இதுவரையில் ஒரு சிறுதொழில் நிறுவனம், தான் உற்பத்தி செய்யும் பொருளைக் கொண்டு ஈட்டும் விற்பனை வருமானமானது ஆண்டு ஒன்றிற்கு ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் இந்த சரக்கு சேவை வரியின் கீழான கலவை திட்டத்தினை (Composition Scheme) தெரிவு செய்து, பல்வேறு வரி விகிதங்களுக்கு பதிலாக அவைகளுள் ஏதேனும் ஒரு வரி விகிதத்தை மட்டும் அனைத்திற்கும் பின்பற்றி வரி செலுத்தினால் போதும்.
அவ்வாறே வரி செலுத்தியதற்கான அறிக்கை அரசிற்கு காலாண்டிற்கு ஒருமுறை அனுப்பினால் போதும் என்ற வசதி பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு மட்டும் இருந்து வந்தது. இதனால் சேவை வழங்குபவர்கள், இந்த ஜிஎஸ்டி-யின் கீழான கலவை திட்டத்தினை தெரிவு செய்ய முடியாத நிலை இருந்தது.
கடந்த 01.04.2019 முதல் பொருட்களின் உற்பத்தி மட்டுமல்லாது பல்வேறு சேவைகளை வழங்கிடும் சேவையளர்களும் விருப்பபட்டால் காம்போசிஷன் திட்டத்தை தெரிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். காம்போசிஷன் திட்டம் என்றால் என்ன?
சிறுதொழில் நிறுவனங்களில் பொருட்களை உற்பத்தி செய்வது, அந்த பொருட்களை கட்டுகளாக கட்டுவது (பேக்கிங்), அந்த கட்டுகளை நுகர்வோருக்கு கொண்டு செல்வது என்றவாறு ஒரே வருமான வரி கணக்கு எண்ணின் கீழ் பணிகளை தனித்தனியாக செய்வார்கள்.
அது போன்றே கணினி மென்பொருள் உருவாக்குவது, அதனை பயனாளரின் கணினியில் நிறுவுகை செய்வது, பின்னர் அந்த பயன்பாட்டில் ஆண்டு முழுவதும் சிக்கல் எழுந்தால் சரி செய்து பராமரிப்பது என ஒரே வருமானவரி கணக்கு எண்ணின் கீழ் பணிகளை தனித் தனியாக செய்வார்கள்.
அதனைத் தொடர்ந்து அந்தந்த பணிகளுக்கென தனித்தனி வரி விகிதங்களில் சரக்கு சேவைவரி அரசிற்கு செலுத்த வேண்டியுள்ளது. இதனால் அதிக காலவிரயமும் பொருட் செலவுகளும் ஏற்படுகின்றன ஒரு சிறுதொழில் நிறுவனம் தாம் வழங்கிடும் சேவைகளினால் ஈட்டும் விற்பனை வருமானத்தின் அடிப்படையில் காம்போசிஷன் திட்டத்தினை தெரிவு செய்து, பல வரி விகிதங்களுக்கு பதிலாக ஒரேயொரு விகிதத்தை மட்டும் அனைத்திற்கும் பின்பற்றி வரி செலுத்தினால் போதும்.
இந்த வசதியின் படி சேவை வழங்குவதற்காக தனித்தனியாக விற்பனை பட்டியல் தயார்செய்வதற்கு பதிலாக சேவையை வழங்கியதற்கான பட்டியலை மட்டும் தயார் செய்து வழங்கினால் போதும் மேலும் அந்த பட்டியலில் ‘taxable person paying tax in terms of notification No. 2/2019-Central Tax (Rate) dated 07.03.2019, not eligible to collect tax on supplies’. என்ற வரியை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்
பொதுவாக இந்த வசதியை தெரிவு செய்யும் சேவை வழங்குபவர் தான் வழங்கும் சேவைகளுக்கு 6% மட்டும் வரி செலுத்தினால் போதும். உணவு விடுதி, தங்கும் விடுதி ஆகிய சேவைகளை வழங்குபவர்கள் 5% வரி செலுத்தினால் போதும் இதற்கான அறிக்கை சமர்ப்பிப்பதற்காக படிவம் எண் GST CMP- 01 அல்லதுGST CMP- 02 ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
-முனைவர் ச. குப்பன்