முன்னர் மண்பாண்டங்கள் செய்யும் குயவர்கள் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இருந்தனர். அதே போல், மக்களும் மண் பாண்டங்களை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.
இப்போது பொங்கல் விழா நாட்களில் மட்டும் பொங்கல் இடுவதற்கு புது மண்பானை வாங்குகிறார்கள். வேறு சிலர் மண்பாண்டங்களில் சமைத்தால் சுவை கூடுதலாக இருக்கிறது என்று மண் சட்டிகளை வாங்குகிறார்கள். மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களே தற்போது இந்த தொழிலைச் செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர், திருமதி. சந்திரா. மண் பாண்டங்கள் செய்வதை பாரம்பரியமாக கொண்டது, இவரது குடும்பம். தற்போது அகல் விளக்குகளைச் செய்து சந்தைப் படுத்தி வருகிறார். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது.
“மேட்டூருக்கு அருகே உள்ள நங்கவள்ளிதான் எங்கள் ஊர். எங்கள் ஊரில் குயவர்கள் அதிகம். எங்கள் குலத்தொழில் மண்பாண்டங்களைச் செய்வதுதான். மண் அடுப்பு, வாணலி, பானைகள், சட்டிகள், அகல் விளக்குகள் என்று செய்து விற்பனை செய்து வந்தனர். நான் என் தாத்தாவிடம் இருந்து அகல் விளக்குகள் செய்ய கற்றுக் கொண்டேன்.
எங்கள் தொழிலுக்கான மூலப்பொருளான களிமண் வாங்குவது என்பது இன்றைக்கு பெரும் சிக்கலான ஒன்றாக இருக்கிறது.நாங்கள் செய்யும் விளக்குகளை களிமண் மற்றும் மணல் கொண்டுதான் செய்கிறோம். இதற்கான களிமண்ணை எங்கள் ஊருக்கு அருகில் உள்ள மள்ளிக்குட்டை ஏரியில் இருந்துதான் பெற வேண்டும்.
ஆனால், அவ்வளவு எளிதாக மண்ணைப் பெற்றுவிட முடியாது. அதற்கு மிகப் பெரிய சங்கிலித் தொடர் செயல்பாடுகள் உள்ளன. சுரங்க மற்றும் சுற்றுச்சூழல் துறையினரிடம் பல படிகளில் விண்ணப்பங்கள் அளித்து அனுமதி வாங்க வேண்டும். அதில் அலைக் கழிப்புகள் பல. இவற்றை எல்லாம் கடந்துதான் நாங்கள் மண்ணை வாங்க வேண்டும். அதற்கும் வண்டிக் கட்டணம் தனியாக இருக்கும். மூன்று யூனிட் மண்ணை எடுத்து வர 2500 ரூபாய் செலவு செய்ய வேண்டும்.
நாங்கள் செய்யும் விளக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்துதான் களிமண்ணின் இருப்பு இருக்கும். குறைந்த பட்சம் நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை எனக்கு களிமண் இருப்பு இருக்கும். தீர்ந்த பின் மறுபடியும் அனுமதி பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தொழிலுக்கான மூலப்பொருளான களிமண்ணை எளிதில் பெற்றுக் கொள்ளும்படி அரசு வழிவகை செய்ய வேண்டும்.
நான் தனியாளாகவே ஒரு நாளைக்கு ஆயிரம் விளக்குகள் வரை செய்வேன். அகல் விளக்குகளைச் செய்து காய வைத்து எடுத்து வைத்து விடுவோம். பின்னர் மொத்த வியாபாரிகள் வந்து அனைத்தையும் வாங்கிக் கொள்வார்கள். அவர்களுக்கு ஆயிரம் விளக்குகளை முன்னூற்று ஐம்பது ரூபாய் முதல் நானூறு ரூபாய்க்கு கொடுக்கிறோம். விழாக்காலங்களில் நானுற்று ஐம்பது ரூபாய் வரை விலை போகும். திருவிழாக் காலங்களில் நூறு விளக்குகளுக்கு நாற்பது ரூபாய் என சில சில்லரை வியாபாரங்களும் நடக்கும். எங்களிடம் இருந்து அகல் விளக்குகளை வாங்கி விற்பனை செய்ய விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளலாம்.” என்றார், திருமதி. சந்திரா.(9597905446)
– சிவம்