ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக முதன்முதலில் பதவி ஏற்க செல்லும் நிலையில், அவருடைய தந்தையார் ஒரு முழுக்காலணி தயாரிப்பாளராக இருந்து வந்தார். அதனால், நம்மை போன்றோர் ஆட்சி அதிகாரத்தில் இல்லாது, சாதாரண காலணி தயார் செய்பவனின் மகன் நமக்கு மேல்நிலையில் ஜனாதிபதியாக பதவியேற்பதா என பலர் மிகவும் மன வருத்தத்துடன் இருந்தனர்.
மக்களால் நிறைந்த அந்த கூட்டத்தின் முதல் நாளில், ஆபிரகாம் லிங்கன் தனது தொடக்க உரையை ஆற்றுவதற்காக கூட்ட அரங்கில் நுழைந்தபோது, அந்த கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து நின்று, திரு. லிங்கன், அவர்களே உங்களுடைய தந்தை எங்களுடைய குடும்ப உறுப்பினர். அனைவருக்கும் காலணிகளைத் தயாரித்து வழங்கியவர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ” என கூறியதும் அங்கு கூடியிருந்த மேட்டுகுடி மக்கள் அனைவரும் ஆபிரகாம் லிங்கனை நன்றாக மட்டம் தட்டினர். ஆனால், லிங்கன் அவ்வாறு பேசிய மனிதரைப் பார்த்து, “ஐயா, என் தந்தை உங்கள் குடும்ப உறுப்பினர். அனைவருக்கும் காலணிகளைத் தயாரித்து வழங்கியதை நான் அறிவேன். அவர் ஒரு சிறந்த படைப்பாளி. அவர் உருவாக்கியது வெறும் காலணிகள் மட்டுமல்ல. செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என அவர் தனது முழு மனஈடுபாட்டுடன் அந்த பணியை செய்துகொண்டு இருந்தார்.
உங்கள் குடும்ப உறுப்பினர் எவரேனும் அவர் தயார் செய்த காலணியின் மீது புகார் ஏதேனும் கூறி இருக்கின்றனரா? எனக்குத் தெரிந்தவரை, என் தந்தையின் காலணிகளைப் பற்றி இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. ஏனென்றால், அவர் காலணிகளை உருவாக்கிய விதம்போல், வேறு யாராலும் முடியாது. அவ்வாறு திறனுடனும், நுகர்வோரின் மன நிறைவு அடையுமாறும் தன்னுடைய பணியை செய்து வந்தார். அவர் ஒரு மேதை, படைப்பாளி, நான் என் தந்தையை நினைத்துப் பெருமைப்படுகிறேன்! ஏன் உங்களுக்கு தேவை என்றால் கூறுங்கள், எனக்கும் காலணிகளை உருவாக்கத் தெரியும். நான் தயார்செய்து வழங்க தயாராக இருக்கின்றேன் என ஆபிரகாம் லிங்கன் பதில் கூறினார்.
அவை முழுவதும் அமைதியாகி விட்டது. அவர் காலணி தயாரிப்பதை ஒரு கலையாகவும், படைப்பாற்றல் மிக்க பணியாகவும், பெருமிதம் கொண்டார். ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற போதிலும், அவ்வாறு தன்னுடைய தந்தை செய்த பணியில் புகார் ஏதேனும் எழுந்தால் அதனை தான் சரிசெய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். நீங்கள் அந்த பணியை முழுமனதுடன் செய்ய வேண்டும். உங்கள் சொந்த விருப்பத்துடன், உங்கள் கோணத்தில் செய்ய வேண்டும். பின், நீங்கள் எதைத் தொட்டாலும் அது தங்கமாக மிளிரும்.
– முனைவர். ச. குப்பன்