விஜயபாரதி மற்றும் செந்தமிழ்ச்செல்வி என்கிற இரண்டு பெண்கள் ஒன்றிணைந்து சென்னை, வில்லிவாக்கத்தில் பாரதி அகடாமி என்கிற பெயரில் அரசுதேர்வு பயிற்சி நிலையத்தை துவங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவரான விஜயபாரதி நம்மிடம் தொழில் பயிற்சி பற்றி பகிர்ந்துகொண்டபோது..
என் கணவர் சென்னைத் துறைமுகத்தில் நடந்த விஷவாயு விபத்து ஒன்றில் இறந்தார். கையில் இரு குழந்தைகள். உறவுகள் கைக்கொடுக்காத சூழலில் எம்.எஸ்.சி. பி.எட்., கல்வியறிவு ஒன்றினை மட்டுமே மூலதனமாகக் கொண்டு நம்பிக்கையுடன் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்தேன். நேர்முத் தேர்வுக்கும் சென்றேன். ஆனால், ஆங்கிலம் சரளமாகப் பேசவில்லை என்ற ஒரே காரணத்தினால், என்னை நிராகரித்துவிட்டனர். அடுத்தடுத்துச் சென்ற பள்ளிகளிலும் இதேநிலை தொடர்ந்தது. ஆனாலும், மனம் தளரவில்லை. அப்போது, தேர்வுகளுக்குப் பயின்று வந்த செந்தமிழ்செல்வியுடன் இணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினேன்.
தமிழ் வழி படிப்பறிவு மற்றும் பாட அறிவு இருந்தும் வேலை கிடைப்பதில் உள்ள சிரமங்களையும், போட்டித் தேர்வுகளின் கடினம் என்ன என்பதையும், ஒரு இல்லத்தரசியாக, அம்மாவாக இருந்து கொண்டே படிப்பதன் கஷ்டத்தையும் உணர்ந்தேன். தமது வீட்டிலேயே ஒரு அறையில் பாரதி பெண்கள் படிப்பகம் என்ற பெயரில் ஒரு குழுவினைத் தொடங்கி அதன் ஒருங்கிணைப்பாளராக பொறியியல் பட்டதாரியான செந்தமிழ் செல்வியை நியமித்தேன். பின்னர், முற்றிலும் பெண்களுக்கான இலவசப் படிப்பகம் என்று மாற்றி, பாரதி அகாடமி என்ற பெயரில் வில்லிவாக்கத்தில் ஒரு பயிற்சி நிலையத்தை உருவாக்கினேன்.
பெண்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், கோடை வகுப்புகள் தொடர்ந்து வழங்கினேன். அடுத்தடுத்த தேர்வுகளில் இங்கு பயின்றவர்களின் தேர்ச்சி அதிகரித்தது. எனவே, ஒரு பயிற்சி தொழில் முனைவோராகவும் உயர்ந்தேன். மாணவர்களை மதிப்பெண் வங்கியாக மட்டும் உருவாக்குதல் கூடாது எனப் பள்ளி மாணவர்களுக்கான “கருத்துப் புரிதலுடன் கூடிய தனிப்பயிற்சியை” தொடங்கினேன். இவர்களின் சரியான புரிதல் பயிற்சி மாணவர்களுக்கு ஆழமான புரிதல் கல்வியையும் அதிக மதிப்பெண்களையும், பெற்றோருக்கு மகிழ்வையும் அளித்தது. அதன் விளைவாக, ஒரு மாணவன் என தொடங்கிய பயிற்சி நூறைத் தாண்டியது. மாணவர்களை செயல்வழிக் கல்வியில் செலுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்தினேன்.
தாய்மொழி வழிப் புரிதலே சரியான கல்வியறிவைத் தரும் என்ற நோக்கத்துடன், சென்ற ஆண்டு “தமிழ் பண்பாட்டுக் கலாச்சார விழா” என்ற பேராண்மையாக நடத்தினேன். அரசுப் பள்ளிகளுக்குச் சென்று இலவசக் கல்வி விழிப்புணர்வு முகாம்கள், போட்டித் தேர்வு விழிப்புணர்வு முகாம்கள் வழங்கி வருகிறேன்.
இத்தகைய கல்விச் சேவைகளைப் பாராட்டி 2017 ஆம் ஆண்டிற்கான ஹோம்ப்ரீனியர் “சுயசக்தி விருது” கிடைத்தது. கோடை விடுமுறையில் ஆங்கிலப்பயிற்சி முகாம்களில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஆர்வம் காட்டும் அளவிற்கு தமிழ் பேச ஊக்குவிப்பதில்லை. தாய்மொழியில் படித்து ஆழமாகக் கருத்துக்களை உள்வாங்கியதால்தான் எங்களால் மற்றவர்களுக்கு வழிகாட்டுதல் எளிமையாக உள்ளது” என்றார். இவருக்கு துணையாகவும், பாரதி அகாடமி பயிற்சியகத்தின் பொறுப்பாளராக இருக்கும் செல்வி. செந்தமிழ்செல்வி தற்போது, ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று, நேர்காணலுக்காக காத்திருக்கிறார். இவர்களிடம் படித்த பல மாணவர்கள் தமிழ்நாடு அரசு துறையில் வேலை செய்து வருகின்றனர்.
– தாமு. தமிழமுதன்