CHOREI – பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்!
ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய பல்வேறு நுட்பங்களை அனைத்து நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன. அம்மாதிரியான பயனுள்ள செயல்பாடுகளில் ஒன்றுதான், சோ ரெய். அதாவது காலை நேரக் கூட்டம். தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி பெரிய பெரிய நிறுவனங்கள் வரை இந்தக காலை நேரக் கூட்டத்தை நடந்தத் தவறுவது இல்லை.
ஒவ்வொரு கூட்டத்தின் போதும் நிறுவன வளர்ச்சிக்கு பணியாளர்களின் பங்கு முதல், வாடிக்கையாளர்களுக்கு முழு மனதுடன் செய்ய வேண்டிய சேவை வரை ஏதாவது ஒரு தலைப்பில் முதன்மை அதிகாரிகள் குறுகிய உரை நிகழ்த்துவார்கள். பணியாளர்களுக்கும் இவ்வாறு உரை நிகழ்த்தும் வாய்ப்பும் வழங்கப்படும். அவர்கள் நிறுவனத் தொடர்பான் ஏதாவது ஒரு தலைப்பைக் கொடுத்த பேசச் சொல்வார்கள். இந்த வாய்ப்பை பணியாளர்களுக்கு வழங்குவதன் வாயிலாக அவர்களின் பேச்சாற்றலையும் வளர்க்கிறார்கள்.
பெரும்பாலான ஜப்பானிய நிறுவனங்கள் காலை ஒன்பது மணிக்கு இயங்கத் தொடங்குகின்றன. வேலை தொடங்கும் நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்னதாகக் காலை நேரக் கூட்டம் தொடங்கப்படுகிறது. பத்து முதல் பதினைந்து நிமிடங்களில் கூட்டம் முடிந்து விடும்.வாடிக்கையாளர் சேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றிய பகிர்வுகள் இந்தக் கூட்டங்களின் முதன்மையாக நடக்கும்.
கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ் வொருவரும் உற்சாகமாக காலை வணக்கம் சொல்ல வேண்டும். பெரிய விற்பனை நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கண்களில் முதலில் படுபவர்கள் விற்பனைப் பிரிவில் உள்ள பெண்கள்தான். அவர்கள் உடுத்தி இருக்கும் உடைகள் கண்ணியமாகவும் நாகரிகமாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். தூய்மைக்கு முதன்மையான இடம் தரப்படுகிறது. ஒரு பணியாளர் மற்றொரு பணியாளரின் குறையைச் சுட்டிக் காட்டலாம். இது குற்றம் சாட்டும் வகையில் இல்லாமல் யோசனை சொல்கிற வகையில் அமையும்.
எந்த நிறுவனமாக இருந்தாலும் காலை நேரக் கூட்டம் ஆன சோ ரெய் கட்டாயமான ஒன்று, பல பிரிவுகனாக இயங்கும் நிறுவனங்களில் அந்தந்தப் பிரிவு பணியாளர்கள் கலந்து கொள்வார்கள். அந்தப் பிரிவுக்குத் தலைமை ஏற்றுள்ள அலுவலர் சிறிது நேரம் உரையாடுவார். அந்த உரை பெரும்பாலும் வேலையைப் பற்றியதாகவே இருக்கும். பொன் மொழிகளும் சொல்லப்படும். நடப்புச் செய்திகளை மேற்கோள் காட்டியும் பேசப்படுவது உண்டு. இதில்எல்லோருமே முழு ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் ஒரு தகவலைத் தெரிந்து கொள்ள வேண்டும். அல்லது மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். தொழிலில், பணியில் ஏற்படும் சிக்கல்களையும் சொல்லலாம்.
”காலை நேரக் கூட்டங்களின் மூலம் தகவல் பரிமாற்றம் மேம்படுகிறது பணியாளர்களின் ஒழுக்கம் உயர்கிறது. ஒற்றுமை உணர்வு அதிகரிக்கிறது. குறிக்கோளை எட்டுவதற்காக இணைந்து உழைக்கும் ஆர்வம் கூடுகிறது” என்பது உறுதி ஆகியுள்ளது. நாளொன்றுக்கு பத்து முதல் பதினைந்து நிமிடங்களை இப்படிச் செலவு செய்வதன் மூலம் சிறந்த பயனை அடைய முடிகிறது என்கிறார்கள். ஜப்பானியர்களின் அனுபவத்தைப் புரிந்து கொண்ட பிற நாட்டினரும் இது போன்ற கூட்டங்களை நடத்துவதில் ஆர்வம் காட்டு கிறார்கள். தமிழ்நாட்டிலும் சில பெரிய நிறுவனங்களில் சோ ரேய் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
-ஹென்றி