Latest Posts

அரசுடமையில் ஐம்பது ஆண்டுகள்

- Advertisement -

கடந்த ஜுலை 19, 2019 உடன் 14 தனியார் வங்கிகள் அரசுடமையாகி அரை நூற்றாண்டாகி விட்டது. அதற்குப் பின்னர், 1980ல் மேலும் சில தனியார் வங்கிகளை பிரதமர் தேசிய மயமாக்கினார்.

இன்று அந்த வங்கிகளின் நிலைமை என்ன? பொது மக்களுக்குச் சாதகமா… பாதகமா? அவற்றின் சேவையும், தரமும் மேம்பட மைய அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்?

சாதனை: பாசிட்டிவான அம்சங்களை முதலில் கவனிக்கலாம். விரல் விட்டு எண்ணினாற் போன்ற ஒரு சில பெரும் செல்வர்களுக்கு மட்டுமே 1969 வரைஅவை கடன் அளித்து வந்தன. நடை பாதையில் கடை வைத்திருப்பவர்கள், சிறிய ஊரில் தொழில் நடத்திப் பிழைப்பவர்கள், விவசாயிகள் போன்ற பலரும் வங்கியை அணுகி, கடன் பெற்று, முன்னேறலாம் என்ற நிலைக்கு வந்தது 1969க்கு பின்தான். இதை யாரும் மறுக்க இயலாது.

2010 க்குப் பிறகு, கணினியின் செயல்பாடு மெருகேறி, ‘ஆதார வங்கித் தன்மை’ (கோர் பாங்கிங் சிஸ்டம்) நுழைந்தவுடன், வங்கிகளின் சேவை மிகவும் மாறி விட்டது.

குறைந்த செலவில், உடனே தொகை அனுப்பும் வசதி, இல்லத்தில் அமர்ந்து கொண்டே கைபேசி மூலம் இருப்பைத் தெரிந்து கொள்ளவும், பணப் பரிமாற்றம் செய்யவும் இருக்கிற வாய்ப்பு, விடுமுறையானால் கூட, அண்மையில் இருக்கும் ஏடிஎம்மில் பணம் எடுக்கிற பயன்பாடு… என்று பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. (இதனாலேயே தொடர் விடுமுறை, வேலை நிறுத்தம் போன்றவற்றால் வாடிக்கையாளர்கள் பெருமளவு பாதிக்கப்படுவது கிடையாது.)

சோதனை: முதலில் குறிப்பிட வேண்டியது ஆட்குறைப்பும், வல்லுநர்கள் பற்றாக்குறையும். சுமார் 50 லட்சம் கடன் தொகைக்கு விண்ணப்பித்து வரும் வாடிக்கையாளருக்கு கூட சரியான, தெளிவான பதில் சொல்ல அதிகாரிகள் இல்லை. “… இல்லை, விடுப்பு” “உங்கள் கிரெடிட் ஸ்கோர் பார்க்கணும்” “சிஸ்டம் சரியாக வேலை செய்யவில்லை” “மேலதிகாரி மாற்றலாகி விட்டார்” போன்ற சாக்கு போக்குகள் சொல்லி, வாடிக்கையாளரை இழுத்தடிக்கிறார்கள்.

இதனாலேயே வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்ற பிரிவுகளுக்கான கடன்களை வங்கிகள் உடனே வழங்குகின்றன போலத் தோன்றுகிறது.

அடுத்ததாக வாராக் கடன். இதனால் அனைத்து வங்கிகளுமே விழிபிதுங்கி நிற்கின்றன. நானறிந்த வரையில், ஒரு கோடிக்கு மேல் (இன்று 25 கோடியாக இருக்கலாம்) கடன் வழங்கும் போது இரண்டு அல்லது மூன்று வங்கிகள் சேர்ந்துதான் வழங்குவார்கள். மத்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரியும் இதில் இடம் பெறுவார். இப்படியிருக்கும்போது, ஏக் தம் நூறு கோடி கடன் பெற்று, ஓடி விடுகிறார்கள். இது எப்படி நடைபெறுகிறது? நிச்சயமாக அரசியல் தலையீடு இருப்பதால்தான்.

மூன்றாவது பணியாளர்களிடம்… கடை நிலை ஊழியரில் இருந்து பொது மேலாளர் வரை… தென்படும் ஒழுக்கக் கேடு, விரைவில் பணம் குவிக்கலாம் என்கிற மனநிலை எல்லாரிடையேயும் பரவி உள்ளது. கேஒய்சி போல கேஒய்எஸ் (Know Your Staff -உங்கள் ஊழியரை தெரிந்து கொள்ளுங்கள்) என்ற தன்மை கொணர வேண்டும் என்று ஓய்வு பெற்ற மூத்த மேலதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

மைய அரசு வங்கிகளின் நிலைமையை முற்றும் உணர்ந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

வேதனை: என்னதான் சேவையில் முன்னேற்றம் இருந்தால்கூட, பல “பற்றுகள்” இருப்பில் திடீரென வந்து விடுகின்றன. மேலும், எஸ்எம்எஸ் எனும் குறுஞ்செய்தி அனுப்ப என்று மாதம்தோறும் குறிப்பிட்ட கட்டணம் வசூல் பண்ணினாலும், முக்கியமான அம்சங்களில் குறுஞ்செய்தி வருவதில்லை.

என் நண்பரின் மகனுக்கு வீட்டுக் கடனில், வீடு காப்பீடு செய்யும் போது ஒரேயடியாக 5 ஆண்டுகளுக்கு சேர்ந்து மொத்தமாக பற்று வைத்து விட்டார்கள். அதே போல், பாதுகாப்புக் கட்டணத்துக்காக, இருப்பில் உள்ள ஆயிரம் ரூபாயை எடுக்க முடியாமல் ‘நிறுத்தி’ விட்டார்கள். வங்கியின் கோணத்தில் இது சரியாக இருக்கலாம். ஆனால் முன்னறிவிப்பு தராமல் செய்யலாமா?

எல்லா வங்கிகளுமே இது போன்ற சிக்கல்களுக்குத் தரும் ஒரே பதில்: “நாங்கள் பண்ணவில்லை சார்,. சிஸ்டம் செய்து விடுகிறது.” சிஸ்டம், பேக்கேஜ், ரன் போன்ற சொற்களை படித்தவர்களாலேயே புரிந்து கொள்ள முடிவதில்லை. சாதாரண வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்வார்களா?

முன்பு பாரத ஸ்டேட் வங்கி செய்து வந்த பல வேலைகளை… வருமான வரி, ஓய்வூதியம் – அரசு வங்கிகளின் மீது சுமத்தி விடுவதால், ஒரு சாதாரண வாடிக்கையாளர் கேட்கிற சந்தேகங்களுக்குப் பதிலளிக்க நேரம் இருப்பதில்லை.

ஆனாலும், ஒரு சிலர்,, இன்னும் சில ஆண்டுகளில், வங்கிக்குள் நுழைந்து கேள்வி கேட்டாலே ‘சார்ஜ்’ பண்ணி விடுவார்கள். நாம் சேமிக்கும் தொகைக்கும் கட்டணம் போடுவார்கள் போல இருக்கிறது என்று அஞ்சுகிறார்கள். வருங்காலத்துக்காக சேமிக்கும் பழக்கம் அதிகம் உள்ள இந்தியாவில், அந்த நிலைமை வருவதற்கான வாய்ப்பு அரிது.

ஆனாலும், தொழில் துறை மேலும் வளர்ச்சி பெற, விரைவில் விண்ணப்பங்களை ஆராய்ந்து கடன் வழங்கும் திறமை உள்ள இளைஞர்களை நியமித்து பயிற்சி அளிப்பதும் மைய அரசின் பொறுப்பாகும். வாடிக்கையாளர் சேவையை இன்னும் மேம்படுத்த வேண்டியதும் மிகத்தேவை.

– வாதூலன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news