கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் திரு. டிரேக் ஓ பிரையன், ”டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி பேசும் ஆளும் கட்சி, தகவல் பாதுகாப்புச் சட்டத்தை எப்போது நிறைவேற்றும்?” என்ற வினாவை எழுப்பினார். அதற்கு விடை அளித்த சட்ட அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி திரு. பி. என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து உள்ளதாகவும், அது வரைவு அறிக்கையை வழங்கிய பின் பல நிறுவனங்களுடன் ஆலோசித்து, திருத்தங்கள் செய்து அந்த தகவல் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப் படுத்துவோம் என்று கூறினார்.
கிருஷ்ணா கமிட்டியும் தகவல் பாதுகாப்பு சட்டத்துக்கான வரைவு அறிக்கையை (ட்ராஃப்ட் பில்) கடந்த ஜூலை, 2018-ல் வழங்கியது. அந்த அறிக்கையில் நம் நாட்டில் உள்ள இணைய பயனாளர்களின் தகவல்களை அடங்கிய டேட்டா சென்டர்களை இந்தியாவில்தான் அமைக்க வேண்டும். மேலும் குடிமக்களின் பாதுகாப்பு கருதி இந்திய அரசு, சில தகவல்களைக் கேட்டால், அவற்றை அந்த நிறுவனங்கள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இது பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு எள்ளளவும் பிடிக்கவில்லை.
பரவலாகப் பயன்படுத்தப்படும் இணைய உலாவியான மோசில்லா ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி திருமதி. மிச்சேல் பேக்கர், இந்தியாவில் டேட்டா சென்டரை வைத்தால் எங்கள் வணிகம் கடுமையாக பாதிக்கும் என்று கூறி உள்ளார். இந்த வரைவு அறிக்கையில் நம் நாட்டில் உள்ள இணைய பயனாளர்கள் குறித்த தகவலை எவருக்காவது விற்றால் அல்லது களவாடினால் அந்த நிறுவனத்தை கடுமையாக தண்டிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. இது நம் தகவல்களை விற்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவருமான திரு. சுந்தர் பிச்சை, இந்த வரைவு அறிக்கைக்கு தனது தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பை கடிதத்தின் மூலமாக அரசுக்கு தெரிவித்தார். இது போன்ற சட்டங் களால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பாதிப்பு அடையும். (அவற்றில் முதலீடு செய்திருப்பவை பன்னாட்டு நிறுவனங்கள் தானே!) தகவல்கள் தங்கு தடையின்றி நாடுகளைக் கடந்து சென்றால்தான் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இலாபம் அடைய முடியும் என்றார்.
அதனைத் தொடர்ந்து இந்திய மென்பொருள் நிறுவனங்களின் கூட்ட மைப்பான நாஸ்காம் உறுப்பினரும், இந்தூரில் உள்ள ஐஐஎம், மேலாண்மை இயல் புலத்தின் இயக்குநரும் ஆன திரு. ரிஷிகேசா கிருஷ்ணன், இந்த வரைவு அறிக்கை இணைய தள கொள்கைக்கே முரணானது என கடுமையாக சாடினார்.
அமெரிக்க இணைய தள பயனாளர் களின் தகவல்கள் அமெரிக்காவில்தான் இருக்கும். அமேசான். ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள், தங்கள் டேட்டா சென்டர்களை (Data Center) அமெரிக்கா வில்தான் வைத்து உள்ளன. அவ்வப் போது டேட்டா சென்டர்களில் சேமிக் கப்பட்ட தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனங்கள் இந்த நிறுவனங்கள் கொடுத்து இருப்பது பற்றி நாம் செய்தித் தாள்களில் படித்து இருக்கிறோம்.
நம் நாட்டில் டேட்டா சென்டர் அமைந்தால் மட்டுமே, இங்கே நடைபெறும் இணையம் சார்ந்த குற்றச் செயல்களைக் கண்டு பிடித்து தடுக்க முடியும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அங்கு உள்ள இணைய பயனாளர்களின் ஒப்புதல் இல்லாமல், அவர்களைப் பற்றிய தகவல்களை பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என்ற கடுமையான விதி பின்பற்றப்படுகிறது.
ஏனென்றால் இங்கு செல்பேசி சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள், அங்காடிகளையும் நடத்தி வருகின்றன.
அனைத்து அலைபேசி எண்களுடன் ஆதார் எண்களும் இணைக்கப்பட்டு உள்ளன. இது போன்ற நிறுவனங்கள், தங்களுடைய துணை நிறுவனங்களுக்குத் தான் தகவல்களைக் கொடுக்கிறோம் என்று கூறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, தணிக்கையாளர்கள், இந்த டேட்டா சென்டர்களை தணிக்கை செய்து ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் சிஸ்டம் ஆடிட் அறிக்கையை வழங்க வலியுறுத்த வேண்டும்.
இதுபோன்ற சட்டப் பிரிவுகளைச் சேர்த்தால்தான் பாதுகாப்பான இணைய பணப்பரிமாற்றங்களையும், வணிகத்தையும் செய்ய முடியும்.
-மதிமான்