Latest Posts

இலை வழி மரம் வளர்ப்பு

- Advertisement -

இலையை பறித்து நட்டால் அது வேர் விட்டுச் செடியாக வளரும் என்பதை தனது கண்டுபிடிப்பின் மூலம் நிரூபித்துள்ளார் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி எஸ். ராஜரத்தினம்.

திசு வளர்ப்பு முறை (Tissue Culture) அடிப்படையில் ‘இலை வழி நாற்று முறை’ எனப்படும் இந்த நுட்பம் நடைபெற்று உள்ளது. பொதுவாக, விதைகளில் இருந்து தான் வேர் உருவாகி, செடி, மரம் ஆகியவை வளரும். இதனால், மரங்களை வளர்ப்பதற்கு விதைகள் அதிக அளவில் தேவைப் படுகின்றன. தற்போது சந்தைபடுத்தப்படும் பெரும் பாலான விதை ரகங்கள் மரபணுக்களில் மாற்றம் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இதை சரிசெய்ய களம் இறங்கிய ராஜரத்தினம், இலையிலிருந்து செடியை உருவாக்கும் ‘இலை வழி நாற்று முறையை அறிமுகம் செய்து வேளாண் விஞ்ஞானி களை வியப்பு அடையச் செய்து உள்ளார். அவர் கூறியதாவது, ”2010ஆம் ஆண்டு முதல் ‘இலை வழி நாற்று முறை’ குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறேன். பொதுவாக, பத்து லட்சம் மரக்கன்றுகளை உருவாக்க, பத்து லட்சம் விதைகள் தேவைப்படும். இதுவே, ஒரு மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருப்பதால், அவற்றையே விதையாக பயன்படுத்த முடியுமா என்ற அடிப்படையில்தான் இதை கண்டுபிடித்தேன். இதன் மூலம் உற்பத்திச் செலவு 30 சதவீதம் குறையும். அதே நேரத்தில் அதிகளவில் மகசூலும் கிடைக்கும்,” என்கிறார். ஐம்பது வயதாகும் இந்த விவசாயி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பண்ணைத் தொழில்நுட்பத்தில் இளங்கலை முடித்துவிட்டு, தற்போது முதுகலை பயின்று வருகிறார்.

”இலைவழி நாற்று முறை என்பது மிக எளிமையான இயற்கையான ஒரு நாற்று முறை. கலப்படம் இல்லாத மரபணுக்களைக் கொண்ட தாய் மரத்தில் இருந்து சுத்தமான ரகத்தின் இலையை எடுத்து, இளநீரில் ஊறவைத்து, ஈரமான மண்ணில் நட்டுவைத்துவிட்டு, மிதமான சூரிய ஒளியில் வைத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தண்ணீர் ஊற்றினால் போதும், நான்கு வாரத்தில் இலையிலிருந்து வேர் உருவாகிவிடும்.”

”இதுவரை இலைவழி நாற்று உற்பத்தி முறையில் கொய்யா, நாவல் மரங்களை உருவாக்கியுள்ளேன். தற்போது வேப்ப மரக் கன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். மேலும் அழிவின் விளிம்பில் இருக்கும் பல்வேறு தாவர வகைகளை மீட்டுருவாக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன்.”

”தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம், நடுவண அரசின் சிறு, குறு, மத்திய தொழில் களுக்கான அமைச்சகம் ஆகியவை 6.25 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கி எனது முயற்சியை ஊக்குவித்துள்ளன,” என தெரிவிக்கிறார் இவர். இந்த புதிய கண்டுபிடிப்புக்காக காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறார் வேளாண் விஞ்ஞானி என பாராட்டப்படும் விவசாயி ராஜரத்தினம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு இலை வழி நாற்று முறை குறித்த பயிற்சி வகுப்புகளையும் எடுத்து வருகிறார்.

”இலை வழி நாற்று முறையில் அனைத்து மரங்களையும், அரிய வகை மூலிகைச் செடிகளையும் மீட்டுருவாக்கம் செய்து, இயற்கையை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். மேலும், இம்முறையின் மூலம் மரம் வளர்ப்பை எளிமையாக்கி, தரமான தாவரங்களையும் பசுமையான சூழலையும் உருவாக்குவதே எனது நோக்கம். இலை வழி நாற்றுமுறை என்பது எதிர்காலத்தில் மிகப் பெரிய பசுமை புரட்சியாக அமையும்,” என நம்பிக்கை தெரிவிக்கிறார் ராஜரத்தினம்.

”திசு வளர்ப்பு முறை அடிப்படையில்தான் இலை வழி நாற்று முறையும் சாத்தியமாகி உள்ளது. திசு வளர்ப்பில் ஊக்கிகளை (inducers) பயன்படுத்தி அணுக்களின் வளர்ச்சி தூண்டப்படும். அதுபோலவே, இலையின் நடுவே இருக்கக்கூடிய நடுக்காம்பின் வளர்ச்சியை தூண்டுவதால் வேர் உருவாகக்கூடிய சாத்தியத்தை இவர் உறுதிபடுத்தி உள்ளார். சில தாவரங்களில் விதையில் இருந்தே நோய்கள் இருக்கும். இந்த முறையில் அவை தடுக்கப்படும். மேலும், அரிய வகை தாவர வகைகளை மீட்பதில் இலைவழி நாற்று முறை வருங்காலத்தில் பெரும்பங்கு வகிக்கும். இந்திய அளவில் முதல்முறையாக கோவையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது தமிழகத்திற்கு பெருமை,” என்கிறார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கத்தின் முன்னாள் இயக்குநர் ரா. முருகேசன்.

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news