அதிர்ச்சி கொடுத்த ஜிடிபி

அண்மையில்தான் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பைப் பற்றி அறிவித்தார். ஆனால் அதைத் தொடர்ந்து வந்து உள்ள இந்தியப் பொருளாதாரம் குறித்த ஜிடிபி (Gross Domestic Product) தரவுகள் அதிர்ச்சி கொடுப்பதாக இருக்கின்றன. 2019 – 20 நிதி ஆண்டுக்கான, 2019 ஏப்ரல் – 2019 ஜூன் காலாண்டு காலத்துக்கான, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் ஜிடிபி வெறும் 5 சதவிகிதம் என அறிவிக்கப்பட்டு அனைவரையும் ஏமாற்றம் அடையச் செய்து இருக்கிறது.

கடந்த 2018 – 19 நிதி ஆண்டின் மார்ச் 2019 காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் ஜிடிபி 5.8 சதவிகிதமாக இருந்தது. மக்களிடையே நுகர்வில் ஏற்பட்டிருக்கும் சரிவுதான் இந்த 0.8 சதவிகித ஜிடிபி சரிவுக்கு முதன்மையான காரணமாக இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டு காலங்களில், இந்தியப் பொருளாதாரம் ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரையான காலத்தில்தான் மிகக் குறைந்த வளர்ச்சி கண்டு இருக்கிறது.

போதுமான முதலீடுகள் வராதது, தேவைகள் குறைந்தது போன்றவைகள்தான் இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு காரணம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

ஜிடிபி வளர்ச்சி குறித்து, பொருளாதார ஆலோசகர் திரு. கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், 2019 – 20 நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கலாம் எனச் சொல்லி இருந்தார்.

ஆர்பிஐ தன்னுடைய ஆகஸ்ட் மாத நிதிக் கொள்கைக் கூட்டத்தில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2019 – 20 நிதி ஆண்டில் 6.9 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்து இருந்தது. அதே நேரத்தில் 2019 – 20 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான முதல் அரையாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவிகிதமாகவும், அடுத்த அக்டோபர் 2019 – மார்ச் 2020 வரையான அரையாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவிகிதமாகவும் இருக்கும் எனக் கணித்து இருந்தது.

உலகின் முக்கிய அனலிஸ்ட் நிறுவனங்களில் ஒன்றான க்ரிசில், இந்தியாவின் 2019 – 22 நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சியை 6.9 சதவிகிதமாக நிர்ணயித்து இருக்கிறது. இதற்கு காரணமாக மோசமான வானிலை, உலக பொருளாதார மந்த நிலைகளைச் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்திய பொருளாதாரம் முதல் அரையாண்டில் மந்த நிலையில் இருந்தாலும், அடுத்தடுத்த வட்டி விகித குறைப்பு, நுகர்வு போன்ற காரணங்களால் அடுத்த அரையாண்டில் நிலை கொள்ளும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

– அரசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here