குறு, சிறு, நடுத்தர தொழிலகங்களை (Micro, Small, Medium Enterprises) சுருக்கமாக எம்எஸ்எம்இ (MSME) என அழைக்கிறார்கள். பொதுவாக தொழிலகங்களை, அவை எந்திரங்களுக்கும், கருவிகளுக்கும் முதலீடு செய்யும் தொகை அடிப்படையில் இவை வரையறுக்கப்படுகின்றன.
குறுந் தொழிலகம் எனில் எந்திரங்களுக்கு ரூ. 25 இலட்சம் வரையிலும், கருவிகளுக்கு ரூ. 10 இலட்சம் வரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்கவேண்டும்.
சிறு தொழிலகம் எனில் எந்திரங்களுக்கு ரூ. 25 இலட்சம் முதல் 5 கோடி வரையிலும், கருவிகளுக்கு ரூ. 10 இலட்சம் முதல் 2 கோடி வரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்க வேண்டும்.
நடுத்தர தொழிலகம் எனில் எந்திரங்களுக்கு ரூ. 5 கோடி முதல் 10 கோடி வரையிலும், கருவிகளுக்கு ரூ. 2 கோடி முதல் 5 கோடி வரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்க வேண்டும்.
உற்பத்தி அல்லது சேவை நிறுவனமாக தொழில் தொடங்கும் எந்தவொரு நிறுவனத்தின் முதலீட்டு தொகையும் மேற்கண்ட வரையறைக்குள் உள்ளவாறு பதிவு செய்து கொண்டால் பின்வரும் பல்வேறு பயன்கள் அந்நிறுவனத்திற்கு கிடைக்கின்றன.
எம்எஸ்எம்இ ஆக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் தமக்கு தேவையான கடன்தொகையை வணிக வங்கிகளில் கோரும்போது அதற்காகவென தனியாக வங்கிஉத்திரவாதம் எதுவும் வழங்கத் தேவையில்லை எம்எஸ்எம்இ பதிவுஎண் மட்டுமே போதுமானதாகும் என்ற விதி உள்ளது.
எம்எஸ்எம்இ ஆக பதிவு செய்யப்பட்ட தொழிலகங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு குறிப்பிட்ட அளவு வரை மின்கட்டணம் இல்லை. அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்
எம்எஸ்எம்இ ஆக பதிவு செய்யப்பட்ட தொழிலகங்கள் தங்களுக்கான பேட்டன்ட், டிரேட் மார்க் ஆகியவற்றைப் பதிவு செய்யும் போது அதற்கான பதிவு கட்டணத்தில் 50 % மட்டும் செலுத்தினால் போதும்.
எம்எஸ்எம்இ ஆக பதிவு செய்யப்பட்ட தொழிலகங்கள் தங்களுடைய தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் மானியங்கள் (subsidy) வழங்கப்படுகின்றன.
எம்எஸ்எம்இ ஆக பதிவு செய்யப்பட்ட தொழிலகங்கள் தொடங்கி குறிப்பிட்ட காலம் வரை சில வரிகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகின்றது.
எம்எஸ்எம்இ ஆக பதிவுசெய்யப்பட்ட தொழிலகங்களின் புத்தாக்கங்ளுக்கும், புதுவடிவமைப்புகளுக்கும் 75% முதல் 80% வரை அரசின் கடனுதவி வழங்கப்படுகின்றது ,
எம்எஸ்எம்இ ஆக பதிவு செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
முதலில் இதற்காக legaldocs.co.in/msme-registration எனும் இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். உடன் திரையில் விரியும் படிவத்தில் பதிவு செய்ய விரும்புவோரின் பெயர், ஆதார் எண், தொழிலகத்தின் பெயர், முகவரி, வருமான வரி பதிவு எண், செல்பேசிஎண், வங்கி கணக்கு எண் என்பன போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்.
இவற்றை இணைய இணைப்பு இல்லாமலும் நிரப்பி மேலேற்றம் செய்திடலாம்.
மேலும் சொந்த கட்டிடம் எனில் வீட்டு வரி செலுத்திய ஆவணம், வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்த நகலுடன், அங்கு தொழிலகத்தை துவங்குவதற்கு அந்த கட்டிட உரிமையாளரின் மறுப்பின்மை கடிதம், கூட்டாண்மை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டதெனில் அதற்கான சான்றாவணம், ,கம்பெனியாக பதிவு செய்யப்பட்டதெனில் அதற்கான ஆவணம், இயக்குநர் குழுக் கூட்டத் தீர்மானம் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் இதனுடன் இணைக்க வேண்டும். இவற்றை எல்லாம் முன்னரே தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் பதிவேற்றம் செய்த உடன் அனைத்தும் சரியாக இருந்தால் அன்றே நமக்கென தனியாக எம்எஸ்எம்இ பதிவுஎண் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும். எம்எஸ்எம்இ பதிவு செய்வதற்கு பதிவு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
-முனைவர் ச. குப்பன்