அசைவ உணவு என்றாலே, அனைவருக்கும் நினைவில் வருவது டாடி ஆறுமுகம் தான். சமையல் அனுபவங்கள் பற்றி அவர் கூறியது, எனக்கு சமையல் மீது சிறுவயதில் இருந்தே ஆர்வம் இருந்தது. ஆனால், நடிகனாக வேண்டும் என்பதே என் கனவு. கி. கருணாநிதி என்பவரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அவர் ஓட்டல் மாமியார் என்ற உணவகத்தை நடத்தி வந்தார். அதில் மூன்று ஆண்டுகள் வேலை செய்தேன். அங்கு நிறைய நடிகர்கள் சாப்பிட வருவார்கள். அவர்களிடம் பேசி இருக்கிறேன். குடும்ப சிக்கல் எனவே வேறு இடம் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை.
பின்பு, கேரளாவில் ஒரு செட்டியார் வீட்டில் தோட்டவேலை, சமையல் வேலை போன்றவற்றை செய்தேன். அப்பொழுது தான், சமையலில் ஆர்வம் அதிகம் ஆனது. என் குடும்பத்தைப் பிரிந்து தான் இத்தனை வேலைகளை செய்தேன். பின், குடும்பத்துடன் சேர்ந்து விட்டேன். பெயின்டிங் கான்ட்ராக்ட் எடுத்து செய்தேன். எனக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஒருநாள் என் பெரிய மகன் வெளியில் மலைப்பகுதி ஓரம் அழைத்துச் சென்று, சமைக்கும்படி கூறினார். அதை வீடியோ எடுத்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
முதல்முறை, நண்டு மற்றும் மீன் வைத்து சமைத்தேன். அவர் அதை வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி எனப் பெயரில் யூடியூப்-ல் பதிவிட்டார். எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஐந்து லட்சம் பேர் பார்க்கும்வரை எனக்கு அதைப்பற்றிய புரிதல் என்பது இல்லை. அதன்பிறகு, என் மகன் எனக்கு விளக்கினார். இப்படியே, பல இடங்களுக்கு சென்று சமையல் செய்தோம். முதல் வீடியோ பதிவிட்டு ஒருமாதம் வரை, 6 பேர்தான் பார்த்து இருந்தனர். திடீரென்று எப்படி வைரல் ஆனது என்று தெரியவில்லை. இரவு 2000 பேர் பார்த்து இருந்தனர். மறுநாள் காலை, 20,000 என்று காட்டியது. அந்த வார இறுதியில் 4,00,000 பேர் பார்த்து இருந்தனர். அது, எங்களுக்கு மிகப்பெரிய மன உறுதியை கொடுத்தது. நாம் சரியான வழியில்தான் பயணித்துக் கொண்டு இருக்கிறோம் என்று மகிழ்ச்சி அடைந்தோம்.
அடுத்து, ஆடு வைத்து சமைத்த ஒரு வீடியோவானது பதிவு இட்ட 20 நாட்களில் 5 மில்லியன் வியூவைத் தொட்டது. அந்த ஆடு வாங்க எங்களிடம் பணம் இல்லை. என் மனைவியின் தேடை விற்று ஆடு வாங்கினோம். இந்த வீடியோவைப் பதிவிட்ட பிறகு, ஒரு மாதத்தில் 7000ரூ. வருமானம் வந்தது. அடுத்த மாதத்தில் 40,000 வருமானம் வந்தது. வருமானத்தைவிட மனநிறைவுப் பெருகியது. வெளியில் செல்லும்போது, என்னைப் பார்த்த அனைத்து முகத்திலும் அன்பு கலந்த சிரிப்பு. அப்பா! நீங்கள் யூடியூப்-ல் வருகிறவர்தானே? என்று கேட்கும்போது, நம் கஷ்டத்திற்கு தீர்வு வந்துவிட்டது என்று நினைப்பேன். ஒரு நடிகன் ஆகி இருந்தால், எவ்வளவு மனநிறைவு அடைந்து இருப்பேனோ அதை நான் உணர்ந்தேன். முதலில், இணையத்தில் பகுதிநேர வேலையாக சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தொடங்கினோம். ஆனால், எதிர்பாராத வெற்றியைக் கொடுத்தது.
அவர் மகன், கமெண்டில் இவர் யார் என்று பல வெளிநாட்டு மக்கள் கேட்டு இருந்தனர். நாங்கள் விளக்கத்தில் (Description) தயாரிப்பு- செஃப், தயாரிப்பு- டாடி என்று கொடுத்தோம். சிலர் அப்பாவா? மகன் சொல்லி அப்பா செய்கிறாரா? என்று கேட்டனர். டாடி என்பது பொருத்தமாக இருந்தது. எனவே, டாடி ஆறுமுகம் என்ற பெயரை தேர்ந்து எடுத்தோம். என்று கூறினார்.
இந்த வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரியில் நான் சமைத்ததில் அனைவருக்கும் பிடித்தது கேஎஃப்சி சிக்கன்தான். மைதா, சோளமாவு, பூண்டு பொடி, முட்டை, உப்பு போன்றவைதான் அவற்றில் சேர்க்கப்பட வேண்டிய பொருட்கள். எனக்கு பிடித்த அசைவ உணவு நாட்டுக் கோழிக்கறி, மட்டன் உப்புக் கறி.
சிறிய அளவில் தொடங்கினோம், பெரிய வெற்றியைத் தந்தது. சிறுதுளி பெருவெள்ளம் என்று கூறினார் டாடி ஆறுமுகம்.
– சா.கு. கனிமொழி