அனைத்து துறைகளிலும் போட்டி யாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். போட்டியாளர்கள் இருப்பதனால்தான் சந்தையில் சிறந்த தரமான பொருள்கள் கிடைக்கின்றன. உற்பத்தியாளர்களும், வணிகர்களும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
சந்தையில் தொடர்ந்து முன்னிலையில் இருக்க தினம் தினம் புதிய விலை மலிவான, தரமான பொருள்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. எனவே போட்டி என்பது தேவையான ஒன்று தான். ஆனாலும் மற்றவர் களின் போட்டியையும் சமாளித்துஆக வேண்டுமே?
போட்டியை சமாளிக்க பின்வருவனவற்றை முயற்சி செய்து பாருங்கள் :
போட்டியை சமாளிக்க முதலில் உங்களின் பலம் (strength) மற்றும் பலவீனங்களை (weakness) ஆராய வேண்டும். அடுத்து உங்கள் போட்டி யாளரின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய வேண்டும்.
உங்கள் பொருளின் தரம் சிறந்ததாக இருக்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பங்களால் உங்கள் பொருட்களை மெருகேற்ற வேண்டும். அந்த புதிய தொழில் நுட்பங்களை உங்கள் வாடிக்கையாளர்களும் அறிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.
உங்கள் வாடிக்கையாளர் சேவை (customer service) ஒரு எடுத்துக்காட்டாக அனைவருக்கும் விளங்க வேண்டும்.
வாடிக்கையாளரிடம் இருந்து வரும் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்.
போட்டியாளர்கள் நம் பொருட்களை போல் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் போது அவர்களை விட சிறந்த பொருளை, குறைவான விலைக்கு விற்க வேண்டும். தொடர்ந்து நமது பொருட்களின் தரம் மற்றும் சேவையை மேம்படுத்திய வண்ணம் இருக்க வேண்டும்.
நம் பொருட்களைப் போன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களை கண்காணித்த வண்ணம் இருக்க வேண்டும். அவர்களின் புதிய விற்பனை உத்திகளை கண்டறிந்து அவற்றுக்கு ஏற்ற மாற்று உத்திகளை நீங்களும் சிந்தித்து அறிமுகப்படுத்த வேண்டும்.
எப்போதும் உங்கள் போட்டியாளர்களை விட முன்னே இருக்க வேண்டும். உங்கள் பொருளை வாடிக்கையாளர் வாங்க காரணங்கள் என்ன? அதே போல் உங்கள் போட்டியாளர் பொருளை ஏன் வாங்குகிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் பொருட்கள் பற்றி வாடிக்கையாளர்கள் என்ன நினைக்கிறார்கள்? உங்கள் போட்டியாளர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்று தெரிந்து கொள்ள வேண்டும்?
நீங்கள் போட்டிபோடும் சந்தையில் வருங்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு உங்கள் தொழிலை வளர்ச்சி அடையச் செய்யும் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
-சந்தோஷ்