பருப்பு உடைப்புத் தொழில் தமிழ்நாட்டிலேயே வட சென்னையில்தான் அதிகம் நடைபெறுகிறது. இரண்டு மூன்று தலைமுறைகளாக இந்த தொழிலைச் செய்து வளர்ந்து வரும் தொழில் முனைவோர் குடும்பங்கள் ஏராளமாக இங்கே இருக்கின்றன. அத்தகைய குடும்பம் ஒன்றைச் சார்ந்தவர் திரு. டி. ஞானசேகரன். வர்ஷினி தால் மில் என்ற பெயரில் தனது பருப்பு உடைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பருப்பு உடைப்பதற்குத் தேவையான புதுமையான எந்திரங்கள், பெரிய களம் போன்றவற்றை இவர் நிறுவனம் பெற்று இருக்கிறது. அவரிடம் பருப்பு உடைப்புத் தொழில் பற்றிப் பேட்டி கண்டபோது,
”பொதுவாக முழு உளுந்து, முழு துவரை, முழு பச்சைப்பருப்பு போன்ற பருப்பு வகைகளை கொள்முதல் செய்து, அவற்றின் தோல் நீக்கி, முழு பருப்பாக அல்லது இரண்டாக உடைத்து மொத்த வணிகம் செய்கிறோம். இதற்கான ஹல்லிங் எந்திரங்கள், கல் நீக்கும் எந்திரங்கள், மூட்டை நிரப்பும் எந்திரங்கள் அத்தனையும் எங்களிடம் உள்ளன.
இந்த தொழிலை எங்கள் அப்பா தொடங்கி நல்ல வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்தார். என் படிப்பு முடிந்த உடன் நானும் இந்த தொழிலில் அவருக்குத் துணையாக இருந்து, பருப்பு உடைப்புத் தொழிலின் நுட்பங்களை அறிந்து கொண்டேன். இப்போது இன்னும் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறோம்.
பெரும்பாலும் வடசென்னையில் பருப்பு உடைக்கும் தொழிலில் இருப்பவர்கள் விருதுநகரைச் சேர்ந்தவர்கள். இங்கு வந்து முதன் முதலில் பருப்பு உடைக்கும் தொழிலில் ஈடுபட்டவர் ஒரு விருதுநகர்காரராக இருக்க வேண்டும். அவரைத் தொடர்ந்து நிறைய விருதுநகர்காரர்கள் இங்கு வந்து இந்த தொழிலில் ஈடுபட்டு இருக்க வேண்டும். பொதுவாகவே தெற்கு மாவட்ட மக்கள் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். பருப்பு உடைப்புத் தொழிலுக்கும் அதிக உழைப்பு தேவைப்படும். அத்தகைய உழைப்பு காரணமாகவே இங்கே பருப்பு உடைக்கும் தொழிலில் விருதுநகர்காரர்கள் சாதித்து வருகிறார்கள்.
அதே போல தங்களிடம் வேலை பார்ப்பவர்கள் அல்லது உறவினர்கள் சொந்தமாக பருப்பு உடைக்கும் மில் தொடங்கினால், இவர்கள் அவற்றைப் போட்டியாக கருதுவது இல்லை. அவர்கள் வளர்ச்சிக்கும் உதவும் மனம் இவர்களுக்கு இருந்தது. அதற்கேற்ப எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் அவர்களுக்கும் தொழிலைக் கற்றுக் கொடுப்பார்கள். எந்திரங்கள் வாங்கும் போதும் உரிய ஆலோசனைகளைத் தரத் தயங்க மாட்டார்கள்.
என் அப்பா, நான் இந்த தொழிலுக்கு வருவதை விரும்பினார். இன்றைக்கு சில வணிகர்கள், உரிய முறையில் தங்கள் மகன், மகள்களுக்கு தங்கள் தொழிலை அறிமுகப்படுத்துவது இல்லை. இதனால் அவர்கள் பிள்ளைகள் படித்து விட்டு வேலைக்கு போக விரும்புகிறார்கள். தொழில் அதிபர்களாக இருப்பவர்கள், தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ தங்கள் தொழிலை உரிய காலத்தில் அறிமுகப்படுத்தி அதில் பழக்கத் தொடங்கி விட வேண்டும். அப்படித்தான் என் அப்பா செய்தார். தொழில் தொடர்பான அனைத்தையும் எனக்குக் கற்றுக் கொடுத்தார். அனைத்து வேலைகளிலும் என்னை ஈடுபடுத்தினார். வெளி மாநிலங்களுக்கு, வெளிநாடுகளுக்கு கொள்முதல் செய்யச் செல்லும்போது என்னையும் உடன் அழைத்துச் சென்றார். என் அப்பாவின் இந்த அணுகுமுறை காரணமாக, தொழிலை நன்றாக கற்றுக் கொள்ள முடிந்தது.
துவரை, உளுந்து, பச்சைப்பயிறு ஆகியவை தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், குஜராத், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் விளைகின்றன. நாங்கள் ஆந்திரா, மகாராஷ்டிராவில் இருந்து அதிக அளவில் பருப்பு வகைகளை கொள்முதல் செய்கிறோம். மேலும் தான்சானியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியும் செய்கிறோம். இந்தியாவில் விளையும் பருப்பு வகைகளே அதிக தரத்துடன் விளங்குகின்றன.
நாங்கள் சில்லரை விற்பனை செய்வது இல்லை. பாக்கெட் போட்டும் விற்பனை செய்வது இல்லை. எங்கள் வாடிக்கையாளர்கள், மொத்த விறைபனையாளர்கள்தான். பிராண்ட் பெயர்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. நாங்கள் உடைக்கப்பட்ட பருப்புகளை எந்த வித பிராண்ட் பெயர்களும் இல்லாமல் விற்பனை செய்வதால் எங்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது.
என்னுடைய அப்பாவுக்குப் பிறகு சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக இந்த தொழிலைச் செய்து வருகிறேன். எங்கள் நிறுவனம் நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த தொழில் உணவு சார்ந்த தொழில் என்பதால் தொடர் வளர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், தேவையும் உயர்ந்த கொண்டேதான் இருக்கும்.
எனக்கு மூன்று மகள்கள். அனைவரும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை படிப்படியாக இந்த தொழிலில் ஈடுபடுத்தும் எண்ணம் இருக்கிறது. அவர்கள் ஆர்வம் காட்டினால், பெரிய தொழிலதிபர்களாக அவர்கள் உருவெடுக்க வாய்ப்பு இருக்கிறது. எல்லா தொழில்களிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதிக்கும் காலம் இது. என் மகள்களும் எதிர்காலத்தில் பெரிய அளவில் வளர்ந்து சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.
-ரூபிகா