மத நம்பிக்கை உள்ள பெற்றோராக இருப்பதுதான் குழந்தை வளர்ப்புக்கு நல்லது என்று நம்பிய காலம் போய் விட்டது என்பதை அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வுகள் காட்டுகின்றன. இது பற்றி, “லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்சில்” ஒரு கட்டுரை வந்திருந்தது. How Secular Family Values Stack up என்ற தலைப்பில், ஃபில் ஜுக்கர்மேன் (Phil Zuckerman) என்பவர் அந்தக் கட்டுரையை எழுதி இருந்தார். இவர் சமூக இயல் துறையில் பேராசிரியராக அமெரிக்காவின் பிட்சர் (Pitzer) கல்லூரியில் பணியாற்றுகிறார். பல நூல்களையும் எழுதி உள்ளார்.
டியூக் பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வில், மத நம்பிக்கை இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் இனவெறிக்கு ஆளாவது இல்லை; சக மாணவர்களின் தீய பழக்கங்களால் கெட்டுப் போவது இல்லை; மனதில் வஞ்சம் வைப்பது இல்லை; தேசிய வெறிக்கு ஆட்படுவது இல்லை; போரை விரும்புவது இல்லை; அதிகாரப் போக்கு அவர்களிடம் வருவது இல்லை; சகிப்புத் தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது கண்டு அறியப்பட்டது.
மத நம்பிக்கையோடு வளர்க்கப்படும் குழந்தைகளைக் காட்டிலும், மத நம்பிக்கை இல்லாதவர்களாக வளர்க்கப்படும் குழந்தைகள் பல அம்சங்களிலும் சிறந்தவர் களாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
தற்போது அமெரிக்காவில் மதம் அற்றவர்களின் எண்ணிக்கை 23 விழுக்காடாக உயர்ந்து இருக்கிறது. 1950 களில் அமெரிக்காவில் மதம் அற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 4 விழுக்காடு மட்டுமே. அறிவியல் சிந்தனைகள் வளர்ந்து வருவதால் கடவுள் நம்பிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. மதம் சாராத வகையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்ற கோணத்தில் ஆய்வு செய்யும் உளவியல் அறிஞர் திரு. ஜுகர்மேன் இப்படிச் சொல்கிறார் –
”மதம் அளிக்கின்ற பாதுகாப்பும், அறச் சிந்தனையும் இல்லை என்றால் மனிதர்கள் செயல் அற்றவர்களாக, நம்பிக்கை இழந்தவர்களாக, நோக்கமற்றுத் திரிபவர்களாக, குற்றங்கள் செய்வதற்கு அஞ்சாதவர்களாக ஆகிப் போவார்கள் என்று மத நம்பிக்கைகளை ஆதரிப்பவர் களால் கருதப்படுகிறது.
ஆனால் அது அப்படி இல்லை; மதங்களை நம்புகிறவர்களில் நிறையப் பேர்கள் செயல் அற்றவர்களாகவும், நம்பிக்கை இழந்தவர்களாகவும், நோக்க மற்றுத் திரிபவர்களாகவும், குற்றங்கள் செய்வதற்கு அஞ்சாதவர்களாகவும், வன்முறையாளர்களாகவும் இருப்பதை பொதுவாகவே நம்மால் அனைத்து இடங்களிலும் பார்க்க முடிகிறது. இதை ஆய்வுகளும் அப்படியே உறுதிப்படுத் துகின்றன.”
மதமற்ற குடும்பங்கள் குழந்தைகளுக்கு சிறந்த அடித்தளத்தை உருவாக்கித் தருகின்றன என்கிறார், பேராசிரியர் திரு. வெம் பெங்ஸ்டன் (Vem Bengston). பல தலைமுறைகளின் மாற்றம் பற்றிய நீண்டகால ஆய்வினை மேற்கொண்டவர். மத நம்பிக்கையற்ற குடும்பங்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்து வருவதைக் கண்ட பெங்ஸ்டன், தலைமுறைகளின் மாற்றம் பற்றிய தன் ஆய்வில் மதச்சார்பற்ற குடும்பங்கள் என்ற தலைப்பையும் இணைத்துக் கொண்டார்.
“மத நம்பிக்கை உள்ள பெற்றோரைக் காட்டிலும், மத நம்பிக்கை இல்லாத பெற்றோர் பெரும்பாலும் தங்களின் அறம் சார்ந்த கொள்கைகளில் இருந்து மாறாதவர்களாக இருக்கிறார்கள். நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்; மனித நேயத்துடன் திகழ வேண்டும் என்பதை தங்கள் குழந்தைகளுக்கு, தாங்களே ஒரு முன்மாதிரியாக இருந்து கற்றுக் கொடுக்கிறார்கள்.” என்கிறார், பென்ஸ்டன். மத நம்பிக்கை அற்றவர்களுக்கு நன்னெறி என்பது அடிப்படையான கோட்பாடு. மற்றவர்களைப் புரிந்து கொண்டு அதற்கு இணங்க செயல்படு என்பதுதான் அந்தக் கோட்பாடு. மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதனையே நீ அவர்களுக்குச் செய் என்பது எல்லாக் காலத்துக்குமான கோட்பாடாகும். அதற்கு அதீத சக்தி ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை தேவையானதாக இல்லை.
அவர் ஆய்வில், அமெரிக்கச் சிறைகளில் உள்ளவர்களில் நாத்திகர்கள் அநேகமாக இல்லை என்றே அமெரிக்க மத்திய அரசின் சிறைத்துறை தெரிவித்த செய்தி இடம் பெற்று உள்ளது. மத நம்பிக்கையற்ற குழந்தைகள், மத நம்பிக்கை உள்ள குழந்தைகளைக் காட்டிலும் கற்பனைக் கதைகளையும், உண்மைகளையும் இயல்பாகவே வேறுபடுத்திப் பார்க்கிறார்கள் என்று, பி.பி.சி. வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. இதற்கு ஆதாரமாக bu.edu/…/2…/05/corriveau-chen-harris-in-press.pdf என்ற ஆய்வின் இணைய இணைப்பையும் அளித்து உள்ளது..
ஆய்வின் போது கற்பனைக் கதைகளை அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தனர். பின்னர், விசாரித்தபோது மத நம்பிக்கை மத நம்பிக்கையுடன் வளர்க்கப் பட்ட குழந்தைகள், அந்தக் கற்பனைகளை உண்மை என்று நம்பினர். ஆனால், மதம் சாராமல் சொந்த சிந்தனையுடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் இவை எல்லாம் கற்பனை என்று தெளிவாகச் சொன்னார்கள்.
மதச்சார்பு உள்ளவர்களின் குழந்தைகள் கற்பனைக் கதைகளை, உண்மைகளுடன் சேர்த்து குழப்பிக் கொள்கிறார்கள். ஏனென்றால், குழந்தைகளின் ஆய்வு உணர்வை உண்மையாக நடந்தது என்று கற்பிக்கப்படும் பழைய மதம் சார்ந்த கதைகள் குழப்பி விடுவதால் அவர்களால் கற்பனையையும், உண்மையையும் பிரித்து அறிய முடியவில்லை.
– இசைஇன்பன்