நமக்கு தேவையான இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்தை வாங்கி விட்டால் மட்டும் போதுமா? தொடர்ந்து அதனை பதிவு செய்ய வேண்டும்; காப்பீடு செய்ய வேண்டும்; அவ்வப்போது பணிமனையில் விட்டு பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். மேலும் அது இயங்குவதற்கு தேவையான எரிபொருளை அவ்வப்போது நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இது போன்ற பணிகளையும் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருந்தால்தான் உரிய பயன் கிடைக்கும்.
அதேபோன்று பிரைவேட் லிமிடெட் என அறியப்படும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தை பதிவு செய்து விட்டால் மட்டும் போதாது. அவ்வாறு பதிவு செய்து புதிய நிறுமத்தை தொடங்கிய பின், பின்வரும் செயல்களை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.
நிறுவனத்தை பதிவு செய்த முப்பது நாட்களுக்குள் முதன்முதலான இயக்குநர் கூட்டம் கூட்டப்பட வேண்டும்.
பதிவு செய்த முப்பது நாட்களுக்குள் இயக்குநர் குழுவின் தீர்மானத்தின் மூலம் நிறுவனத்திற்கான தணிக்கையாளரை (ஆடிட்டரை) நியமனம் செய்திட வேண்டும்.
இயக்குநர் குழுவில் உள்ள ஒவ்வொரு இயக்குநரின் தகுதி, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் அவர்களின் ஈடுபாடு போன்ற விவரங்களை முதல் இயக்குநர்களின் கூட்டத்தில அறிவிப்பு செய்து அதனை MBP-1, DIR-8 ஆகிய படிவங்களின் வாயிலாக நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகத்தில் வழங்க வேண்டும்.
பதிவு செய்த முப்பது நாட்களுக்குள் அந்நிறுவனத்தின் பெயரில் ஏதேனும் ஒரு வங்கியில் நடப்புக் கணக்கு (கரன்ட் அக்கவுன்ட்) ஒன்று தொடங்க வேண்டும்.
அவ்வாறான நிறுவனத்தின் பெயரில் தொட ங்கப்பட்ட நடப்பு கணக்கில் அந்நிறுவனத்தில் பங்குநர்களாக இருக்க ஒப்புக் கொண்டு பதிவு செய்து கொண்ட முதலீட்டாளர்கள் அனைவரும் தாம் ஒப்புக் கொண்ட முதலீட்டு தொகை யை அறுபது நாட் களுக்குள் செலுத்த வேண்டும்.
அவ்வாறு முதலீட்டாளர்கள் செலுத்தும் பங்குத் தொகைக்கான பங்கு சான்றிதழை பங்குநர்கள் ஒவ்வொரு வருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
அவ்வாறு பங்குச் சான்றிதழ் வழங்கும்போது அதற்கான முத்திரைக் கட்டணத்தை அரசிற்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
தொடர்ந்து படிவம் Inc 20A வாயிலாக நிறுவனத்தை பதிவு செய்த 180 நாட்களுக்குள் அந்நிறுவனம் தம் வணிக நடவடிக்கைகளை தொடங்கி விட்ட தற்கான அறிவிப்பு செய்ய வேண்டும்.
அந்நிறுமத்தின் முதல் பொதுப்பேரவை கூட்டத்தை (ஏஜிஎம்) அந்நிறுமம் தொடங்கிய முதலாம் ஆண்டு முடிந்த ஒன்பது மாதத்திற்குள் கூட்ட வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டிலும் பொதுப் பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும்.
நிறுமத்தின் அளவிற்கு ஏற்ப ஒவ்வொரு காலண்டர் ஆண்டிலும் குறைந்தது நான்கு இயக்குநர் கூட்டம், ஒரு பொதுப் பேரவை கூட்டம் கண்டிப்பாக கூட்டுவதை கடைப்பிடிக்க வேண்டும்.
பொதுப் பேரவை கூட்டம் முடிந்த முப்பது நாட்களுக்குள் AOC-4 எனும் படிவத்தையும், நிதிநிலை அறிக்கையையும் அறுபது நாட்களுக்குள் MGT-7 எனும் படிவத்தையும் நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகத்தில் வழங்க வேண்டும்.
மேலும் கம்பெனிகளின் சட்டம் 2013 இல் குறிப்பிட்டவாறான சட்டப்படியான பதிவேடுகளையும் ஆவணங்களையும் கண்டி ப்பாக பராமரிக்க வேண்டும்.
நிறுவனத்திற்கென தனியான ரப்பர் ஸ்டாம்ப், காமன் சீல் ஆகியவற்றை செய்து வைத்து இருக்க வேண்டும். சில ஆவணங்களை உருவாக்க இவை பயன் படும்.
அவ்வாறே நிறுமத்திற்கென தனியான பதிவு அலுவலகத்தை பராமரிக்க வேண்டும். மேலும் அப்பதிவு அலுவலகத்தில் அந்நிறுமத்தின் பெயரிலான லெட்டர் ஹெட், மெமொரண்டம் & ஆர்ட்டிக்கிள்ஸ் ஆஃப் அசோசியேஷன் ஆஃப் கம்பெனி ஆகியவற்றை அச்சிட்டு வைத்து இருக்க வேண்டும்.