,, யாருக்கு என்ன பணிகள் போன்ற விவரங்களை காலை 9.30 மணிக்குள் வாட்சாப் மூலம் பணியாளர் களுக்கு அனுப்பி விடுவேன்” என்கிறார் திரு. ஜி. சண்முகம் (7299974101)
– ம. வி. ராஜதுரை