காடு போன்று நெருக்கமாக மரங்களை வளர்த்து விவசாயம் செய்வது எப்படி என்று கூறுகிறார் திருக்கழுகுன்றத்தை சேர்ந்த இயற்கை விவசாயி திரு. இறையழகன்.
என் பண்ணையின் பெயர் தமிழ் நிலம் தமிழ் பண்ணை. இதை உருவாக்கி 10 ஆண்டுகள் ஆகின்றது. இது, 15 ஏக்கர் பரப்பளவுகளை கொண்டது. நீண்டகால மரங்கள் 15 அல்லது 20 ஆண்டுகள் கழித்து பலன் கொடுக்கும். அதுவரைக்கும், நமக்கான வருவாய்காக அன்றாடம், வாரம், மாதம் பலன் கொடுக்கக் கூடிய பழ மரங்களான சப்போட்டா, நெல்லி, கொய்யா, எலுமிச்சை, மா, வாழை, தென்னை, பலா போன்றவற்றை வைத்து இந்த இயற்கைப் பண்ணையை உருவாக்கி உள்ளேன். அதுமட்டும் இல்லாமல், என் பண்ணையை பண்ணைச் சுற்றுலா மையமாக மாற்றவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்.
அதற்கு ஏற்றாற்போல், தாழ்வானப் பகுதியில் ஒரு பண்ணைக் குளம் அமைத்து உள்ளேன். அதில், கட்லா, ரோகு, கெண்டை, மிர்கால் என நான்கு வகையான மீன்களை வளர்க்கிறேன். சுற்றுலா வருபவர்கள் மீன் பிடிக்கலாம், மிதிபடகு சவாரி செய்யலாம். குளத்திற்கு மூங்கில், தேக்கு, மகோகனி போன்ற நீண்டகால பலன் தரக்கூடிய மரங்களை வைத்து உயிர்வேலி அமைத்து உள்ளேன். நாம் ஒரு மூங்கில் நட்டால் அது, நாளடைவில் 50 மரங்களாக வளர்ந்து நிற்கும்.
கடந்த 2 ஆண்டுகளாக நிலத்திற்கு இடுபொருள் எதையும் சேர்க்கவில்லை. ஏனென்றால் அதற்கு முன்பு, 7 ஆண்டுகளாக ஜீவாமிர்தம், பஞ்சகவ்வியம் போன்ற இடுபொருள்களை சேர்த்து மண்ணை நன்கு வளப்படுத்தி உள்ளேன். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடுபொருள் சேர்க்கலாம் என்ற முறையானது இந்த நிலத்திற்குப் போதுமானது ஆகும். மேலும், 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் விடுகிறேன். ஏனென்றால் மரங்களில் இருந்து உதிர்கின்ற காய்ந்த இலைகள் கீழே மூடாக்குபோல் உள்ளது. அவை ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளும். ஈரமும், இருட்டும் இருப்பதால் அங்கு நுண்உயிரிகள் இருக்கும். அவை மண்ணை மேலும் வளப்படுத்தும்.
தற்போது, பண்ணையில் 150 நெல்லி, 100 கொய்யா, சப்போட்டா போன்ற மரங்கள் உள்ளன. வரிசைக்கு வரிசை 20 அடியும், செடிக்கு செடி 15 அடி இடைவெளி விட்டு நட்டு உள்ளேன். அந்த இடைவெளியில் செம்மரம், மகோகனி போன்ற வணிக மரங்களை வைத்து உள்ளேன். இப்போது, பண்ணையில் 100 வகையான மரங்கள் மொத்தம் 10,000 உள்ளன.
நெல்லி வருடத்திற்கு இரண்டு முறை காய்கள் காய்க்கும். ஒரு நெல்லி மரத்தில் ஏறக்குறைய 200 நெல்லிக்காய்கள் கிடைக்கின்றன. எலுமிச்சை, பருவம் இல்லை என்றாலும் மரத்தில் காய் இருந்துக்கொண்டே இருக்கும். எனக்கு இதில் ஓரளவு வருமானம் கிடைத்து விடுகிறது. அதை வைத்து மேலும் பண்ணையை நன்கு என்னால் வளப்படுத்த, மேம்படுத்த முடிகிறது. நெல், வேர்க்கடலை ஆகியவற்றை பயிரிடமாட்டேன். வருமானத்தைப் பொருத்தவரை அவை நிரந்தரம் இல்லை.
அடுத்து, மரங்களையே தூண்களாக வைத்துப் பந்தல் அமைத்து உள்ளேன். அவ்வாறு செய்கையில் இடம் பற்றாக்குறை என்பது கிடையாது. அதில் புடலங்காய், பாகற்காய் போன்ற கொடி வகைகளை வளர்கிறேன். அனைத்தும் நாட்டு காய்கறி வகைகள் ஆகும். மருத்துவ குணம் உடைய வெற்றிலையை வளர்த்து அதை நாற்றாக அனைவருக்கும் வழங்கவேண்டும் என்பது என் எண்ணம். வெற்றிலைக் கொடியில் நன்கு முற்றிய பகுதியே வெற்றிலை நாற்று ஆகும் (இரண்டு கணுக்கள் மட்டும் தெரியும் அளவு).
நாங்களே இயற்கை உரங்களை தயாரிக்கிறோம். ஆடு, மாடு கழிவுகளையும் உரமாக பயன்படுத்துகிறோம். மேலும், நெல்லி, வெல்லம், கடுக்காய் தூள் இவற்றை 50 நாட்கள் ஊறவைத்து அதை உரமாகப் பயன்படுத்துகிறோம்.
மரம் வளர்க்கிறோம் என்றால், மேலே பார்த்தால் வானம் தெரியக்கூடாது, கீழே பார்த்தால் நிலம் தெரியக்கூடாது என்ற நம்மாழ்வாரின் சொல்லை நான் மெய்பிக்க விரும்புகிறேன். இன்னும் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் 25 வகையான காய்கறிகள், 50 வகையான பழங்கள், 500 வகையான மரங்கள் வைக்கவேண்டும் என்பதே என் இலக்கு ஆகும்.
-சா.கு. கணிமொழி