சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் அனுராதா பாலாஜி. இவருக்கு சொந்தமாக பெரிய பாளையம் அருகே 8 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் இயற்கை முறையில் காய்கறிகள், நெல், பழங்கள் போன்றவற்றை விளைவித்து வருகிறார். தான் ஒரு பெண் விவசாயி என்று சொல்வதில் பெருமை கொள்ளும் அனுராதா, இயற்கை வேளாண் தொழிலுக்கு வந்த கதையை நம்மிடம் பகிர்ந்தார்.
“திருமணம் ஆகி கணவருடன் சவுதியில் இருந்தேன். பத்து ஆண்டுகள் கழித்து இங்கே வந்தோம். அப்போது எங்களுக்கு உரிமையான நிலம் ஒன்று இருந்தது. முதல் நாளில் இருந்தே அதில் ஆர்கானிக் முறையில் தான் விளைச்சல் செய்தோம். இப்படிதான் படிப்படியாக விவசாயத்திற்குள் நுழைந்தேன்.
Also read: செடிகள் வளர்க்க சின்ன குறிப்புகள்
பழ மரங்களான மா, கொய்யா, சப்போட்டா, நெல்லிக்காய் ஆகிய மரங்கள் உள்ளன. நெல், பந்தல் காய்கறிகள் என்று பயிரிடுகிறோம். சுற்றி தேக்கு, தென்னை என்று எல்லாமே விளைகிறது. கேன்சருக்கு பரிந்துரைக்கப்படும் கிராவியோலா பழமும் எங்கள் நிலத்தில் இருக்கிறது. “ஒவ்வொரு சீசனுக்கும் என்ன நன்றாக விளையுமோ அதை விளைவிப்போம். சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை மட்டுமே விதைப்போம். கால் ஏக்கரில் பண்ணைக்குட்டை அமைத்து அதில் மீன்களை வளர்கின்றோம். எங்களிடம் கிட்டத்தட்ட 20 பசு மாடுகள் இருக்கின்றன. அவற்றின் கழிவுகளான சாணம், கோமியம் ஆகியவற்றை உரமாகப் பயன்படுத்துகின்றோம். நிறைய விவசாயி களுக்கு இப்போது நான் இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கிறேன்.
விளைந்த காய்கறிகளை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறோம் என்கிறார்.
– தா. மு. குறளமுதன்