கோபத்தினால் வரும் தீமையை திருவள்ளுவரைவிடத் தெளிவாக யாரும் சொல்லிவிடமுடியாது! அந்த அளவுக்கு கோபம் சார்ந்த குறள்கள் இருக்கின்றன. மகிழ்ச்சியைக் கொன்று விடுகிறது. சூழலை இறுக்கமாக்கி விடுகிறது. வேண்டாம் தம்பி கோபம் என்கிறார். கோபப்படாவிட்டால் நன்மை என்ன வரும்?என்கிறார். நீ என்ன நினைத்தாலும் சாதிக்கலாம் தம்பி கோபம் மட்டும் இல்லை என்றால். இதன் மாற்று கோபப்படுகிறவன் எதையும் சாதிக்க முடியாது என்பதாகும்
நிர்வாகக் கலையில் சின்ன தூரக் குதிரை, பெரிய தூரக் குதிரை என்று ஆட்களைப் பிரிப்பார்கள். கோபப்படுகிறவன் எரிந்து விழுகிறவன் – தனக்குக் கீழேயும் மேலேயும் வேலை செய்கிறவர்களை அரவணைத்துச் செல்லாதவன் சின்ன தூரக் குதிரை. எது சொன்னாலும் கேட்டுக் கொண்டு மெல்ல இணக்கமாகத் தன் கருத்தைச் சொல்லி வெற்றி பெறுகிறான் அல்லவா – அவன் நீண்ட தூரக் குதிரை.
குழுவிவாதத்தில் கோபப்படுத்துவதற்கென்றே நிர்வாகத்தில் இருந்து ஒரு ஆள் உள்ளே நுழைந்து இருப்பார். இவர் நமக்கு எரிச்சல் தரும் செய்திகளையே சொல்லுவார். நிர்வாகத்தின் ஆள் போல இல்லாமல் இவரும் தேர்வுக்கு வந்த ஆள் மாதிரிதான் இருப்பார். நீ என்ன பெரிய கொம்பன். முட்டாள்தனமாய் பேசாதே என்று நாம் திரும்பித் தாக்கினால் போச்சு! தேர்வுப் பட்டியலில் நம் பெயர் இருக்காது.
இராணுவத் தேர்வில் இதைக் கொஞ்சம் மாற்றிச் செய்வார்கள். காலில் ஒரு சுமை கையில் ஒருசுமை தலையில் ஒரு பாரம், காலுக்கு செருப்பு கிடையாது. நல்ல வெயிலில் நட என்பார்கள். 100 அடியில் உட்காருபவன், 100 மீட்டரில் சுருளுகிறவன், ஒரு கிலோ மீட்டர் நடக்கிறவன் என்று இதில் உடம்பு மட்டுமல்ல மனம், எரிச்சல் படாத மனம். எரிச்சல் பட்டால் உடனே திரும்பி விடுகிறோமே!
பேருந்தில் கூட்டத்தைப் பார்த்து, மருத்துவரிடம் வரிசை கோபம் பற்றிய சரியான கணிப்பு என்ன? எல்லை மீறும் போது அது பேரழிவுகளை விளைவிக்கும் என்பது தான். சரி– எல்லை என்றால் என்ன? அதுதான் சிக்கல். இடம், பொருள், ஏவல் கருதி அனுபவம் கொண்டு நாலும் யோசித்து செய்கின்ற முடிவுதான் எல்லை . அது இடத்துக்கும் காலத்துக்கும் ஆளுக்கும் தேவைக்கும் மாறுபடும் எல்லை .
கோபம் நல்லதில்லையா? அய்யோ ரொம்ப நல்லது. மிகவும் தேவையானது . நமது உடம்பை பாதுகாக்க, உடைமையை இழக்காமல் இருக்க, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள எல்லாவற்றுக்கும் கோபம்தான் அடிப்படை. கோபம் மட்டும் இல்லாமல் இருந்தால் – கோவில் மத்தளம் மாதிரி கண்டவன் நம்மை அடிப்பான்.
சுவற்றை வைத்துத்தானே சித்திரம். உடம்பை வைத்துத்தானே மற்ற சாதனை எல்லாம். அந்த உடம்பை குழிக்குள்ளே வைத்து மூடுகிறேன் என்று எதிரி இறங்கினால் சும்மா இருக்க முடியுமா? எனவே உயிர்போய் விடக் கூடாது. உயிரையும், உடம்பையும் பாதுகாக்க கோபம் உதவுகிறது.
அப்படித்தான் உடைமை. வாழ்க்கை என்றாலே உடைமைகளின் தொகுப்புதானே! என் அப்பா, என் அம்மா, என்தம்பி, என்வீடு, என் மொழி, என் தேசம் – முடிவில்லாத பட்டியல் இது.வாழ்க்கையின் வெற்றியை நாம் உடைமைகளின் எடை, எண்ணிக் கையில்தானே வைத்திருக்கிறோம்? உடைமைகளைப் பாதுகாக்கவும் கோபம் உதவுகிறது. கோபம் வராமல் இருக்க வேண்டுமென்றால் – ஆசை அறுமின் என்றார் புத்தர். அதை வள்ளுவர் ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’ என்றார். நாம் நீங்க முடியாது. எனவே நோதல் நம்மை விடாது. நோதலின் வெளிப்பாடே கோபம்.
இன்னொரு அடிப்படைச் சிக்கல் – தன்மதிப்பு அல்லது சுயமரியாதை. சுயம் – தான் – அகங்காரம் (EGO) எல்லாம் ஒன்றுதான். இதுவும் ஒரு உயிர் பிழைக்கும் ஏற்பாடே. அறிவின் மிக உச்ச நிலையில் உயிர்கள் எல்லாம் ஒன்றே என்ற ஞானம் வரலாம்.
ஆனால் அந்த ஞானம் பொருளியல் வெற்றிக்கு, உலகாயத மேம்பாட்டுக்கு உதவாது. செல்வம், கார், பங்களா, பணம், புகழ், மிகப் பெரிய தொழிலதிபர் – என்றெல்லாம் இலக்குகளை வைத்து உழைக்கிறவர்களுக்கு – தன் மதிப்பு ஒரு பெரிய பாதுகாப்புக் கருவி யாக உதவுகிறது. நீங்கள் கோடீசுவரர் ஆகவேண்டுமானால் – தான் என்கிற ‘ஈகோ’வுக்கு நல்ல போதை ஏற்ற வேண்டும்.
கோபம் பற்றிய சரியான கணிப்பு என்ன? எல்லை மீறும்போது அது பேரழிவுகளை விளைவிக்கும் என்பது தான். சரி- எல்லை என்றால் என்ன? அதுதான் சிக்கல்.
இடம், பொருள், ஏவல் கருதி அனு பவம் கொண்டு நாலும் யோசித்து செய் கின்ற முடிவு தான் எல்லை. அது இடத் துக்கும் காலத்துக்கும் ஆளுக்கும் தேவைக்கும் மாறுபடும் எல்லை.
குரங்குகள் சண்டை போடுவதை நான் கூர்ந்து கவனிப்பதுண்டு. ஒரு நொடியும் ஓய்வறியா விலங்கு குரங்கு. உணவு, விளையாட்டு, சண்டை என்று எப்பவும் அலைச்சல்தான்.
சண்டையில் – மிகவும் உக்கிரமாக சீறிக்கொண்டு எதிரியை விரட்டுகின்ற குரங்கு, எதிரி ஓட ஆரம்பித்து விட்டான் என்று தெரிந்த உடனே விட்டு விடுகிறது. இது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இதில் மனிதர்களுக்கும் ஒரு பாடம் இருக்கிறதல்லவா?
– மீன்காரி