- Advertisement -
- தொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது? உங்களுக்கு உள்ள தொழில் அனுபவம், உங்களிடம் உள்ள முதலீடு, தொழில் செய்யும் ஊர், அங்கு கிடைக்கும் மூலப்பொருள், தொழிலாளர்கள் கிடைப்பது போன்றவற்றை கருத்தில் கொண்டு ஒரு தொழிலைத் தேர்ந்து எடுங்கள். இன்றைய காலக் கட்டத்தில் மூலப் பொருள்களை எங்கு இருந்தும் வரவழைக்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். தொழிலைத் தொடங்கிய பிறகு அத்தொழில் லாபம் ஈட்ட சிறிது காலம் ஆகலாம். தொழிலை நடத்தும் போது சில சிக்கல்கள் வரலாம். அந்த சிக்கல்களை எல்லாம் பொறுமையுடன், திறமையுடன் சமாளித்து தொழிலில் வெற்று பெற முயற்சி செய்யுங்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வதற்கு ஏற்ப இந்த தொழிலில் வெற்றி பெறுவதற்கு முன் வேறு தொழில்கள் பற்றி சிந்திக்காதீர்கள்.
- அனைத்திலும் தரம் இருக்க வேண்டும் நீங்கள் உற்பத்தி செய்யும் பொருள் நல்ல தரத்துடன் இருக்க வேண்டும். ஒரு பொருளைத் தயாரிக்கத் திட்டமிடும் போதே, அதைத் தயாரிக்கப் பயன்படுத்தும் எந்திரங்களை தரம் உள்ளதாகப் பார்த்து வாங்க வேண்டும். தொடக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் விற்பனை செய்து பயன்படுத்துவோரின் கருத்துகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த கருத்துகளின் அடிப்படையில் தேவைப்படும் மேம்பாடுகளைச் செய்த பின் அதிக அளவில் உற்பத்தியை மேற்கொள்ளுங்கள். நீங்கள் விற்கும் ஒவ்வொரு பொருளும் குறைந்தது பத்து புது வாடிக்கையாளர்களைக் கொண்டு வர வேண்டும்.
- திறமையானவர்களைப் பணிக்கு வைத்துக் கொள்ளுங்கள் வெற்றியுடன் தொழில் செய்பவர்கள், திறமையானவர்களைத் தேர்ந்து எடுத்து பணிக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். நீங்கள் அப்படி திறமையானவர்களை பணியில் அமர்த்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். திறமையான தொழிலாளர்கள் முதலில் கிடைப்பது சிரமமாக இருந்தாலும் காலப் போக்கில் கிடைக்கத் தொடங்கி விடுவார்கள். நிர்வாகத் துறையில் படிப்பும், அனுபவமும் உளளவர்கள், விற்பனைத் துறையில் வல்லவர்கள், உற்பத்தி தொடர்பான திறமை வாய்ந்த நண்பர்கள் மற்றும் தொழில்முறை ஆலோசகர்களிடம் ஆலோசனைகளை விரும்பிக் கேட்டு உங்களுக்கு ஏற்றவற்றை மடடும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். திறமைசாலிகள் உங்கள் தொழிலகத்தில் தொடர்ந்து பணி செய்யும் வகையில் அவர்களுக்கு பொறுப்பு மற்றும் ஊதியங்களை வழங்குங்கள். நல்ல பயிற்சி பெற்ற திறமையான பணியாளர்கள் ஒரு நிறுவனத்தின் முதன்மையான சொத்து என்பதை எப்போதும் நினைவில் வைத்து இருங்கள்.
- தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செலுத்துங்கள் பெரும்பாலும் ஒரு தொழிலுக்கு வளர்ந்து முடிந்த நிலை என்று ஒன்று கிடையாது. அது தொடர்ந்து வளர வேண்டும். அப்படி வளராவிட்டால் நாளடைவில் அது நலிந்து போய் இழப்பில் முடியும். ஒரு தொழிலை நடத்திச் செல்வது என்பது இரு சக்கர வாகனம் ஒன்றை ஓட்டிச் செல்வதற்கு ஒப்பானது ஆகும். மூலப் பொருள்களின் விலை, பணியாளர்களின் சம்பளம், வட்டி, தேய்மானம் போன்றவை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால், நம் தொழிலும் தொடர்ந்து வளர்ந்தால்தான் இவற்றை ஈடுகட்ட முடியும்.
- வாய்ப்புகளை அறியுங்கள்; பயன்படுத்துங்கள் வாய்ப்புகளை அறிய நாம் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நல்ல வாய்ப்புகளைக் கூட தவற விட்டு விட வாய்ப்பு இருக்கிறது. வெற்றி பெறும் மனிதர்களைப் பார்த்தால், அவர்கள் தங்களுக்கு வரும் வாய்ப்புகளை எந்த அளவுக்கு சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். செய்தித் தாள்களில் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் உங்கள் தொழில் சார்ந்த செய்திகளில் கவனம் செலுத்துங்கள். புதிய கண்டுபிடிப்புகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். பெருந்தொற்று ஒரு முடிவுக்கு வந்த உடன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபெறும் உங்கள் தொழில் சார்ந்த பொருட்காட்சிகள், கருத்தரங்குகளில் பங்கு பெறுங்கள்.
- நீங்களும் வெற்றி பெறுங்கள்; அவர்களும் வெற்றி பெறட்டும் விளையாட்டில் ஒரு அணி வெற்றி பெற, மற்றொரு அணி தோல்வி பெற வேண்டும். ஆனால் தொழிலில் அனைவரும் வெற்றி பெற முடியும். உங்களுக்கு மூலப் பொருள் விற்பவர்களுக்கும், உதிரி பாகங்கள் செய்து கொடுப்பவர்களுக்கும் உரிய காலத்தில் பணத்தைக் கொடுங்கள். இன்றைக்கு, நாளைக்கு என்று தள்ளிப் போடாதீர்கள். அவர்கள் இடையூறு இல்லாமல் தொழில் செய்யும்போதுதான் தொடர்ந்து உங்களுடன் மகிழ்ச்சியுடன் வணிகம் செய்வார்கள். உங்கள் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், தாங்கள் கொடுத்த பணத்துக்கு மதிப்பு உள்ள பொருளைப் பெற்றோம் என்ற மனநிறைவு கொள்ளும் அளவுக்கு உங்கள் பொருளின் தரம் இருக்க வேண்டும். இப்படி எல்லோரும் வெற்றி பெறுகிறார்கள் என்ற நிலை உங்கள் தொழில் வெற்றிக்குத் துணை நிற்கும்.
- புதிய பாதைகளையும் சிந்தியுங்கள் பிறர் வெற்றி பெற்ற தொழில்களை அவர்கள் போலவே நடத்தி வெற்றி பெறுபவர்கள் நிறையப் பேர். பிறர் சென்று பாதை அமைத்த தொழில்களில் வெற்றி பெறுவதும் ஒப்பீட்டளவில் எளிது. அப்படி இருந்தாலும் அதே தொழில்களில் புதுமையை எற்படுத்துவது வெற்றி வாய்ப்புகளை இன்னும் அதிகரிக்கும். மசாலா பொடிகள் லாலா மசாலா காலத்தில் இருந்தே இருப்பதுதான். ஆனால் சக்தி மசாலாவும், ஆச்சி மசாலாவும் இந்த அளவுக்கு விற்பனை ஆவதற்கு என்ன காரணம்? அவர்கள் கடைப்பிடித்த புதுமையான உத்திகள்தான். வீட்டு பயன்பாட்டு பொருள்கள் விற்பனைக் கடைகள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பிக் பசார் நிறுவனத்துக்கே ரோல் மாடலாக அமைந்த சரவணா ஸ்டோர்சின் இந்த மிகப் பெரிய வெற்றிக்கு என்ன காரணம்? அது வரை பொருள்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளும் வாய்ப்பை வேறு எந்த கடைகளும் வழங்கவில்லை. கூடவே வேறு எந்தக் கடையை விடவும் எங்களிடம் விலை குறைவாக இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்தினார்கள். இந்த இரண்டு செயல்பாடுகளும் வாடிக்கையாளர்களை அள்ளிக் கொண்டு வந்து குவித்தன. தங்கள் பிக் பசார் முயற்சிக்கு ரோல் மாடல் சரவணா ஸ்டோர்தான் என்று அதன் நிறுவனர் திரு. கிஷோர் பியானி தான் எழுதிய நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி பல தொழில்களிலும் புதுமைகளைப் புகுத்திய முன்னோடிகளையும், அவர்கள் பெற்ற வெற்றியையும் காண முடியும்.
- தொழில் செய்ய பணம் மிகத்தேவை பணத்தை எந்த அளவுக்கு நல்ல முறையில் பயன்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் லாபம் கூடுகிறது. உங்கள் சொந்தப் பணத்தை வைத்து தொழில் செய்வது மிகவும் நல்லது. ஆனால் பெரிய அளவில் ஒரு தொழிலைச் செய்யும்போது, வங்கிக் கடனை பயன்படுத்துவதும் மிகத்தேவை. வங்கியில் வாங்கும் கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். அந்த கடன் தொகையைப் பயன்படுத்தி மூலப் பொருள் வாங்கி, பொருள் உற்பத்தி செய்து விற்று, பணம் பெறுவதை அதிக அளவாக மூன்று மாதங்களுக்குள் முடித்து விட வேண்டும். அப்படி செய்யும்போது வங்கிப் பணத்தை ஒரே ஆண்டில் நான்கு முறை பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறைக்கும் 10% லாபம் என்று வைத்துக் கொண்டால் 40% லாபம் கிடைக்கும். இதில் வங்கிக் கடனுக்கான வட்டி 20% என்று வைத்துக் கொண்டால் கூட உங்களுக்கு 20% லாபம் கிடைக்கும். இப்படி உங்கள் தொழிலுக்கு ஏற்ற கணக்கிட்டு தொழிலை நடத்த வேண்டும்.
- பாதி தொழிலுக்கு, கால்பங்கு சேமிப்புக்கு, கால்பங்கு சொந்த செலவுக்கு.. ஒரு பொருளின் விலையை நிர்ணயிக்கும்போது அது ஈட்ட வேண்டிய லாபத்தையும், அதே நேரத்தில் சந்தையில் அந்த பொருளின் விலையையும் கருத்தில் கொண்டு நிர்ணயிக்க வேண்டும். எந்த தொழிலையும் லாபம் இன்றி தொடர்ந்து நடத்த முடியாது. அப்படி வரும் லாபத்தில் பாதியை தொடர் தொழில் வளர்ச்சிக்கும், கால் பாகத்தை சேமிப்புக்கும், கால் பாகத்தை சொந்த செலவுக்கும் என பிரித்து செலவு செய்ய வேண்டும். சேமிப்பையும் நிலம், தங்கம், வங்கி வைப்புகள் என்று பிரித்துப் போட வேண்டும். எதிர் பார்க்கும் லாபத்தை மனதில் வைத்து செலவு செய்யாதீர்கள். சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் வராமல் போய்விடலாம்.
- தொடர்ந்து இழப்பு வந்தால்..? துணிச்சல் இன்றி லாபம் இல்லை. துணிச்சலுடன்தான் ஒரு தொழிலில் இறங்குகிறோம். நம் எதிர்பார்ப்புக்கு மாறாக அந்த தொழில் லாபம் ஈட்டித் தராமல், தொடர்ந்து இழப்பையே தந்து கொண்டு இருந்தால் அந்த தொழிலை மூடி விடுவது நல்லது. ஒரு தொழிலை எப்போது தொடங்க வேண்டும் என்பதைப் போலவே, அதை எப்போது மூட வேண்டும் என்றும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். இழப்பை ஏற்படுத்தி வரும் தொழிலை நிறுத்தி விட்டு, மீண்டும் புதிய ஒரு தொழிலில் உங்கள் முயற்சியைத் தொடங்குங்கள். அப்போது உங்கள் தொழில் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். – கே. கே. இராமசாமி
- Advertisement -