ஆன்லைன் டுட்டோரியல்: இணையத்தைப் பயன்படுத்தி டுட்டோரியல் எனப்படும் தனிப் பயிற்சி வழங்கும் பணியில் பலர் ஈடுபட்டு உள்ளார்கள். இவர்கள் வழங்கும் பயிற்சியைப் பெற கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வாறு யாருக்காவது குறிப்பிட்ட துறைகளில் பயிற்சி வழங்கும் ஆற்றல் இருந்ததால் முயற்சித்துப் பார்க்கலாம். புதிய தொழில்நுட்பங்களை, இசை, நாட்டியம், ஓவியம், சமையல் போன்றவற்றை கற்க விரும்புகிறவர்களுக்கு கட்டணம் வாங்கிக் கொண்டு ஆன்லைனில் கற்றுத் தரலாம்.
அனிமேஷன்: அனிமேஷன் கற்று வைத்து இருப்பவர்கள், விளம்பரங்களை, காமிக்ஸ் கதைகளை உருவாக்குபவர்களுக்குத் தேவையான அனிமேஷன்களை உருவாக்கித் தரலாம். வீடியோ கதைகள், அறிவியல் விளக்கப் படங்களுக்கும் அனிமேஷன் தேவைப்படுகிறது. இதற்கு அனிமேஷன் தொடர்பான மென்பொருள்களை சிறப்பாக பயன்படுத்தத் தெரிந்து இருக்க வேண்டும். அதிக ஆற்றல் உள்ள கணினி ஒன்றும் தேவைப்படும்.
விளம்பரங்கள் உருவாக்கித் தருதல்: வாடிக்கையாளர்களைக் கவரும் அளவுக்கு விளம்பரங்களை உருவாக்க நல்ல கற்பனை மற்றும் படைப்பாற்றல் தேவை. இத்தகைய திறமைகள் உள்ளவர்கள் விளம்பரங்கள் உருவாக்கித் தரும் தொழிலைச் செய்யலாம். உள்ளூர் தொலைக் காட்சிகள் முதல் பெரிய தொலைக் காட்சிகளுக்கு வரை விளம்பரங்களைத் தர விரும்புகிறவர்கள்தான் உங்கள் வாடிக்கையாளர்கள்.
விளம்பர ஏஜென்சி: பெரும்பாலும் இதழ்களுக்கும், காட்சி ஊடகங்களுக்கும் விளம்பர முகவராக செயல்படும் ஒரு வாய்ப்பும் உள்ளது. இவர்களுக்கு இதழ் நிறுவனங்களும், தொலைக் காட்சி நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவு வர்த்தகக் கழிவு வழங்குவார்கள். நல்ல மார்க்கெட்டிங் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே ஏற்ற தொழில்.
விழாக்களுக்கான ஃபோட்டோ மற்றும் வீடியோகிராஃபர்: இன்றைக்கு திருமண விழாக்கள் முதல் அனைத்து விழாக்களையும் ஒளிப்படம் மற்றும் வீடியோ எடுப்பது என்பது இன்றியமையாத ஓன்றாக ஆகிவிட்டது. அதுவும் திருமண வீடியோக்களில் நிறைய மாற்றங்கள் வந்து உள்ளன. திருமணத்துக்கு முன்னரே கூட மணமக்களை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று, போஸ் கொடுக்க வைத்து படம் எடுக்கப் படுகிறது. ஒளிப்பட ஆல்பங்களிலும் நிறைய புதுமைகள் வந்து உள்ளன. இந்த தொழிலைச் செய்ய ஃபோட்டோகிராஃபி மற்றும் வீடியோகிராஃபி தெரிந்து இருக்க வேண்டும். அல்லது கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு ஸ்டில் கேமரா, வீடியோ கேமரா தேவைப்படும். சென்னை போன்ற சில நகரங்களில் இவற்றை வாடகைக்குப் பெறும் வாய்ப்பும் உள்ளது.
எழுத்துப் பணி: நல்ல மொழி வளமும், பொது அறிவும் உள்ளவர்கள் முயற்சித்துப் பார்ப்பதற்கு ஏற்ற தொழில். இதழ்களுக்குத் தேவையான கட்டுரைகள், பேட்டிகள் எழுதித் தரலாம். வெளித் திறன் பெறுதல் என்ற அடிப்படையில் நிறுவனங்கள் இத்தகைய எழுத்துகளை ஏற்கின்றன. வெளியிடப்படும் படைப்புகளுக்கு மதிப்பூதியம் என்ற பெயரில் ஊதியம் வழங்குவார்கள். மொழி பெயர்க்கத் தெரிந்தவர்கள் மொழி பெயர்த்துத் தரும் பணிகளையும் ஏற்றுச் செய்யலாம்.
– முனைவர் ச. குப்பன்