தொழில் செய்யும் பெரும்பாலானோர் தங்கள் தொழில் பற்றிய தகவல்களை மற்றவர்கள் தெரிந்து கொள்ள, வலைத்தளம் ஒன்று உருவாக்கி இருப்பார்கள். அதில் தொழில் பற்றிய செய்திகள், படங்கள், விலைப் பட்டியல், முகவரி என்று நிறைய தகவல்கள் இருக்கும். ஒருவர் வலைதள முகவரியை நேரிடையாக கொடுத்து வலைத்தளத்தை பார்க்கலாம்.
இன்னும் சிலர் வலைதள முகவரி தெரியாமால் பொருட்கள் பெயர் கொண்டு கூகுளில் தேடுவார்கள். அப்பொழுது அந்த பொருட்களை விற்பனை செய்யும் பல வலைத்தளம் கூகுள் முதல் பக்கத்தில் வரும் அதில் நம் வலைத்தளம் வரலாம் அல்லது வராமலும் போகலாம் அதற்கு சில காரணங்கள் உண்டு.
நம் தொழில் வலைத்தளம் கூகுள் முதல் பக்கத்தில் வரவில்லை என்றால் நம் போட்டி நிறுவன வலைத்தளத்திற்கு அந்த வாடிக்கையாளர்கள் சென்று விட வாய்ப்பு உண்டு. கூகுள் முதல் பக்கத்திற்கு நம் வலைத்தளம் வரவேண்டும் என்றால் அதனை சரியான சொற்கள் கொண்டு உருவாக்க வேண்டும். இவற்றை எஸ்இஓ ((SEO) Search Engine Optimization) என்று அழைப்பார்கள். இதில் On page SEO மற்றும் Off Page SEO என்று இரண்டு வகை உண்டு. அதற்கு முன்பு கூகுள் எப்படி இயங்குகிறது என்பதை பார்ப்போம்.
கூகுள் தனக்கென்று ஒரு அல்காரிதம் (Algorithm) முறையை வைத்துக் கொண்டு தன்னிடம் தேடும் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை வழங்குகிறது. கூகுளின் இந்த அல்காரிதம் முறை யாருக்கும் தெரியாது. அப்படி மக்களுக்கு தெரியவந்தால் உடனே அல்காரிதம் முறையை மாற்றி விடும். ஒவ்வொன்றுக்கும் ஹம்மிங் பறவை பாண்டா, என்று பெயர் வைக்கப்படுகிறது.
கூகுள் ஆண்ட்ராய்டுக்கு லாலிபாப், கிட்காட் போன்ற பெயர் போல் அல்காரிதமுக்கு பெயர் வைக்கப் படுகிறது. கூகுள் எப்படி தகவல்களை எடுக்கிறது என்று சில வழிமுறைகளை வைத்து இன்று பரவலாக பின்பற்றப்படுகிறது. அவற்றை கொண்டே எஸ்இஓ செய்யப்படுகிறது.
நம் வலைத்தளத்திற்கு நிறைய வாடிக்கையாளர்கள் வரவேண்டும் என்றால் நம் வலைத்தளம் கூகுள் தேடுபொறியில் முதல் பக்கத்தில் வரவேண்டும். பொருள், சேவை, படிப்பு, மருத்துவம் என்று எது தொடர்பாக கூகுளில் தேடினாலும் நிறைய வலைத்தளம் நம் முன்பு காண்பிக்கும். அதில் முதல் நான்கு வலைத்தளம் கூகுள் வழியாக விளம்பரம் செய்தவர்களின் வலைத்தளம் ஆகும்.
இதன் தொடக்கத்தில் ஏடி (AD) என்று இருப்பதை பார்க்கலாம். அதற்கு அடுத்து வரும் வலைத்தளங்கள் ஆர்கானிக் வழியாக காண்பிக்கக் கூடியவை. ஆர்கானிக் வழி என்பது பணம் செலவழிக்காமல் நம் வலைத்தளத்தை காண்பிக்க வைப்பது ஆகும். (காண்க படம்-1)
அனைவராலும் பணம் செலுத்தி விளம்பரம் செய்வது கடினம். ஆனால் அவர்கள் ஆர்கானிக் (Organic Search) வழியாக தங்கள் வலைத்தளத்தை கூகுள் முதல் பக்கத்தில் வரவைக்க முடியும். இதற்கு எஸ்இஓ செய்ய வேண்டும். அவை கடினமான செயல் இல்லை சிறிது கவனித்து தெரிந்து கொண்டால் தொழில் செய்யும் அனைவரும் டிஜிட்டல் மார்கெட்டிங்க் வழியாக சந்தைப்படுத்தலாம். எஸ்இஓவில் இரண்டு வகை உண்டு என்று மேலே பார்த்தோம் அதில் ஆன் பேஜ் எஸ்இஓ பற்றி முதலில் பார்ப்போம்.
ஆன் பேஜ் எஸ்இஓ
ஒரு வலைத்தளத்தை பார்க்கும் பொழுது Ctrl+U என்று அழுத்தினால், புதிய விண்டோ ஒன்று திறக்கும் அதில் நிறைய எழுத்துக்கள், சொற்கள் இருப்பதை பார்க்கலாம். அவை எச்டிஎம்எல் என்ற வலைதள மொழியாகும். அனைவரும் இந்த மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. ஆனால் ஒரு சிலவற்றை மட்டும் தெரிந்து கொண்டு அதன்படி செய்தால் நம் வலைத்தளமும் கூகுள் முதல் பக்கத்தில் வரவைக்கலாம். சான்றாக நாம் தொழில் செய்வதற்கு ஒரு கடை/ஷோரூம் வைத்து இருப்போம். அங்கு வாடிக்கையார்கள் வந்து பார்க்கும் பொழுது அவர்களை ஈர்க்கும் வகையில் பொருட்களை அடிக்கி வைத்து இருப்போம். அதில் சிலவற்றை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். அந்த பொருட்களை பார்வைக்கு வைக்காமல் எங்கேயோ மூட்டை கட்டி வைத்த இருந்தால் விற்பனை செய்வது கடினமாகவும். இதே முறையை நம் வலைத்தளத்திற்கும் பின்பற்ற வேண்டும்.
இங்கு வலைத்தளம் என்பது கடையாகும். கடையில் பொருட்களை வாடிக்கையாளர் ஈர்க்கும் வகையில் அடிக்கி வைத்து இருப்பது போல், வலைத்தளத்தை கூகுள் தேடுவதற்கு ஏற்ற வகையில் உருவாக்க வேண்டும். ஒருவர் கூகுளில் பொருட்கள் பெயர் கொடுத்து தேடும் பொழுது கூகுள் நம் வலைதள எச்டிஎம்எல் மொழியில் தேடிப் பார்க்கும் அங்கு காணப்படவில்லை என்றால் வேறு எந்த வலைத்தளத்தில் இருக்கிறதோ அவற்றை தேடி வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கும்.
எஸ்இஓ மெட்டா டேக் (எச்டிஎம்எல் மொழி)
எஸ்இஓஎம்-இல் மெட்டா டேக் (meta tag) என்பது முக்கிய இடத்தை வகிக்கிறது இவற்றை கொண்டே நாம் எஸ்இஓ செய்யப் போகிறோம். மெட்டா டேக் என்பது எச்டிஎம்எல் மொழியாகும். இதில் Title, Keyword, Description இந்த மூன்றையும் நிச்சயம் நம் வலைத்தளத்தில் கொடுக்க வேண்டும். இது போல் நிறைய மெட்டா டேக் உண்டு அதில் எஸ்இஓ-க்கு ஏற்ற சில டேக் கொடுத்து வலைத்தளத்தை அமைக்க வேண்டும். இவற்றை உங்கள் வலைதள வடிவமைப்பவர்களிடம் தெரிவித்தால் செய்து கொடுப்பார்கள். அல்லது சிறிது முயற்சியில் நீங்களே செய்யலாம்.
கீவேர்ட் என்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் என்ன சொல் கொடுத்து கூகுளில் தேடுகிறார் என்பது நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் நம் தொழிலுக்கு என்ன விதமாக தேடுவார்கள் என்பதை நன்கு ஆராய்ந்து அதற்கே ஏற்றார் போல் கீவேர்ட் அமைக்க வேண்டும்.
“H1” to “H6” tag, “alt” tag, robots போன்ற சில டேக் தெரிந்து கொண்டு எஸ்இஓ அமைக்கலாம். மேலே குறிப்பிட்ட அனைத்தையும் பற்றி அடுத்து பகுதியில் பார்க்கலாம்.
ஆஃப் பேஜ் எஸ்இஓ
ஆஃப் பேஜ் எஸ்இஓ (on Page SEO) செய்யும் பொழுது நம் வலைத்தளத்திற்குள் செய்ய வேண்டும். ஆனால் ஆஃப் பேஜ் எஸ்இஓ என்பது நம் வலைத்தளத்தை தொடாமல் வெளியே செல்வதாகும். நம் வலைத்தளத்தை பற்றி பரவலாக பல இடங்களில் தெரியப்படுத்த வேண்டும். சான்றாக நம் கடையை பற்றி தெரிந்தவர்களிடம் சொல்லுவோம், சிறு கூட்டங்களில் நம் பொருட்களை தொடர்பாக பேசுவது, டெலிபோன் டைரக்டரியில் நம் தொழில் முகவரியை பதிவு செய்வது போல் நம் தொழில் வலைத்தளத்தை பரவலாக இணையத்தில் பதிவு செய்தால் அதை பார்க்கும் வாடிக்கையாளர்கள் நம் வலைத்தளத்திற்கு வர வாய்ப்பு உண்டு. இவைதான் ஆஃப் பேஜ் எஸ்இஓ ஆகும்.
என்னவெல்லாம் செய்யலாம்
நம் தொழிலை, பொருட்களை, சேவையை பற்றி வீடியோ எடுத்து யூடியூபில் (Youtube) வலைதள முகவரியுடன் பதிவேற்றலாம். பொருட்கள் பற்றிய படங்களை இன்ஸ்டாகிராம் (Instagram), பிண்ட்ரெஸ்ட் (Pintrest) போன்றவற்றில் தெரிவிக்கலாம். தொழில் தொடர்ப்பான கட்டுரைகளை டாக்குமென்ட பகிர்தல் www.issuu.com வழியாக வெளிப்படுத்தலாம். நம் தொழில் செய்லபாடுகளை பவர் பாயின்ட் www.slideshare.net வழியாக தெரிவிப்பது, தொழிலுக்கு என்று ஒரு www.blogger.com உருவாக்கி தொடர்ந்து, அதில் தொழிலை பற்றிய கட்டுரைகளை வெளியிடுவது,
எல்லோ பேஜஸ் (yellow pages) போல் நம் தொழில் தொடர்பான செய்திகளை www.flegoo.com போன்றவற்றில் வெளியிடுவது, இணையத்தில் கேள்வி பதிலுக்கு என்று நிறைய வலைத்தளங்கள் உண்டு அதில் நிறைய பேர் பல விதமான கேள்விகள் கேட்டு அதற்கு பதில்கள் பெறுவார்கள். அதனால் நம் தொழில் தகவல்களை www.quora.com என்ற வலைத்தளத்தில் தெரிவிக்கலாம்.
இவை அனைத்தும் நம் வலைத்தளத்தை தொடாமல் மற்ற இடங்களில் நம் தொழில், வலைத்தளம் பற்றி தெரிவிப்பது ஆகும். மேலே குறிப்பிட்ட அனைத்திலும் முடிந்தால் தினமும், அல்லது வாரம் இரண்டு முறையாவது செய்து வரவேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும் பொழுது நம் தொழில் பற்றிய தகவல்கள் இணையத்தில் பரவலாக காணப்படும்.
ஒரு வாடிக்கையாளர் கூகுளில் தேடும் பொழுது நம் வலைத்தளம் உடைய இந்த ஏதாவது ஒரு வலைத்தளம் அவர்கள் பார்வைக்கு வரும். அதன் வழியாக நம் வலைத்தளத்திற்கு வருவார்கள். இவையே ஆஃப் பேஜ் எஸ்இஓ ஆகும்.
ஆன் பேஜ் ஒரு முறை செய்தாலும் போதும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கலாம். ஆனால் ஆஃப் பேஜ் தொடர்ந்து செய்து வரவேண்டும்.
செழியன்.ஜா