Latest Posts

இலவம்பஞ்சு அதிகமாக கிடைப்பது எந்த வகை மரங்களில்..?

- Advertisement -

தென் அமெரிக்காவின் அமேசான் பகுதியைத் தாயகமாய்க் கொண்டது எனக்கூறப்படும் இலவு மரங்கள் தமிழகத்தில் போடிநாயக்கனூர், பெரியகுளம், பொள்ளாச்சி, செங்கோட்டை போன்ற ஊர்களின் மலை அடிவாரப் பகுதிகளில் ஓரளவு வளர்க்கப்படுகின்றன. ஆனால் எந்த வகை மண்ணிலும் வளரக் கூடிய இம்மரங்களை மரப்பயிராக வளர்க்கலாம். பெரிய அளவுக்கு பராமரிப்பும் தேவைப்படாது. பாதுகாப்பும் தேவைப்படாது.

வாரத்திற்கு ஒரு முறை

இந்த இலவு மரங்களில் நாட்டு இலவு, கல் இலவு, செவ்விலவு என மூன்று ரகங்கள் இருந்தாலும் பெரும்பான்மையாக நாட்டு இலவு, செவ்விலவு ரகங்களே வளர்க்கப் படுகின்றன.
இலவு விதைகளை முதலில் கன்றுகளாக வளர்த்து அதன் பின்பே நடவு செய்யப்படுகின்றன. கன்றுகள் தயார் செய்வதற்கு முதிர்ந்த காய்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட விதைகளை இருபது நாட்களுக்குள்ளாக பாலிதீன் பைகளில் போதுமான அளவு மண் நிரப்பி பைக்கு இரண்டு அல்லது மூன்று விதைகளைப் போட்டு, விதைகள் முளைக்கும் வரை நாளொன்றுக்கு இரு முறையும், அதன் பின்பு முப்பது நாட்களுக்கு நாளொன்றுக்கு ஒரு முறையும், அதன் பின்பு ஐந்து மாதங்களுக்கு வாரத்திற்கு ஒரு முறையும் தண்ணீர் விட்டு வளர்த்து விட்டால் போதும். நடவு செய்ய கன்றுகள் தயார்!

வளர்ப்பு 

இரண்டடி உயரமும் 45 செ.மீ. நீள அகலமுடைய குழிகளாக 4×4 மீட்டர் இடைவெளியில் தோண்டி உலரப்போட்டுவிட வேண்டும். நன்கு உலர்ந்த பின்பு வண்டல் மண், தொழு உரம் போன்றவைகளை நிரப்பி நட வேண்டும்.
சமவெளி, புல்தரை, குன்றுகள் என எவ்விடத்திலும் இலவு மரங்கள் வளரக்கூடியதென்பதால் எவ்விடத்திலும் இம்மரங்களை வளர்க்க முடியும்.

தண்ணீர் தேவை

நடப்பட்ட இலவு கன்றுகள் ஒரு ஆண்டில் மரமாகி விடுமென்பதால் தொடர்ந்து ஒரு ஆண்டு காலத்திற்குபோதுமான அளவு நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு ஆண்டு காலத்திற்குப் பின்பு கோடை காலங்களில் மட்டும் தண்ணீர் பாய்ச்சினால் கூட போதுமானது.
தண்ணீர் கிடைக்கக்கூடிய இடங்களாயிருந்தால் அடிக்கடி தண்ணீர் பாய்ச்சலாம். அடிக்கடி தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் வளர்க்கப்படும் இலவ மரங்கள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளிலேயே காய்க்கத் தொடங்கி விடுமென்பதோடு அதிக அளவு காய்களும் கிடைக்கக் கூடும். மற்ற இடங்களில் வளர்க்கப்படும் மரங்களில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பே காய்கள் காய்க்கத் தொடங்கும்.

இலவு வகை

நாட்டு இலவாய் இருந்தால் காய்கள் அளவில் சிறியதாகவும், பழுப்பு நிறமான பஞ்சையும், அதிக அளவில் விதைகளைக் கொண்டதாகவும், காய்கள் முதிர்ந்து விட்டால் வெடித்து, பஞ்சு காற்றில் அடித்துச் செல்லப்பட்டு இழப்பை ஏற்படுத்தும் தன்மை உடையதாகவும் இருக்கும்.
செவ்விலவாய் இருந்தால் காய்கள் அளவில் மிகப் பெரியதாகவும், நாட்டு இலவைப் போல் இரண்டு மடங்காகவும், வெண்மையான பஞ்சையும், குறைவான அளவில் விதைகளை கொண்டதாகவும், காய்கள் முதிர்ந்தாலும் வெடித்துச் சிதறாத தன்மையுடனும் இருக்கும்.

அறுவடை

எட்டு ஆண்டுகளைக் கடந்த மரங்களில் உருந்து ஆண்டொன்றுக்கு நாட்டு இலவாயிருந்தால் 500 காய்களும், செவ்விலவாய் இருந்தால் 800 காய்களும் கிடைக்கும் என்கிறார்கள், பெரியகுளத்தில் இலவம் பஞ்சு வியாபாரம் செய்பவர்கள். இங்கு உற்பத்தியாகும் காய்களைத் தவிர பொள்ளாச்சி, செங்கோட்டை போன்ற ஊர்களில் இருந்தும் கேரளா மாநிலத்தின் சாலக்குடி, திருச்சூர், பாலக்காடு போன்ற ஊர்களிலிருந்தும் காய்களை வாங்கி இலவம் பஞ்சு பிரித்தெடுக்கப்படுகின்றன.

பேக்கிங்

பெரும்பாலும் காய்கள் முதிர்வடைவதற்கு முன்பாக பறித்து சூரிய வெப்பத்தில் ஐந்து நாட்கள் வரை உலர வைக்க வேண்டும். இவ்வாறு உலர வைக்கப்பட்ட காய்களின் மேல் ஓட்டை உடைத்து விதையுடன் கூடிய பஞ்சை தனியே சுமாராக 15 நாட்கள் வரை உலரப் போட்டு விட வேண்டும்.
அதன் பின்பு பஞ்சு தனியாகவும், விதை தனியாகவும் பிரித்தெடுக்கும் எந்திரத்தின் மூலம் பிரித்தெடுத்க வேண்டும். இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பஞ்சு எளிதில் காற்றில் அடித்து செல்லப்பட்டு இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இலவம் பஞ்சு நிறுவனத்தின் ஜன்னல்கள் கூட வலையால் மூடப்பட்டிருக்கும்.
குறைந்தது 100 உலர்ந்த காய்களிலிருந்து 600 கிராம் பஞ்சும், 500 கிராம் விதையும் கிடைக்கும். அதாவது 100 கிலோ காய்களிலிருந்து 40 முதல் 50 கிலோ வரை பஞ்சும் 30 முதல் 40 கிலோ வரை விதைகளும் கிடைக்கும்.

பயன்பாடு

இலவம்பஞ்சு என்றவுடனே தலையணை, மெத்தைகள் தயாரிப்பதற்கே உதவும் என்று யாரும் சொல்லி விடலாம். இலவம் பஞ்சு நூலாக நூற்க முடியாதவாறு இருப்பதால் வேறு எந்த தயாரிப்பிற்கும் பயன்படுத்த முடிவது இல்லை .

இந்த பஞ்சை  6 கிலோ எடை அளவில் பேக்கிங் செய்து இலவம் பஞ்சு தலையணை, மெத்தைகள் தயாரிப்பவர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். தமிழ்நாடு தவிர மேற்கு வங்காளம், உத்திரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றது.

பஞ்சு தவிர, விதைகள் எண்ணெய் தயார் செய்ய பயன்படுத்தப்படுவதால் விதைகள் கிலோ 4 முதல் 5 ரூபாய் வரை விலைக்குப் போகிறது. மேலும் இலவம் காய்களின் மேல் ஓடுகள் அடுப்பெரிக்கவும், ஒரு சில ஆலைகளின் தேவைகளுக்காகவும் அனுப்பப்படுகிறது.

இலவம் காய்களின் மேல் ஓடு, பஞ்சு , விதை என மூன்றுமே விலைக்குப் போனாலும் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இலவு மரங்கள் தோட்டங்களில் வேலி ஓரங்களிலும், கிணற்றிற்கு அருகிலும் வளர்க்கப்படுகிறதே தவிர தோப்புகளாக ஒரு சில ஊர்களைத் தவிர வளர்க்கப்படுவதில்லை. இலாபம் தரக்கூடிய இலவ மரங்களை அதிக அளவில் வளர்த்து இலவம் பஞ்சு உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அப்போதுதான் வெளிமாநிலங்களின் போட்டியைச் சமாளிக்க முடியும். நன்கு முதிர்ந்து விட்ட மரங்களை வெட்டியும் விற்பனை செய்ய முடியும். பெரும்பான்மையாக தீப்பெட்டி தீக்குச்சிகள் தயாரிக்க இம்மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

– எவ்வி

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news