Latest Posts

வங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா? இல்லை என்கிறார்கள், வல்லுநர்கள்!

- Advertisement -

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்த தகவல்கள், நம் சின்னத்திரை நெடும் தொடர்களுடன் போட்டியிடும் அளவுக்கு நீளும் போல! தொடக்கத்தில் 11,000 கோடி ரூபாய் என்றார்கள். பின்னர் அது 12,000 என்ற வரம்பைத் தாண்டியது. அடுத்து வந்த இழப்பு குறித்த தகவல் 13,000 கோடியைத் தொட வைத்து உள்ளது. ‘நிதி இழப்பு’, இப்படி வளர்ந்து கொண்டே போவது கவலை அளித்தாலும், தற்போதைய சிக்கல் இது மட்டும் அல்ல! இந்த இழப்பைக் காரணம் காட்டி, இந்திய வங்கித் துறையின் எதிர்காலம் குறித்து வரையப்படும் கற்பனை ஓவியம்தான் அதிர வைக்கிறது.


பிஎன்பி தந்த அதிர்ச்சி போதாது என, அதன் பின்னால் வரிசைக்கட்டி நின்ற வேறு சில வங்கி மோசடிகளும் வலு சேர்க்க, “பொதுத்துறை வங்கிகளை, தனியார் மயமாக்கி விடலாம்” என, ஆரம்பத்தில் தயங்கி, தயங்கி வெளியான குரல்கள், பின்னர் ஆணித்தரமான கட்டுரைகளாகவே வெளியாகத் தொடங்கிவிட்டன.


பொதுத் துறையில்…. அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் வங்கிகளில் இது போன்ற மோசடிகள் நடக்கின்றன. அரசின் முழு கண்காணிப்பில் இருந்து இவற்றை விடுவித்துவிட்டால்…. இது போன்ற தவறுகள் நடப்பது சாத்தியம் இல்லை; நடந்தாலும், இந்த அளவிற்கு இருக்காது என்கிறார்கள். தங்கள் கருத்துக்கு ஆதரவாக, வரிசையாக பல காரணங்களை முன்வைக்கிறார்கள்.


சென்னை மேலாண்மைக் கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம் சொல்வது இதுதான், “பொதுத்துறை வங்கிகளின் முதல் சிக்கல், வங்கி வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் தொடங்குகிறது. அரசுத் துறையின் சமூகப் பொறுப்பு காரணங்களுக்காக ஆள் சேர்ப்பில் தொடங்கும் இது, பின்னர் அவர்களை நிர்வகிப்பது வரை நீள்கிறது என்கிறார். பலவற்றில், ஒரு வரம்புக்கு மேல் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவதில்லையாம். இரண்டாவது காரணம் என, அவர் ஆங்கில எழுத்தின் நான்கு ‘சி’க்களை குறிப்பிடுகிறார். Court, CBI, CVC, CAG… போன்றவை.


அதாவது நீதிமன்றம், சிபிஐ, மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் போன்ற அமைப்புகளின் உத்தரவுகளுக்கு… கருத்துகளுக்கு… தலையீட்டுக்கு பயந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் பொதுத்துறை வங்கிகள் உள்ளனவாம். அது வங்கிகளின் நிர்வாக வேகத்தைத் தடுக்கிறது என்கிறார். அதோடு, தனியார்மயம் இந்த சிக்கலைத் தீர்க்கும் என்கிறார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக, தனியார் துறைதான் நாட்டில் சொத்து உருவாக்கத்தில் பங்களித்து வருகிறது என கூறும் அவர், மூன்றாவது காரணமாகச் சொல்வது, வங்கித் துறையின் தற்போதைய நடப்புகளுடன் தொடர்புடைய 5 ஆங்கில எழுத்து ‘
R ‘களை! Recognition, Resolution, Recapitalization, Reforms, Regulation… அதாவது – முதலில் வாராக் கடன்களை அடையாளம் காண்பது…, பிறகு அவற்றின் தீர்வுக்கு வழி காண்பது…, வங்கிக்குத் தேவைப்படும் கூடுதல் மூலதனத்துக்கு ஏற்பாடு செய்வது…, தடம் மாறாமல் சீர்திருத்தங்களை அமலாக்குவது…, அதோடு தேவையான கட்டுப்பாடுகளை அமலாக்கி, அவற்றைக் கண்காணித்து வலுப்படுத்துவது.


இதில், கடைசி நடவடிக்கையில் ஏற்பட்ட தளர்வுதான் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடிக்கு காரணம். ஆனாலும், அதற்கு முந்தைய நடவடிக்கையான சீர்திருத்தத்திலேயே வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டும் என்பதையும் அர்விந்த் சுப்ரமணியம் வலியுறுத்துகிறார். “இப்போது இல்லாமல், வேறு எப்போது…. இது இல்லாவிட்டால், வேறு என்ன?” என்ற இரு கேள்விகள்தான், வங்கி தனியார் மயத்துக்கு ஆதரவான அவரது மொத்த வாதத்தின் அடிநாதம்.


அர்விந்த் சுப்ரமணியம் மட்டுமல்ல; மற்ற பலர் முன்வைக்கும் கருத்துகளும் கிட்டத்தட்ட இதை ஒட்டியவைதான். இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ், “பொதுத் துறையில் இத்தனை வங்கிகள் இந்தியாவுக்கு தேவையா?” என்ற கேள்வியை முன் வைக்கிறார். தனியார் வங்கிகளில் இத்தனை பெரிய மோசடிகள் நடந்ததாக தான் கேள்விப்பட்டதே இல்லை என்றும், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் தொடங்கிய தனியார்மயம், அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றால் மட்டும் போதாது; சிறப்பான செயல்பாட்டுக்கு, அவற்றை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், வங்கிகளில் அரசின் பங்கு மூலதனத்தை 49 சதவீதத்துக்கு அல்லது அதற்கும் கீழ் குறைத்துக் கொள்ளலாம் என்கிறார்.


பேங்க் ஆஃப் பரோடாவின் தற்போதைய தலைவர் ரவி வெங்கடேசன், தனது சொந்த கருத்தாகச் சொல்வது இதுதான். பொதுத்துறை வங்கி நிர்வாகிகள், அவர்களது வேலையை… கடமையைச் செய்வதை விட, அவர்களது எஜமானர்களான ‘அரசியல்வாதி(!)’களின்… அவர்களது நிழலாகச் செயல்படும் அதிகாரிகளின் ஆணைகளுக்கு காத்திருப்பதில் செலவிடும் நேரம்தான் அதிகம். தவறான பரிந்துரைகளின் பேரில்.. தவறான நபர்களுக்கு…. அவர்களது தகுதியை மீறி கடன் கொடுத்துவிட்டு, பின்னர் வாராக்கடன் பாக்கி என அலைய வேண்டிய நிலைக்கு பொதுத் துறை வங்கிகள் தள்ளப்படுவது நின்றாலே அவை பிழைத்து கொள்ளும்.


தனியார் துறை வங்கி நிர்வாகிகள், ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு இறங்கி வருவது அதிகமில்லை; அவசியமும் இல்லை. அதோடு, பொதுத்துறை வங்கியின் நிர்வாகக் குழுவில் இடம்பெறும் ஆட்கள், ஆட்சியில் உள்ள கட்சிக்கு இணக்கமானவர் களாகவே அமர்த்தப்படுவதால், அவர்கள் விரும்பியபடிதான் கடன் தொகை விநியோகம் நடக்கிறது என்று புலம்புபவர்கள் நிறையவே உண்டு. இது போன்ற நியமனங்கள் பொதுத்துறை வங்கிகளின் ஒவ்வொரு மட்டத்திலும் நடப்பதால்தான், பொதுமக்கள் பணத்தைக் காப்பாற்ற தனியார் மயம்தான் தீர்வு என நினைக்க வேண்டி இருக்கிறது. இந்த கருத்தை ஆமோதிக்கும் வங்கியாளர்கள் பலர்.


“இன்னும் எத்தனை காலத்துக்கு, இது போன்ற கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளப் போகிறோம்” என்ற கதியில் கொதிக்கிறார் மூத்த பத்திரிகையாளரான சேகர் குப்தா. இந்திரா காந்தியைப் போன்ற துணிச்சல் மிக்க பிரதமர் என கருதப்படும் மோடிதான், இந்த விஷயத்தில் தனது உறுதியைக் காட்டி, பொதுத்துறை வங்கிகள் மோசடிகளிலும், கடன் சுமையிலும் முழ்கிவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்பது சேகர் குப்தாவின் கோரிக்கை. இன்று ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை சரியாகவும், வேகமாகவும் பயன்படுத்திக் கொண்டு முன்னேற, வங்கிகளை பொதுத் துறையில் வைத்து இருப்பது பயன்தராது. தனியார்மயம்தான், தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுக்கும் என்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நந்தன் நீல்கேணி.


இப்படியாக, தனியார்மயத்துக்கு சாதகமாக பல வாதங்கள் முன் வைக்கப்பட்டாலும், அவை அனைத்துக்கும் பதில் சொல்லத் தயாராக இருக்கிறார்கள், பொதுத்துறை வங்கிகளின் தனியார்மயத்துக்கு எதிரானவர்கள். இந்திய வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சி ஹெச் வெங்கடாசலம், “பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி நடந்தது… பேங்க் ஆஃப் பரோடாவில் மோசடி நடந்தது என்றெல்லாம் சொல்வது இருக்கட்டும்… வேறு எந்த வங்கியில் நடக்கவில்லை என்பதை யாராவது சொல்லட்டும்.


ஐசிஐசிஐ வங்கியும், எஸ் பேங்கும், ஆக்சிஸ் வங்கியும், ஹெச்டிஎஃப்சி வங்கியும் பொதுத்துறை வங்கிகளா…? அந்த வங்கிகளிலும் இதுபோன்ற முறைகேடுகளும், மோசடிகளும் வெவ்வேறு அளவுகளில், வெவ்வேறு இடங்களில் நடக்கத்தான் செய்கின்றன. அவற்றைப் பற்றி, அந்த வங்கி நிர்வாகங்கள்… ஊழியர்கள்… மீடியாக்கள்… அதிக முக்கியத்துவம் கொடுத்து தகவல் வெளியிடுவது இல்லை. அவ்வளவுதான். ரிசர்வ் வங்கியிடம் புள்ளி விவரங்களை கேட்டு வாங்கி பாருங்கள், எல்லா வங்கிகளும் இதில் ஒரே மாதிரிதான் என்பதை புரிந்து கொள்ள முடியும்!” என சவால் விடுகிறார்.


“பொதுத்துறை வங்கிகளுக்கு, பொதுமக்களின் பணத்தில் இருந்து தொடர்ந்து பல ஆயிரம் கோடிகளை மூலதனமாகக் கொட்டிக் கொடுக்க வேண்டி இருக்கிறதே…! அதைச் சரியாக பாதுகாக்காத… பராமரிக்காத… இந்த வங்கிகளுக்கு மீண்டும் வாரி… வாரி… பணத்தைக் கொடுப்பதை விட, தனியார் மயமாக்குவது சரியான நடவடிக்கைதானே?” என்று கேட்டால், சீறுகிறார்கள் பொதுத்துறை வங்கி ஊழியர்கள். “பொதுத்துறை வங்கியில் அரசு ஏற்கனவே செய்த… தற்போது செய்யும் முதலீட்டை, ஒரு தனிநபர் செய்யும் முதலீடு போல பார்க்கக் கூடாது.


அரசு, பல பொது நோக்கம் கொண்டது. அதையும் தாண்டி, வங்கியில் உள்ள மத்திய அரசின் பங்கு முதலீட்டின் மீது, ஒவ்வோர் ஆண்டும் டிவிடெண்டாக திருப்பித் தரப்படும் தொகையைக் கணக்கிட வேண்டாமா? அதைத் தாண்டி, வங்கியில் உள்ள பணத்தை பல்வேறு அரசுத் திட்டங்களுக்கு…. தொழில் திட்டங்களுக்கு…. கடனாகப் பெறுவதில், அதைப் பயன்படுத்துவதில் அரசுக்கு பயன் கிடைப்பதில்லையா…. அதற்கான விலை என்ன? ஒரு தனியார் முதலீடு போல பார்த்தாலும், எல்லா பங்கு முதலீடுகளும், எல்லா ஆண்டுகளிலும் எவ்வளவு லாபம் கிடைக்கிறது?…. தொடர்ந்து லாபம்தான் கிடைக்கிறதா…. இடையில் ஓராண்டு நஷ்டம்… அல்லது குறைந்த லாபம் போன்றவை நடப்பதில்லையா…. ஒருவேளை, அரசு தன்னிடம் உள்ள வங்கிகளை எல்லாம் தனியார்மயமாக்கிவிட்டால், அதன்பின் மக்களை எட்ட நினைக்கும் திட்டங்களுக்கு தனியார் வங்கிகள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பார்கள்…. அதற்கு எவ்வளவு செலவாகும்…. என்பதையும் பார்க்க வேண்டும்.


அதிலும், இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில்…. சமூக ரீதியாகவும்….. பொருளாதார ரீதியாகவும்…. பெரும் ஏற்ற இறக்கங்கள் கொண்ட இந்தியாவில், பொதுத்துறை வங்கிகள் ஆற்றும் பணியின் நிஜமான வீச்சையும், தாக்கத்தையும் தெரியாதவர்கள்…. உணராதவர்கள் பேசுவதை அரசு அப்படியே ஏற்றுக் கொள்ள முடியுமா? என எதிர்கேள்வி கேட்கிறார்கள்.


மறுபுறம், மற்ற உலக நாடுகளில் நடப்பதை எல்லாம் பார்த்துவிட்டு, அதை இந்தியாவிலும் செயல்படுத்த நினைப்பவர்களுக்கு எனது கேள்வி இதுதான் என சீறுகிறார், வங்கி நடைமுறையும், வரலாறும் தெரிந்த மற்றொரு பொருளாதார வல்லுநர். தனியார் வங்கிகள் சிறப்பாக செயல்படுவதாக எந்த அடிப்படையில் சிலர் சொல்கிறார்கள் எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லாவற்றுக்கும் இவர்கள் எட்டிப் பார்க்கும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கூட… கடந்த கால அனுபவங்கள் சொல்வது என்ன…? பெரும் தோல்வி கண்ட லேமென் பிரதர்ஸ் அரசு வங்கியா என்ன….! அது எப்படி திவாலானது? Sub Prime Crisis என அமெரிக்காவில் தொடங்கியதில், ஒட்டு மொத்த உலகமே ஆடிப்போன நேரத்தில், முழ்கிப் போனவை எல்லாம் அரசு வங்கிகளா….? எனவே, தனியார் வங்கிகள் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள் என்பதை எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்பதே விளங்கவில்லை. உள்நாட்டில் எடுத்துக் கொண்டாலும், புதிய தலைமுறையின் முதல் தனியார் வங்கி என, சான்றான வங்கியாக தொடக்கத்தில் எடுத்துக்காட்டப்பட்ட குளோபல் டிரஸ்ட் வங்கி திவால் ஆனது எப்படி? அது அரசு கட்டுப்பாட்டிலா இருந்தது?


ஆக, ஒரு வங்கியின் தோல்வி என்பது, அதை நிர்வகிக்கும் தனிநபர்களை… அவர்களது செயல்பாடுகளைப் பொறுத்ததுதான். ஏற்றுக் கொண்டுள்ள கட்டுப்பாடுகளை தீவிரமாகக் கடைபிடிக்க ஏற்பாடு செய்தாலே… அவை கடைபிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்தாலே… வங்கிகள் சிக்கலுக்கு உள்ளாவதைத் தடுத்துவிடலாம். இதில் தனியார் வங்கி, பொதுத்துறை வங்கி என்ற பாகுபாடு எந்த வகையிலும் உதவாது. இப்போது நடந்திருப்பது அதீத ஆசை கொண்ட தனிநபர்களின் கூட்டணியில் நடந்துள்ள மோசடி! இது எங்கும் நடக்க வாய்ப்புண்டு என்கிறார்கள் சில மூத்த வங்கியாளர்கள்.


இன்னொருபுறம், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குதல் என்றால், உண்மையாகவே, என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. சான்றாக, இன்றைக்கு பங்கு விலக்கல் நடைமுறை மூலம், மத்திய அரசிடம் உள்ள பொதுத்துறை வங்கிகளின் பங்குகளில் ஒரு பகுதியை பொது விற்பனை மூலம் பொது மக்களுக்கு விற்பது என்பது ஒன்று. இதன்படி, இன்று பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா என பல வங்கிகளின் பங்குகள், தற்போதும் பொது மக்களிடம் உள்ளன.


ஆனால், 51 சதவீத பங்குகள் வரை மத்திய அரசிடம் இருந்தால், அதன் பின் மத்திய அரசு எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்பதால், அதை மாற்ற வேண்டும் என்பதே தனியார்மயக் கோரிக்கை என்றால், அப்படியான ஒரு முடிவு – இந்தியா போன்றதொரு நாட்டிற்கு ஏற்றதா என்ற கேள்வி நியாயமானதாகவே தெரிகிறது. இப்போதைக்கு எந்த அவசியமும், அவசரமும் இல்லை என்றே தோன்றுகிறது.

-ஆர். சந்திரன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news