எல்லோரும் சமம் என்கின்ற போது, சிலருக்கு மட்டும் இட ஒதுக்கீடு தவறுதானே? -இப்படி சிலர் கேட்கிறார்கள்.
கண்டிப்பாக இட ஒதுக்கீடு என்பது தவறுதான். இட உரிமை என்பதே சரியான பொருள் தரும்.
பிராமணர் அல்லாதோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட உரிமையை, 1902 இல், கோல்காபூர் சமஸ்தானத்தின் மகாராஜா, திரு. ஷாகு, கிடைக்கப் பெறச் செய்கிறார். அனைவ ருக்கும் இலவசக் கல்வி, தங்கும் விடுதி போன்றவைகளுடன் ஐம்பது சதவிதம் இட உரிமையை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கினார்.
1909 இல் இயற்றப்பட்ட இந்தியா சட்டத்தில், ஆங்கிலே யர்களும் இட உரிமை ஷரத்துகளை இணைக்கிறார்கள்.
1932 இல், அன்றைய பிரிட்டன் பிரதமர் திரு. ராம்சே மெக்டோனல்ட், வட்ட மேசை மாநாட்டில் வகுப்பு ரீதியாக பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த முன்மொழிகிறார்.
அந்த முன்மொழிவு சர்ச்சைக்கு உள்ளாகிறது. திரு. காந்தி அதனை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறார். டாக்டர். அம்பேத்கர் ஆதரித்தார். பிறகு, இருவரும் சேர்ந்து சிறு மாற்றங்களுடன், தலித்துகள் இந்துக்கள் தொகுதியில் உள் ஓதுக்கீடு பெற்று போட்டி இடுவார்கள், ஏனையோர், இஸ்லாமியர், சீக்கியர், தனியாக தமக்கு ஒதுக்கிய தொகுதிகளில் போட்டி இடுவார்கள் என்ற ஓப்பந்தத்திற்கு வருகிறார்கள். பூனே பேக்ட் என்று இந்த ஒப்பந்தம் அழைக்கப்படுகிறது.
சுதந்திர இந்தியாவில், அனைத்து மக்களும் சமம் என்பதை உறுதிப்படுத்திட, தீண்டத் தகாதவர்களுக்கும் உரிமைகளை பெற்றுத் தர இட உரிமையை நம் தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.
மேலே, குறிப்பிட்ட வரலாறு ஓட்டுக்காக, இட உரிமை கொண்டு வரப்பட்டது என்ற போலி வாதத்தை உடைக்க.
மகாராஜாவுக்கும், ஒட்டு அரசியலில் ஈடுபடாத திரு. காந்திக்கும் எதற்கு ஓட்டு?
இட உரிமை என்பது தானம் இல்லை. ஒருவரிடம் இருந்து எடுத்து இன்னொருவருக்கு தருவது இல்லை.
இட உரிமை என்பது அவரவர்களுக்கு மக்கள் தொகை, சமூக, பொருளாதார நிலையை அளந்து, உரிய இடத்தை உறுதி செய்வதே ஆகும்.
2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் கிட்டத்தட்ட 46 இலட்சம் ஜாதி மற்றும் உள்பிரிவை மக்கள் பதிவு செய்து உள்ளனர், சில தவறுகள் உள்பட. இவர்களிடம் ஏராளமான சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் உண்டு என்பதைச் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
பெரும்பான்மையோருக்கு தங்களுடைய உரிமை என்ன என்பது கூட தெரியாது. இப்படிப் பட்டவர்களுக்கு சம வாய்ப்பு சுதந்திர இந்தியாவில் இருக்க வேண்டும் என்று எண்ணிய தலைவர்கள் இட உரிமையை உறுதி செய்து, ஒவ்வொரு பிரிவில் இருந்தும், மக்கள் தொகையின் அடிப்படையில், கீழே குறிப்பிட்டு உள்ளபடி பிரதிநிதித்துவம் வருமாறு சட்டம் இயற்றி உள்ளனர்.
எஸ்டி – 1%
எஸ்சி – 18%
பிசி – 20%
எம்பிசி – 30%
மேலே கூறிய பங்கீடு தமிழகத்தில் உள்ளது. கூட்டினால் 69%.
பிராமண தலைவர்கள் இதை மேலோட்டமாக தங்கள் ஜாதியினரிடம் கொண்டு சென்று பிராமணர்களுக்கும், மற்றவர்களுக்கும் வலிந்து பகைமையை உண்டு பண்ணுகிறார்கள்.
உண்மையில், மேலே குறிப்பிடாத வகுப்பினருக்கும் உரிய இட உரிமை, தமிழகத்தில் தரப்பட்டு உள்ளது.
அதாவது, இரண்டு மெரிட் லிஸ்ட் (தகுதிப் பட்டியல்) தயாரிக்கப்படும். நூறு இடம் என்றால், முதல் 50 பட்டியல், முதல் 69 பட்டியல் என்று இரண்டு பட்டியல்கள் தயாரிக்கப்படும்.
பின்பு, 69 பட்டியலில் இடம் பெற்றவர்கள், 50 பட்டியலில் இடம் பெறாமல், மற்றும் மேலே குறிப்பிட்ட வகுப்பை சாராதவர்கள் என்றால் அவர்களுக்கு இடம் அளிக்கப்படும். எடுத்துக் காட்டாக, 19 பிராமணர்கள், 69 பட்டியலில் இடம் பெற்று, 50 பட்டியலில் இல்லை என்றால், 19 பேருக்கு இடம் தரப்படும். மொத்த இடம் நூறில் இருந்து 119 ஆக கணக்கிடப்படும். இதனை சிறப்பு இடங்கள் என்று அழைப்பர்.
ஆக, மேலே குறிப்பிட்ட எடுத்துக் காட்டின் வழியில் 16% முன்னேறிய வகுப்பினருக்கு உறுதியாக தரப்படுகிறது.
பிராமண தலைவர்களின் ”35 வாங்கியவருக்கு இடம், 199 வாங்கிய எங்களுக்கு இடம் இல்லை” என்ற வாதத்தின்படி (இது அப்பட்டமான பொய் என்பது வேறு விஷயம்), முன்னேறியவர்களுக்கு கிட்டத்தட்ட 42% இடம் (19+31/119) உறுதி செய்யப்படுகிறது.
நடைமுறையில், முன்னேறிய சாதியினருக்கும், பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இடையே மதிப்பெண்கள் தொடர்பான இடைவெளி குறைந்த அளவுதான் இருக்கிறது. 35 மதிப்பெண்கள் வாங்கியவர்களுக்கு இடம் தரப்படுகிறது என்பது ஒரு வடிகட்டிய பொய் ஆகும். அந்த வகையில், முன்னேறிய சாதியினருக்கு குறைந்தது 16% உறுதி செய்யப்படுகிறது. அவர்கள் மக்கள் தொகை 13% மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இனிமேலும் எஸ்சியால் எங்கள் இடம் போய்விட்டது என்று விவரம் இல்லாமல் கூறாதீர்கள்.
இந்தியா அரசமைப்பு சட்டத்தில் இட உரிமையை, மக்களை சமமாக நடத்துவதற்கு உரிய தெளிவான வழிமுறையாக கூறி இருக்கும் போது, அதை எதிர்த்து பரப்புரை செய்வதும், மதிக்காமல் செயல்படுவதும் சற்றும் நியாயம் அற்றது. இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
-பா. ச. பாலசிங்