அலோபதி மருந்துக் கடைகளின் வளர்ச்சி பெரிய அளவில் இருக்கிறது. உடல்நலம் சார்ந்த விழிப்புணர்ச்சி அதிகரித்து வருவதாலும், மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் மருந்துகளின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. தனி உரிமையாளர்கள் மருந்துக் கடை நடத்தி வருவதுடன், பெரிய மருத்துவ மனைகள், மருந்து நிறுவனங்களும் தனி உரிமைக் கிளை (ப்ரான்சைஸ்) அடிப்படையில் நாடு முழுவதும் மருந்துக் கடைகளைத் திறந்து வருகின்றன. சென்னைக்கு அருகில் உள்ள செங்குன்றத்தில் ஐம்பத்து ஏழு ஆண்டுகளாக வெங்கடேஸ்வரா மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்துக் கடை நடத்தி வருகிறார், பார்மசிஸ்ட் திரு. சண்முகவடிவேல் சுந்தரம். மருந்துக் கடைகள் தொடர்பாக அவரை பேட்டி கண்டபோது பயனுள்ள பல செய்திகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியவற்றில் இருந்து..,
”முன்பு இருந்ததற்கும், தற்போது இருப்பதற்கும் மருந்துக் கடைகளில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் அதிகம். முன்பு எல்லாம் மருந்துக்கடை நடத்துபவர்கள் சேவை மனப்பான்மையோடு நடத்தினார்கள். ஆனால் தற்போது பல மருந்துக் கடைகள், இது ஒரு சேவை சார்ந்த தொழில் என்ற எண்ணத்தை முற்றிலும் மறந்து லாபத்தை மட்டும் மையமாக கொண்டு இயங்குகின்றன.
ஒருவர் மருந்துக் கடையை புதிதாக தொடங்கி நடத்த வேண்டும் என்றால் அவர் குறைந்தது டி ஃபார்ம் என்கிற இரண்டு ஆண்டு டிப்ளெமா படிப்பை முடித்து இருக்க வேண்டும். படித்து முடித்த பின்னர் கட்டாயமாக 90 நாட்கள் அரசு மருத்துவ மனையில் பணி புரிய வேண்டும். அப்படி பணி புரிந்தால் மட்டுமே அவருக்கு எந்த மருந்து எதற்கு பயன்படுகிறது என்று முழுமையாக தெரிய வரும். இந்த பயிற்சியை பெற்றால்தான், படித்து முடித்ததற்கான சான்றிதழை அரசிடம் இருந்து பெற முடியும். இல்லை என்றால் டி ஃபார்ம் படிப்பு நிறைவடையாது.
அண்மைக் காலமாக ஃபிரான்சைஸ் (தனி உரிமைக் கிளைகள்) மருந்துக் கடைகள் அதிகரித்து வருகின்றன. அவை முழுக்க முழுக்க லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு உள்ளன. இத்தகைய தனி உரிமைக் கிளைகளாக இருக்கும் மருந்துக் கடைகள் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகளை மட்டுமே பெருமளவில் வாங்குகிறார். அந்த மருந்துக் கடையை நடத்துவது அந்த உரிமையாளர்தான் என்றாலும், அவருக்கு பெயர் உரிமை கொடுத்து உள்ள பிராண்டின் பெயரைப் பார்த்து வாடிக்கையாளர்கள் அந்த கடைகளை நாடுகிறார்கள்.
அந்த மருந்துக் கடை பிராண்டுகள் பெரிய அளவில் குறிப்பிட்ட மருந்துகளை வாங்கி அதை தங்கள் பெயர் உரிமைக் கிளைகளுக்கு தள்ளுபடி விளையில் தருகிறார்கள். ஆனாலும் இத்தகைய கிளைகள் அனைத்துமே லாபத்தில் இயங்குவதாகக் கூற முடியாது. சில லாபத்தில் இயங்குகின்றன. சில இழப்புடன் தவித்துக் கொண்டிருக்கின்றன. கடைகள் அமைந்து இருக்கும் இடத்தைப் பொறுத்தே விற்பனை அமைகின்றது.
ஆன்லைனில் மருந்துகள் வாங்குவதற்கு என இப்போது நிறைய ஆப்-கள் மற்றும் வலைத் தளங்கள் இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் அவற்றின் முலம் மருந்துகள் வாங்கும் போது மிகவும் கவனத்துடன் வாங்க வேண்டும். ஏன் என்றால் ஒருவர் மருந்துக் கடைக்கு சென்று மருந்து வாங்குகிறார் என்றால் அந்த மருந்துக் கடையில் கண்டிப்பாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருக்கும். அப்படி குளிர்சாதன வசதி செய்யப்பட்டு உள்ளதால் மருந்துகளின் தன்மை சீரான நிலையில் பரமரிக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் ஒருவர் ஆன்லைனில் மருந்துகளை வாங்குகிறார் என்றால், அந்த மருந்து பேக்கிங் செய்து கூரியரில் வந்து சேர மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும். அந்த நேரத்தில் மருந்தின் வீரியம் மற்றும் தன்மை மாற அதிகம் வாய்ப்பு இருக்கின்றது. இதனால் தான் இப்போது 90% மருந்துக் கடைகள் ஏசி செய்யப்பட்டு இருக்கின்றன.
வாடிக்கையாளர்களால் எல்லா நேரங்களிலும் மருந்துகளை ஆன்லைனில் வாங்க முடியாது ஒருவருக்கு காய்ச்சல், தலைவலி என்றால் அதற்குரிய மருந்து அவருக்கு உடனடியாக தேவைப்படும். அப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்து விட்டு காத்துக் கொண்டு இருக்க முடியாது. அந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் அருகில் இருக்கும் மருந்துக் கடைகளையே நாடுவார்கள். ஆன்லைனைப் பொறுத்தவரை தொடர்ந்து அதிக நாட்கள் உட்கொள்ள வேண்டிய சில மாத்திரை மருந்துகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து பயன்படுத்த முடியும்.
ஆன்லைனில் மருந்து வாங்கும் சில வாடிக்கையாளர்கள் இத்தகைய சிக்கல்களையும் சந்திக்க நேர்கிறது. அண்மையில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகள் – ஒருவர் மருத்துவர் கொடுத்த மருந்து சீட்டை ஆன்லைனில் பதிவு செய்து மருந்துகள் வாங்கி உள்ளார். அப்போது அவருக்கு தவறாக புற்று நோய்கான மருந்து விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது அவருக்கு தெரியாது. பின்னர் சில நாட்கள் கழித்து மருத்துவரை சந்திக்கச் சென்ற போது மருந்துகளை காட்டி இருக்கிறார். அவற்றைப் பார்த்த மருத்துவர், இது நான் எழுதிக் கொடுத்த மருந்து இல்லை எந்த கடையில் மருந்துகள் வாங்கினீர்கள் என்று திகைப்பு அடைந்திருக்கிறார். எனவே வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வாங்குவதை விட நேரில் மருந்துக் கடைகளில் வாங்குவதையே அதிகமாக விரும்புகிறார்கள்.
மற்றொருவர் குறிப்பிட்ட நோய்க்கான ஒரு மாதத்திற்குத் தேவையான மருந்துகளை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு இருபது மாத்திரைகள் மட்டுமே வந்தன. இது போன்ற சில சிக்கல்கள் இருப்பதால்தான் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தெரிந்த மருந்துக் கடைகளில் வாங்குவதையே விரும்புகிறார்கள்.
ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மருந்துக் கடைகளின் பணிச்சுமை கடுமையாக அதிகரித்து விட்டது.. ஏன் என்றால் முன்பாகவே அட்டவணை புத்தகம் மற்றும் பல கணக்கு புத்தகங்களை மருந்துக் கடைகளில் கட்டாயமாக, முறையாக எழுதி வைத்து இருக்க வேண்டும். தற்போது ஜிஎஸ்டி வந்தற்கு பின்பு வேலைகள் பல மடங்கு அதிகரித்து விட்டன. எங்களுக்கு மிகவும் சிக்கலாகவும், கூடுதல் செலவை உருவாக்குவதாகவும் இருக்கிறது. ஜிஎஸ்டி வரி கட்டும் நடைமுறைகளை இன்னும் எளிதாக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விகிதம் என்பது மருந்துகளைப் பொறுத்தவறை அவற்றின் பயன்பாட்டைப் பொறுத்து வகைப்படுத்தபட்டு உள்ளன.
உயிர்காக்கும் மருந்துகள், புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் சில மருந்துகளுக்கு குறைவாக இருக்கிறது. சில மருந்துகளுக்கு முழு வரிவிலக்கும் இருக்கிறது. மக்களால் அதிகமாக வாங்கப்படும் காய்ச்சல், தலைவலி மருந்துகளுக்கு 5% முதல் 12% வரை வரி வசூலிக்கபட்டு வருகின்றது. சில வைட்டமின் மாத்திரைகள் மற்றும் புரதச்சத்து மாவு போன்ற பொருட்களுக்கு 18% முதல் 28% வரை மிகவும் அதிக அளவில் வரி வசூலிக்கப் படுகிறது.
மருந்துக் கடைகளைப் பொறுத்த வரை பணி ஆட்கள் மிகவும் முக்கியம். சற்று விவரமான ஆட்களாக அவர்கள் இருக்க வேண்டும். குறைந்தது மேல்நிலைக் கல்வியையாவது முடித்து இருக்க வேண்டும். இவர்களால் டி. ஃபார்ம் முடித்த ஒருவரிடம் உதவியாளர்களாகப் பணிபுரிய முடியும் மருத்துவர் தரும் மருந்துச் சீட்டை அவர் படித்துப் புரிந்து கொண்டு, அந்த மருந்தை எடுத்து டி ஃபார்ம் முடித்தவரிடம் வழங்குவார். மருந்தாளுநர் அந்த மருந்துகளை, மருந்துச் சீட்டுடன் ஒப்பிட்டு சரி பார்த்த பின்பே வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும். இதுதான் உரிய நடைமுறை என்றாலும் சில மருந்துக் கடைகள் இதை முறையாகப் பின்பற்றுவது இல்லை.
இப்போது ஆயிரக் கணக்கான மருந்து நிறுவனங்கள் புதிது புதிதாய் மருந்துகள் தயாரித்து அறிமுகப்படுத்தி வருகின்றன. முன்பு எல்லாம் இந்தியாவில் வெளிநாட்டு மருந்துகள் குறைந்த அளவிலேயே கிடைதன. ஆனால் தற்போது வெளிநாட்டு மருந்துகள் மிக அதிக அளவில் எளிதாக கிடைக்கின்றன. பல மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதால் அவை அதக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதை எல்லாம் அரசு கண்காணித்து கட்டுப்படுத்தினால்தான் இந்த மருந்துகள் மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கும்.
மருந்து மொத்த விற்பனை நிறுவனங்கள் சில்லரை மருந்துக் கடைகளுக்கு பெரிதும் உதவியாய் இருக்கின்றன. சான்றாக, கடைகளில் குறிப்பிட்ட மருந்து இல்லை, விரைவில் தேவைப்படுகின்றது என்று கேட்டால் அதிக பட்சமாக ஆறு மணி நேரத்திற்குள் அந்த மருந்தை கடைகளில் கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள். தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு விநியோகஸ்தர் என்ற அளவில் இருப்பார்கள். அவர்கள் முலமாகவே மருந்துகள் மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து அந்த அந்த பகுதிகளில் இருக்கும் மருந்துக் கடைகளுக்கு வந்தடைகின்றன. ஒரு கடைக்கு மருந்துகள் விற்பனைக்கு வந்தடைய, அந்த மருந்துகள் முன்று அல்லது நான்கு கைகள் மாறித்தான் இறுதியில் கடைகளுக்கு வந்தடைகின்றன. அத்தனை கைகளுக்கும் லாபம் சென்றடைகிறது. வாடிக்கையாளர் அத்தனை கைகளுக்கும் சேர்த்தே விலை கொடுக்கிறார்.
மருந்துக் கடைகளில் கணினித் தொழில் நுட்பம் சிறப்பாகப் பயன்படுகிறது. எந்ந மருந்து எப்போது காலாவதி ஆகும் என்கிற விவரம், விற்கப்படாமல் இருக்கும் மருந்துகளின் பட்டியல், ஜிஎஸ்டி தொடர்பான தகவல்கள், மருந்துகள் பற்றிய குறிப்புகள், வாடிக்கையாளர் வாங்கிய மருந்து விவரங்கள் மற்றும் அவரின் பழைய ரசீது என்பது போன்ற பல முக்கிய தகவல்களை சேமித்து வைக்க முடிகிறது. ஒரு வாடிக்கையாளரின் பழைய ரசீது முலம் அவர் வாங்கிய மருந்துகளை மீண்டும் அவருக்கு உடனடியாக வழங்க முடியும்.
பெரும்பாலான மருந்துக் கடைகளில் மருந்துகளை வரிசைப்படுத்தி அடுக்கும் போது ஏபிசிடி என அதாவது அகர வரிசைப்படியே மருந்துகளை அடுக்கி வைப்பார்கள். ஏன் என்றால், அப்போதுதான் மருந்துகளை எடுப்பதற்கு எளிதாக இருக்கும். மருந்துகளை நிறுவனங்கள் பெயர் அடிப்படையில் வரிசைப் படுத்தி வைத்தால் அது எடுப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும்.
டிரக் இன்ஸ்பெக்டர்கள் (Drug Inspector) எனப்படும் மருந்து ஆய்வாளர்கள் கண்டிப்பாக எல்லா மருந்துக் கடைகளுக்கும் மாதத்திற்கு ஒரு முறையாவது கடைக்கு நெரில் வந்து எல்லா மருந்துகளும் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்வார். ஒரு குறிப்பிட்ட கடையின் மேல் குற்றச்சாட்டு இருந்தால் அப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் சென்று சோதனை செய்வார்கள்.
மருந்து ஆய்வாளர்கள் பொதுவாக எல்லா மருந்துக் கடைகளுக்கும் கூறும் அறிவுரை, மருந்துக் கடைகளில் கண்டிப்பாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருக்க வேண்டும். சில மருந்துகள் போதைத் தன்மையை எற்படுத்தும். அது போன்ற மாத்திரைகள் மற்றும் மருந்துகளை மருத்துவர் குறிப்புச் சீட்டு இல்லாமல் வாடிக்கையாளருக்கு கொடுக்கக் அப்படிபட்ட மருந்துகளை முறையாக கணக்கு வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.
ஜெனரிக் மருந்துகள் (Generic Medicines) என்பது பொதுவான மருந்துகள். அப்படி என்றால் அந்த மருந்தில் உள்ளே இருக்கும் இரசாயனம் ஒன்றுதான், பிராண்டின் பெயர் அதாவது தயாரிக்கும் நிறுவனம் மட்டுமே வேறுபடும். சான்றுக்கு தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்வோம். எண்ணெய் ஒன்றுதான். ஆனால் அதனை வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்து தங்கள் நிறுவனப் பெயர்களில் விற்பனை செய்வதைப் போன்றது. இப்படிபட்ட மருந்துகளை எந்த நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும் வாங்குவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இது போன்ற மருந்துகளை வாடிக்கையாளர்கள் வாங்கும் போது மருந்தைப் பற்றிய அடிப்படைச் செய்திகளை அறிந்து வாங்க வேண்டும்.
அது மட்டும் இன்றி, அப்படிப்பட்ட மருந்துகளை விற்பனை செய்யும் கடைகளும், கடைக்காரரும் அந்த ஜெனரிக் மருந்துகளைப் பற்றி நன்கு அறிந்து இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். எனக்கு தெரிந்த ஒரு வாடிக்கையாளர், புதிதாக ஜெனரிக் மருந்துகளை வாங்கி பயன்படுத்தி வந்தார். மூன்று முறை பயன்படுத்தியும் அவருக்கு புதிய கடையில் வாங்கிய அந்த மருந்து அவருக்கு கைகொடுக்க வில்லை. பின்னர் ஒரு நாள் எங்கள் கடைக்கு வந்து என்னிடம் கேட்டு பழைய மருந்தை வாங்கிச் சென்று பயன்படுத்தினார். பயன் கிடைத்தது. இதனால்தான் ஜெனரிக் மருந்துகளை கவனத்தோடு வாங்கி பயன்படுத்த வேண்டும் என்கிறோம்.
இப்போது மருந்துக் கடைகள் தெருவுக்கு ஒன்று என வந்து விட்டன. புதிதாய் மருந்துக்கடை தொடங்கி வெற்றி பெறுவது சவாலான ஒன்றாக இருந்தாலும், சாத்தியமானதுதான்.. தற்போது உள்ள சூழ்நிலையில் தனியாக இயங்கும் மருந்துக் கடைகள் வெற்றி பெறுவது கடினம். ஏன் என்றால் அவர் புதிதாய் வாடிக்கையாளர்களுடன் பழகி நம்பிக்கையை உருவாக்கி விற்பனையை அதிகரிக்க வேண்டும். அந்த பகுதியில் இருக்கும் அல்லது ஒரு புதிய மருத்துவர் உதவி உடன் மருந்துக் கடையை நடத்தினால்தான் வெற்றி பெற முடியும் என்பது இன்றைய சூழ்நிலை.
எங்கள் மருந்துக் கடை தொடங்கி 57 ஆண்டுகள் ஆகின்றன. எங்கள் கடையைப் பொறுத்த வரை வாடிக்கையளர்களின் நம்பிக்கையை பெற்று இருக்கிறோம். அண்மையில் அனைத்து தமிழ்நாடு மருந்துக் கடைக்காரர் மற்றும் வேதியியலாளர் சங்கம் சார்பில், ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் மருந்துக் கடை நடத்தி வருபவர்களுக்கான விருதை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆறு கடைகளுக்கு வழங்கினார்கள். அந்த விருது எங்கள் கடைக்கும் வழங்கப்பட்டது குறித்து பெருமிதம் அடைந்தோம்..
மருந்துக் கடைகளைப் பொறுத்த வரை மருத்துவர் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றால்தான் தொடர்ந்து நடத்த முடியும். மருத்துவர் நம்பிக்கை பெற அடிப்படையாக அவர் கூறும் எல்லா மருந்துகளையும் எப்போதும் நாம் நம் கடையில் இருப்பு வைத்து இருக்க வேண்டும். ஒன்று கொடுத்து ஒன்று இல்லை என்றால் மருத்துவர் அடுத்து மருந்து எழுதிக் கொடுக்கும்போது நம்பிக்கையுடன் எழுத மாட்டார். இருக்குமோ, இருக்காதோ என்ற தயக்கம் ஏற்பட்டால், நம்முடைய கடைக்குதான் பாதிப்பு. அவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை உடனுக்குடன் எடுத்துக் கொடுக்கும் அளவில் இருந்தால் அவருடைய நம்பிக்கை அதிகரிக்கும். வாடிக்கையாளர்களும், ஒரு மருந்தை நம் கடையில் வாங்கி விட்டு, இன்னொரு மருந்துக்கு வேறு கடைக்கு செல்ல வேண்டும் என்ற நிலையை விரும்ப மாட்டார்கள்.
நான் என்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட அக்க¬ற்யோடு கவனமாக மருந்துகளை தருகின்றேன். அது மட்டும் இன்றி அவர்களுக்கு மருந்து குறித்த எந்த விதமான சந்தேகமாக இருந்தாலும் அவர்களுக்கு முழுமையாக தெளிவு படுத்த தயங்குவது இல்லை. மருந்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விளக்கிக் கூறுவதோடு, முடிந்தால் தனியாக காகிதத்தில் எழுதிக் கொடுக்கிறேன். எந்த மருந்தை எப்போது உட்கொள்ள வேண்டும் என்று நிதானமாக எடுத்துக் கூறுகின்றேன்.
ஒரு மருந்துக் கடை நடத்துபவருக்கு அவ்வப்போது புதிதாய் அறிமுகப்படுத்தப்படும் மருந்துகள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். இனி வர இருக்கும் புதிய மருந்துகள் பற்றியும் சில அடிப்படை செய்திகளை சேகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். சேவை எண்ணத்தோடு தொடர்ந்து நடத்தி வந்தால் மருந்துக் கடை தொழிலில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்” என்கிறார். திரு. சண்முகவடிவேல் சுந்தரம்.
– செ. தினேஷ் பாண்டியன்