விவசாயிகளுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருப்பது மார்க்கெட்டிங் தான். விளைச்சல் நன்றாக இருக்கும்போது மார்க்கெட்டில் அதற்கான விலை குறைவாக இருக்கும். விலை சற்று அதிகமாக இருக்கும்போது விளைச்சல் குறைவாக இருக்கும். குறிப்பாக நெல் விவசாயிகளுக்கு லாபம் என்பது முழுமையாகத் தடைப்பட்டு உள்ளது. அவர்கள் நெல் விளைவித்து அதை ரைஸ்மில்லில் கொடுத்து அரிசியாக மாற்றி அதை விற்று வரும் பணத்தில் பாதி மில்லுக்கு கொடுக்கவேண்டும். அரிசி விற்கும் மொத்த வியாபாரிகள் அதை குறைந்த விலைக்கு வாங்கி இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்று அவர்கள் இலாபம் பார்க்கின்றனர். எனவே, இவர்களே சொந்தமாக சின்ன ரைஸ்மில் வைக்கலாம் என்ற நிலை தற்போது இருக்கிறது. அதில் அவர்களுக்கு இலாபமும் கிடைக்கலாம்.
பாக்கம் என்ற பகுதியில் ஜெயக்குமார் என்பவர் ஒரு அரிசி அரவை எந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார். அந்த எந்திரம் பார்ப்பதற்கு சிறியதாகவும், ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எளிதாகவும் உள்ளது.
அந்த எந்திரம் ஒரு மணி நேரத்தில் 100 கிலோ நெல்லை அரிசியாக மாற்றுகிறது. எட்டு மணி நேரத்திற்கு ஒரு டன் வரை அரிசியாக மாற்றுகிறது. இதற்கு அதிக அளவு மின்சாரமும் தேவை இல்லை.
இந்த எந்திரத்தில் அரிசியின் அளவுக்கு ஏற்றவாறு மாறுபாடு செய்வதற்கான ஆப்ஷன்களும் உள்ளன. மெலிதான நெல்களுக்கு ஏற்ற மாறுபாடுகளும், பெரிய அளவிலான நெல்லுக்கு ஏற்ற மாறுபாடுகளும் அதில் உள்ளன. அரிசியாக மாறும்போது சில அரிசி உடைந்து வரும். அவற்றை பிரிப்பதற்கும் அதில் வழி இருக்கிறது. அதாவது, உடைந்த அரிசி ஒரு வாயில் வழியாகவும், முழு அரிசி ஒரு வாயில் வழியாகவும் வருவதற்கான அமைப்பு அந்த எந்திரத்தில் உள்ளது.
அதுமட்டும் இல்லாமல், உமி, தவிடு ஆகியவற்றையும் தனியாகப் பிரிக்கிறது. அதை கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படுத்தலாம்.
நெல்லை நன்கு உலர வைத்து பயன்படுத்தும் போது, மாற்றுதல் பணி சற்று வேகமாக நடைப்பெறுகிறது. இந்த எந்திரத்தின் மூலம் நுகர்வோர்களுக்கு என்ன பயன் என்றால் இதன்மூலம் பெறப்படும் அரிசியானது பட்டைத் தீட்டாதது ஆகும். அதாவது பாலிஷ் செய்யாதது ஆகும். சிவப்பு அரிசியானது 90% சிவப்பு நிறத்துடன் கிடைக்கிறது. ஆனால் ரைஸ்மில்லில் அரிசி சற்று நிறம் குறைந்துக் காணப்படுகிறது. அரிசி வாங்கிக் கொண்டு போனவர்கள் உடையவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.
விளைவித்த உற்பத்தியாளரால் அந்த பொருளை முழுமையாக நுகரமுடியவில்லை. ஆனால், இந்த எந்திரத்தால் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தர முடியும். சரியான விலைக்கு விற்கமுடியும் என்கின்றபோது தேவையான நெல்லை எடுத்து அரிசியாக மாற்றி பயன்படுத்தும் வாய்ப்பை இந்த எந்திரம் ஏற்படுத்தித் தருகிறது. நெல் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால், அரிசி வண்டு வைத்துவிடும். எனவே இதன் மூலம் பொருட்களையும் பாதுகாக்கலாம்.
இது, தற்பொது 40,000ரூ. க்கு விற்கப்படுகிறது. இந்த எந்திரத்தின் மூலம் வருங்காலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தலாம். அதாவது, இதன் விற்பனை அதிகம் ஆகும்போது, ஆறுமாதங்கள் கழித்தோ அல்லது ஒரு வருடம் கழித்தோ பழுது பார்க்கும் தேவை ஏற்படும். எனவே, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நுகர்வோர்களின் வீட்டிற்கு அனுப்பி சரி பார்க்கலாம்.
உற்பத்தியாளர்களுக்கு இந்த எந்திரம் பெரும் உதவியாக இருக்கும், இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.