காசோலை ஒன்று கிடைக்கப் பெற்றால் அந்த காசோலையில் எழுதப்பட்டு உள்ள தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் வங்கியில் வழங்கி அந்த தொகையை நம் கணக்கில் வரவு வைக்கச் செய்ய வேண்டும். ஒருவேளை அவ்வாறு தொகையை வரவு வைக்காமல் காசோலை கொடுத்தவர் கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பினால், அந்த காசோலை கொடுத்தவருக்கு, அந்த காசோலையில் குறிப்பிடப்பட்டு இருந்த பணத்தை உடன் வழங்கக் கோரி, முப்பது நாட்களுக்குள் கடிதம் ஒன்றினை அனுப்ப வேண்டும்.
அவ்வாறான கடிதம் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் காசோலை வழங்கியவர் பணம் வழங்கி விட வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை எனில் பாதிக்கப்பட்டவர் இதற்கான நீதிமன்றத்தில் Cheque Bounce குறித்து வழக்கு தொடுக்கலாம். வழக்கு பதிவு செய்யப்பட்ட ஆறு மாதங்களில் நீதிமன்றம் தீர்ப்பு அளக்க வேண்டும் என சட்டம் உள்ளது.
இவ்வாறு காசோலைகள் திரும்புவதால் தொழில் நிறுவனங்கள் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு தடுமாறுகின்றன. இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த தொகையை பெறுவதற்குள் போதும் போதும் என ஆகி விடுகிறது. இவ்வாறான நிலையில் செலாவணி முறிச் சட்டம் 1881 இல் பிரிவு 143கி, 148 ஆகிய இரண்டிலும் திருத்தம் செய்து கடந்த செப்டம்பர் 1., 2018-ல் இருந்து நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது.
Also read:வங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா? இல்லை என்கிறார்கள், வல்லுநர்கள்!
தொடர்புடையவர் மீது வழக்கு தொடுத்த பின்னர் இடைக்கால நிவாரணமாக 20% -க்கு மிகாமல் 60 நாட்களுக்குள் வட்டியும் சேர்த்து வழங்குமாறு நீதிமன்றம் உத்திரவிடலாம். இந்த உத்திரவின்படி தொடர்புடைய நபர் தொகை வழங்கத் தவறினால் அவருக்குச் சொந்தமான சொத்துகளை மாவட்ட ஆட்சியர் வாயிலாக பொது ஏலத்தில் விற்பனை செய்து பாதிக்கப்பட்டவருக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்திரவிடலாம்.
பிரிவு 148 இன் படி பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடுத்தவுடன், காசோலை கொடுத்தவர் நீதிமன்றத்ததில் 20% தொகையை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். வழக்கில் காசோலை கொடுத்தவருக்கு சார்பாக தீர்ப்பு வந்தால், அந்த 20% தொகையும் அதற்கான வட்டியும் சேர்த்து அவருக்கு திருப்பி வழங்கப் பெறும்.
– ச. குப்பன்