பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில், கருவூட்டல் செய்யப்பட்டு பிறந்த கன்றுகளையும், பசுக்களையும் விவசாயிகள் விற்று விடாமல் இருக்க, கிடேரிக் கன்று வளர்ப்புக்காக மாதம்தோறும் பத்து ரூபாய் வீதம் மானியமாக வழங்கினார்கள். அந்தக் கன்று பசுவாக வளர்ந்து கன்று போடும் வரை அந்த மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதனால் தமிழ் நாட்டில் பல்லாயிரக் கணக்கான பசுக்களும், கன்றுகளும் விற்கப்படாமல் பாதுகாக்கப்பட்டன. பால் உற்பத்தி பெருகியது. சாணம், கோமியம் மண்ணிலேயே கலந்து மண் வளம் பெற்றது. விவசாயிகள் பிள்ளைகளை படிக்க வைக்க முடிந்தது.
தற்போதைய சூழ்நிலையில் அந்த திட்டத்தை நவீனப்படுத்தி காலத்திற்கு ஏற்றவாறு கால்நடைத் துறையின் மூலம் நடைமுறைப்படுத்தலாம். கிராமப்புற ஏழை மக்கள் பயன் அடைவார்கள். பொருளாதார உற்பத்தி பெருகும். கிராமங்களின் ஏழ்மை நிலையை இந்த திட்டம் பெருமளவில் குறைக்கும்.
கால்நடைத் துறையில் செயல்பட்டு வரும் சுமார் மூவாயிரம் கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவக் கிளை நிலையங்களில் கருவூட்டல் செய்யப்பட்டு பிறக்கும் பசு, எருமை, கிடேரிக் கன்றுகளுக்கு, நிலையத்திற்கு ஐம்பது கன்றுகள் வீதம் மொத்தம் மூவாயிரம் ஜ் ஐம்பது = ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கன்றுகளுக்கு, ஒரு கன்றுக்கு முன்னூறு ரூபாய் வீதம் தொடர்ந்து இருபது மாதங்கள், அதாவது கன்று சினை பிடித்து, கன்று போடும் வரை கொடுக்கப்பட வேண்டும். இது அந்த அந்த நிலையங்களிலேயே கொடுக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் விவசாயிகள் பசுவையும், கன்றையும் விற்று விடாமல் அக்கறையோடு பாதுகாப்பார்கள். கூடுதலாக ஒரு அலுவலர் கூட நியமிக்க வேண்டியதில்லை. உதவித் தொகை ரூ.300ஜ்20=6000 முதலீட்டில் ரூ.60,000 பெறுமானமுள்ள பசுவும், கன்றும் கிடைக்கும். அப்பசு நாள்தோறும் காலை சுமார் இருபது லிட்டர், மாலை எட்டு லிட்டர் பால் கறக்கும். வளர்ப்பு, தேய்ப்பு முறைகளைப் பொறுத்து கறவை கொஞ்சம் முன்பின் இருக்கலாம். தமிழகத்துக்கு நாளொன்றுக்கு சுமார் முப்பது லட்சம் லிட்டர் பால் கூடுதலாகக் கிடைக்கும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு இருபது மாதங்களுக்கு தொன்னூறு கோடி ரூபாய் செலவாகும். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு (அறுபது மாதம்) இருநூற்று எழுபது கோடி ரூபாய் செலவாகலாம்.
தமிழ்நாடு அரசு இச்செலவை ஏற்க இயலா நிலை அமைந்தால் நடுவணரசுக்கு விண்ணப்பித்து தேவையான நிதியைப் பெறலாம். நடுவணரசு வேளாண் மேம்பாட்டுக்காக நிதிநிலை அறிக்கையில் இரண்டு லட்சத்து பதினாறாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. தமிழ் நாடு அரசு இந்த ஆலோசனையை நிறைவேற்றினால் சிற்றூர்களில் உள்ள சாதாரண விவசாயிகளின் பொருளாதாரத்தில் குறிப்படத்தக்க அளவுக்கு வளர்ச்சி ஏற்படும்.
– இரா. இரத்தினகிரி, தஞ்சாவூர்