தற்போது, பலரும் வீட்டில் மாடி தோட்டம் அமைக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், மாடி தோட்டம் அமைக்கும் போது குறிப்பாக செய்கின்ற ஐந்து தவறுகளினால், மாடி தோட்டத்தில் வைக்கும் செடிகள் செழிப்பாக வளர்வது இல்லை.
மாடி தோட்டம் வைக்க போகிறோம் என்ற ஆர்வத்தில் தொட்டியில் மண்ணை நிரப்பி, செடியை நட்டு வைத்து விடுவோம். இது முதல் தவறாகும். மண்ணில் சில இயற்கை கலவைகளை சேர்க்க வேண்டும். அதாவது, மண்ணில் மக்கக்கூடிய பொருள் களான, காய்ந்த இலை, சமையலறை கழிவுகள், காகிதங்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 15 நாட்கள் வரை மண்ணை மூடி வைக்கவும். பின்பு 15 நாட்கள் கழித்து அந்த மண்ணை தொட்டியில் நிரப்பவும். அதன் பிறகு, விதைகளை விதைக்கவும் அல்லது செடிகளை நடவும். இவ்வாறு செய்தால் செடிகள் நன்றாக செழிப்புடன் வளரும்.
மாடி தோட்டத்தில், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது சிலர் தொட்டிகள் நிறைய தண்ணீரை ஊற்றுவார்கள். இது இரண்டாவது தவறாகும். எப்போதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது செடிகளுக்கு சிறிதளவு தண்ணீர் தான் ஊற்ற விடும். அதிகளவு தண்ணீர் ஊற்றினால், செடியின் வேர்ப்பகுதி அழுகிவிடும். எனவே, தேவையான அளவு தண்ணீர் ஊற்றினாலே செடிகள் நன்றாக வளரும்.
அதேபோல் செடிகளுக்கு காலை அல்லது மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்ற வேண்டும். பகல் நேரங்களில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவத்தை தவிர்க்கவும். அவ்வாறு செய்தால், சூரிய ஒளியின் வெப்பத்தால் செடி விரைவில் கருகிவிடும்.
மாடி தோட்டத்தை அமைப்பதோடு இல்லாமல் அதை ஒழுங்காக பராமரிக்க வேண்டும். செடிகளில் எளிதாக பூஞ்சை நோய்களின் தாக்குதல்கள் ஏற்படும். எனவே, மாடி தோட்டத்தை தினமும் பராமரிக்க நேரம் இல்லா விட்டாலும், வாரத்தில் ஒரு முறையாவது செடிகளை கட்டாயம் பராமரிக்க வேண்டும்.
அதாவது, வாரத்தில் ஒரு முறை செடிகளுக்கு வேப்பம் பிண்ணாக்கு கரைசல் அல்லது இஞ்சி பூண்டு விழுதுகளை அரைத்து செடிகளின் மீது தெளிக்கவும். அவ்வாறு செய்தால், பூஞ்சை நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியும். செடிகளின் தன்மையை தெரிந்து செடிகளை சரியான தட்பவெப்ப நிலை உள்ள இடத்தில் வைக்க வேண்டியது மிகவும் அவசியம். அதாவது, ஒரு சில தாவரங்கள் வறட்சியை தாங்கக்கூடியதாக இருக்கும். ஒரு சில தாவரங்கள் குறைந்த வெப்பத்தில் வளரக்கூடியதாக இருக்கும். எனவே மாடித்தோட்டத்தில் வைக்கும் தாவரத்தின் தட்பவெப்ப நிலையை அறிந்துகொண்டு செடிகளை சரியான இடத்தில் வைக்க வேண்டும்.