வணிகப் பொருட்களையோ அல்லது சேவைகளையோ, வாடிக்கையாளரிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு சின்னம் அல்லது குறியீட்டையே ட்ரேட் மார்க் என்கிறோம். இந்த ட்ரேட் மார்க் ஒருவரின் அல்லது ஒரு நிறுவனத்தின் வியாபார பொருட்களை அல்லது சேவைகளை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது.
இத்தகைய ட்ரேட் மார்க்கை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் என்ன என்பதை காணலாம். ஒரு வணிகர் இந்த ட்ரேட் மார்க்கை அதற்குரிய கட்டணத்துடன் ட்ரேட் மார்க் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டால் அந்த பதிவானது பத்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
அதற்குப் பின்னர் மீண்டும் உரிய கட்டணத்துடன் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பல்வகை பொருட்கள் அல்லது சேவைகளுக்கான ட்ரேட் மார்க்கை பதிவு செய்வதற்கு ஒரேயொரு விண்ணப்பம் போதுமானதாகும். ட்ரேட் மார்க் பெற இணையத்தின் வாயிலாகவும் பதிவு செய்ய முடியும். அதற்கான படிமுறைகள் பின்வருமாறு:
முதலில், பதிவு செய்ய விரும்பும் ட்ரேட் மார்க்குக்கான பெயரை அல்லது சின்னத்தை (Logo) வேறு யாரும் பதிவு செய்யவில்லையா என உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்கு ipindiaonline.gov.in/ tmrpublicsearch /frmmain.aspx/ என்ற இணைய தளத்துக்கு செல்ல வேண்டும். அங்கு உரிய முறையில் தேடினால், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விட்டதா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அவ்வாறு பதிவு செய்யப்படாமல் இருந்தால், நம் வணிகம் எந்த வகைக்குள் வருகின்றது என சரி பார்க்க வேண்டும். இதற்கு ipindiaonline.gov.in/ tmrpublicsearch /classfication_goods_service.htm என்ற இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்.
பின்னர் இந்த இணைய பக்கத்தில் உள்ள அதற்கான படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். அதனுடன் டிஜிட்டல் கையொப்ப சான்றிதழை (digital Signature Certificate(DSC)) யும் இணைத்து சப்மிட் செய்ய வேண்டும்.
இதுவரை கூறிய அனைத்தையும் சரியாக செயல்படுத்தி அனுப்பிய பின்னர், விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு, பதிவு செய்தவை அனைத்தும் சரியாக உள்ளதா இல்லையா என்பதை தெரிவிக்கும் மின்னஞ்சல் ஒன்று வந்து சேரும். ட்ரேட் மார்க் பதிவு செய்யும் இணைய பக்கத்தில் நம் கணக்கில் உள்நுழைவு செய்வதற்கான இணைய இணைப்பு ஒன்றும் இந்த மின்னஞ் சலுடன் கிடைக்கப் பெறும்.
மேற்கண்ட நடைமுறைகளை முடித்த பின், நமக்கு வந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ள இணைப்பில் உள்நுழைவு செய்து TM-A எனும் படிவத்தை நிரப்ப வேண்டும். அடுத்து இந்த இணைய தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள Paymentஎன்பதை சொடுக்கினால் தோன்றும் திரையில் NEFT அல்லது கிரடிட் கார்ட் – எதன் மூலம் பதிவு கட்டணத்தினை செலுத்த விரும்பு கின்றோம் என்பதை தேர்வு செய்து அதன் வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பதிவுக் கட்டணம் செலுத்தியதற்கான ஏற்புகை சீட்டு தானாகவே உருவாகி விடும். இரண்டு நாட்கள் கழித்து இதே இணைய பக்கத்தின் Generate Receipt எனும் பொத்தானை சொடுக்கி அச்சு எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்து நம் விண்ணப்பம் ட்ரேட் மார்க் பதிவு அலுவலர்களால் சரிபார்க்கப்படும். விதிமுறைப்படி அனைத்தும் சரியாக இருந்தால் ட்ரேட் மார்க் பதிவாளரால் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்படும். அதன் பின்னர் ட்ரேட் மார்க் தொடர்பாக வெளியிடப்படும் இதழில் நம் ட்ரேட்மார்க் வெளியிடப்படும். அதனோடு இந்த ட்ரேட் மார்க்கை வழங்குவதில் யாருக்காவது மறுப்பு இருந்தால் அதனை 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு அறிவிப்பு ஒன்றும் இருக்கும். முப்பது நாட்களுக்குள் மறுப்பு எதுவும் வரவில்லை எனில் விண்ணப்பித்தவருக்கு ட்ரேட் மார்க் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.
பதிவுக்கான மேற்கண்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது விண்ணப்பித்தவர், தம் பொருட்க ளுக்கான ட்ரேட் மார்க் அருகில் ஜிவி என்ற குறியீட்டையும், சேவைகளுக்கான ட்ரேட்மார்க் எனில் ஷிவி என்ற குறியீட்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சான்றிதழ் கைக்கு கிடைக்கப் பெற்ற பின்னர் தமக்கு அனுமதிக்கப்பட்ட வணிக குறியீட்டுடன் டி என்ற குறியீட்டினை சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம். ட்ரேட் மார்க் பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் பின்வருமாறு-
தனி உரிமையாளர் எனில் –
விண்ணப்பிக்கும் ட்ரேட் மார்க் நகல் (விரும்பினால்),
முகவர் அல்லது பதிவு பெற்ற வழக்குரைஞர் மூலம் விண்ணப்பித்தால் உரிமையாளர் கையொப்பமிடப்பட்ட படிவும் எண் 48,
உரிமையாளரின் அடையாளச் சான்று
உரிமையாளரின் முகவரிச்சான்று
நிறுவனம் சார்பில் எனில் –
ட்ரேட்மார்க் நகல்
கையொப்பமிடப்பட்ட படிவும் எண் 48,
.சிறு நிறுவனம் எனில் பணிஆதார பதிவுச் சான்றிதழ்,
கம்பெனி எனில் பதிவுச் சான்றிதழ், பங்குதாரர்கள் எனில் கூட்டாண்மை ஒப்பந்தம்,
கையொப்பமிடுபவரின் அடையாளச் சான்று,
கையொப்பமிடுபவரின் முகவரிச்சான்று
நிறுமம் எனில் பதிவு செய்வதற்கான இயக்குநர்களின் குழுவின், தீர்மானம்.
-முனைவர் ச. குப்பன்