மஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர், உவர் நிலங்கள் மஞ்சள் சாகுபடிக்கு ஏற்றது அல்ல. நீர்ப்பாசனத்துக்கு உப்பு கலந்ந தண்ணீரும் ஏற்றது அல்ல. தமிழ்நாட்டில் மே இரண்டாம் வாரத்தில் இருந்து, ஜூன் இரண்டாம் வாரத்துக்குள் நடவு செய்ய வேண்டும்.
கோ1, சுவர்ணா, ரங்கா, ராஸ்மி, சுகந்தம், ராஜேந்திர சோனியா, கிருஷ்ணா, சோமா, சுரோமா என்று பல உயர்விளைச்சல் வகைகள் உள்ளன. நிலத்தை இரண்டு முறை உழ வேண்டும். மூன்றாம் உழவின் போது ஏக்கருக்கு பத்து டன் தொழு உரம் மற்றும் எண்பது கிலோ வேப்பம் பிண்ணாக்கு இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும். பின்னர் சுமார் நாற்பது செமீ இடைவெளியில் நீள பார்களையும், குறுக்கு கால்வாய்களையும் அமைக்க வேண்டும்.
ஒரே அளவு பருமனாக உள்ள விதைக் கிழங்குளைதேர்வு செய்ய வேண்டும். நடவிற்கு ஏற்ற கிழங்குகளை தாய்க் கிழங்கு மற்றும் விரலிக் கிழங்கு என இருவகைப் படுத்தலாம். இவற்றில் தாய்க் கிழங்கே நடவுக்கு ஏற்றது. இருப்பினும் தாய்க் கிழங்கினை நடுவதற்கு அதிக அளவு விதைக் கிழங்கு தேவையாக இருப்பதால் செலவு அதிகம் ஆகிறது. எனவே சாகுபடிச் செலவை கட்டுப் படுத்த விரலிக் கிழங்கையும் நடவு செய்யலாம். தாய்க் கிழங்கு பெரிதாக இருப்பின் இரண்டாக அறுத்து நடவு செய்யலாம். மூன்றில் இருந்து ஆறு பருவக் கணுக்கள் உள்ள விரலி மஞ்சள் நடவுக்கு ஏற்றது. கிழங்கு முளைக்காத இடங்களில் தாய்க் கிழங்கில் இருந்து முளைத்த முப்பது நாள் நாற்றுகளை நட்டு நிரவலாம். இதற்கு தனியே நாற்றங்கால் அமைத்துப் பராமரிக்க வேண்டும்.
மஞ்சள் நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு எழுநூற்று ஐம்பது கிலோ தாய்க் கிழங்கு தேவைப்படும். விரலிக் கிழங்கு எனில் அறுநூறு கிலோ தேவைப்படும். பூச்சிகள், நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க பாசலோன் 35 இ.சி. அல்லது மானோ குரோட்டோபாஸ் 26 சதம் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு மிலி என்ற அளவில் கலந்து அத்துடன் இரண்டு கிராம் மேன்கோசெப் மருந்தையும் கலந்து தயாரிக்கப்பட்ட கரைசலில் கிழங்குகளை பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் 24 மணி நேரம் நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும். பார்களின் ஓரங்களில் முப்பது செமீ இடைவெளியில் ஐந்த செமீ ஆழத்தில் நட வேண்டும்.
ஏக்கருக்கு ஐம்பது கிலோ தழைச் சத்து தேவை. இதில் பத்து கிலோவை அடி உரம் இடும்போது இட வேண்டும். மீதி உள்ளதை நான்கு பகுதிகளாகப் பிரித்து முப்பது, அறுபது, தொன்னூறு மற்றும் நூற்று இருபதாம் நாட்களில் இட வேண்டும். இந்த தழைச் சத்து முழுவதையும் வேப்பம் பிண்ணாக்கு கலந்த யூரியா உரமாக இட வேண்டும். இருபத்து ஐந்து கிலோ மணிச் சத்து தேவை. இதற்கு நூற்று ஐம்பது கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை ஒரே தடவை மற்ற உரங்களுடன் அடி உரமாக இட வேண்டும். நாற்பது கிலோ சாம்பல் சத்து தேவை. இதையும் தழைச் சத்து இடுவதைப் போன்றே பிரித்து இட வேண்டும். மேலும் ரசாயன உரங்களுக்கு பதிலாக அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியம் போன்ற உயிர் உரங்களையும் பயன்படுத்துகிறார்கள். ஏழு பாக்கெட் அசோஸ்பைரில்லத்தையும், ஏழு பாக்கெட் பாஸ்போபேக்டீரியத்தையும் தொழு உரத்துடன் கலந்து கடைசி உழவின் போது இட வேண்டும். உயிர் உரங்களை ஏனைய ரசாயன உரங்களுடன் கலக்கக் கூடாது.
ஊட்டக் குறைபாடு ஏற்பட்டால் இலைகளின் ஓரங்கள் வெளிறி சுருண்டு விடும். இதற்கு ஆறு கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை பத்து லிட்டர் தண்ணீரில் முன் தினம் மாலையில் ஊற வைத்து அடிக்கடி கலக்கி விட வேண்டும். மறுநாள் காலையில் தெளிவான மேல்பாக நீரை வடித்து எடுத்து அதில் நூற்று ஐம்பது கிராம் இரும்பு சல்பேட் (அன்னபேதி), நூற்று ஐம்பது கிராம் துத்தநாக சல்பேட், நூற்று ஐம்பது கிராம் யூரியா, நூற்று ஐம்பது கிராம் போராக்ஸ் சேர்த்துக் கலக்கி இதை சுமார் இருநூற்று ஐம்பது லிட்டர் தண்ணீரில் கலந்து காலையிலோ அல்லது மாலையிலோ தெளிக்கவும்.
மஞ்சள் முளைத்து வந்த பின் அறுபது, தொன்னூறு, நூற்று இருபதாம் நாட்களில் மண் அணைக்க வேண்டும். நட்ட மூன்றாம் நாள் பாசிலின் எனும் களைக் கொல்லி இருநூறு மிலியை இருநூறு லிட்டர் தண்ணீரில் கலந்து நிலத்தில் மீது சீராகத் தெளிக்க வேண்டும். இது ஒரு மாதம் வரை களைகளைக் கட்டுப்படுத்தும். பின்னர் மண் அணைக்கும் முன் களை எடுத்து மண் அணைக்கலாம். கோடை வெப்ப காலங்களில் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். கிழங்குகள் வளர்ச்சி அடையும் பருவத்தில் இன்னும் குறைந்த கால இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
மஞ்சள் வகைக்கு ஏற்ப ஏழு, ஒன்பது, பத்து மாதங்களில் அறுவடைக்கு வரும். இலைகள் மஞ்சளாக மாறி காயத் தொடங்கிய பிறகு அறுவடை செய்ய வேண்டும். மண்ணைத் தோண்டி எடுத்த கிழங்குகளின் மீது ஒட்டி இருக்கும் சிறு வேர்கள், மண்ணை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். ஏக்கருக்கு பத்து டன் முதல் பன்னிரெண்டு டன் வரை இந்த ஈர மஞ்சள் அறுவடை செய்யப்படுகின்றன.
அதன் பிறகு மஞ்சள் கிழங்குகளை வேக வைத்தல், காய வைத்தல், மெருகேற்றுதல், சாயம் பூசுதல் ஆகிய செயல்கள் நடைபெறுகின்றன. மண் அல்லது செம்பு பாண்டங்களில் கிழங்குகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வாயை சாக்கினால் மூடி வேக வைக்க வேண்டும். தாய்க் கிழங்குகளையும், விரலிக் கிழங்குகளையும் தனித்தனியே பிரித்து வெண்ணிற ஆவி நறுமணத்துடன் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
நீருடன் காரத் தன்மை உடைய சுண்ணாம்பு மற்றும் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை லிட்டருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து கிழங்குகளை வேக வைக்கும் நடைமுறையும் உள்ளது. இம்முறையில் நல்ல ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறம் கிடைக்கிறது. கிழங்குகளை மெருகேற்ற உட்புறம் சல்லடை போன்ற அமைப்பு உடைய 32 கிலோ உலர்ந்த கிழங்குகள் பிடிக்கும் பீப்பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் கிழங்குகளை நிரப்பி கையாலோ, எந்திரத்தாலோ சுற்றி விட வேண்டும். முப்பது நிமிடங்களில் மெருகேற்றப்பட்ட மஞ்சள் கிடைக்கும்.
மஞ்சளுக்கு செயற்கையாக சாயமிடும் முறையும் இருக்கிறது. முன்னர் கெமிக்குரோம் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டு, அது உடல்நலனுக்கு உகந்தது அல்ல என்பதால் அரசால் தடை செய்யப்பட்டது. ஈரோட்டில் மஞ்சள் தூளே சாயம் இடப் பயன்படுத்தப்படுகிறது.
நாற்பது கிராம் படிகாரம், இரண்டு கிலோ மஞ்சள் தூள், நூற்று நாற்பது கிராம் ஆமணக்கு விதை, முப்பது கிராம் சோடியம் பை சல்பேட், முப்பது மிலி அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலம் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து சாயக் கலவை தயாரிக்க வேண்டும். இந்த அளவு நூறு கிலோ மஞ்சளுக்கு பொதுமானது ஆகும். பிறகு இக்கலவையை பிரம்புக் கூடையில் இட்ட மஞ்சள் மீது சீராக ஊற்றிக் சாயம் சீராகப் பரவும் வகையில் குலுக்க வேண்டும். பிறகு வெயிலில் உலர்த்த வேண்டும். இந்த முறையை மைசூர் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டு பிடித்துத் தந்தது.
பொதுவாக அறுவடை முடிந்த பதினைந்து நாட்களில் பக்குவப்படுத்துவது நல்லது. ஒரு ஏக்கருக்கு சுமார் இரண்டு டன் பக்குவப்படுத்தப்பட்ட மஞ்சள் கிடைக்கும்.
– முனைவர். முகமது அப்துல் காதர்