Latest Posts

டாட்டாவால் வளர்ந்த ஏர் இந்தியா!

- Advertisement -

தமிழக சாலைகளில் ஓடும் அரசு பேருந்துகளில், பயணிப்பவர்களுக்கு இது போன்ற அனுபவம் ஏற்பட்டு இருக்கும்; ஆனால், விமானத்தில் பயணிக்கும் போதும் இப்படி நடந்தால்? கடந்த வாரத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த சிலர் மீது, அதன் ஜன்னல் கண்ணாடி கழன்று விழுந்தபோது, மற்றவர்களும் சேர்ந்து அலறினார்கள். விமானப் பணிப் பெண்கள் பயணிகளைச் சமாதானம் செய்ததோடு, ஜன்னலையும் சரி செய்தார்களாம்.


ஏர் இந்தியா விமானங்களின் நிலை, இந்த அளவு மோசமடைந்திருப்பது கவலை அளிக்கிறது. ஆனால், ‘உண்மை முகத்தில் அறைகிறது’ என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. கிலோமீட்டர் கணக்கு ரன்வேயில் ஓடும் விமானங்களைக் கையாளும் ஒரு நிறுவனத்தையே, நாம் முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறோம். இந்த நிறுவனத்தை மட்டும்தானா… இந்தியாவின் ஒட்டு மொத்த விமானப் போக்குவரத்து துறையே இன்று முட்டுச்சந்தில்தான் நிற்கிறது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.


கடந்த மாதம் இந்திய அரசு எடுத்த முடிவின்படி, அதன் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்குகளில் 76 சதவீதத்தை விற்பனை செய்ய முடிவு செய்து, ஆர்வம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை யாரும் வரவில்லையாம். வேறு வழியில்லாத மத்திய அரசு, ‘எப்படியும் அதை விற்றுதான் ஆக வேண்டும்’ என்பதால், தனது நிலையில் இருந்து இறங்கி வந்திருப்பதை வெளிப்படையாக அறிவித்து இருக்கிறது.


அதன்படி, “ஏர் இந்தியாவை வாங்க முன்வரும் நிறுவனம் ஏற்கனவே, இத்துறையில் அனுபவம் உள்ளதாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. கனமான பாக்கெட் உள்ள எந்த தனி நபரோ…. நிறுவனமோ… கூட்டணியோ…. எங்களால், இந்த விமான நிறுவனத்தை லாபகரமாக நடத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ள ஆட்கள் யாராக இருந்தாலும் வாருங்கள்” என்று கூவிப் பார்க்கிறது. ஆனால், அது காதில் விழுந்தது போலவே. யாரும் காட்டிக் கொள்ளவில்லை. அந்த அளவு, ஏர் இந்தியா இன்று மிக மோசமான நிதி நிலையில் உள்ளது. ஆனால், அதன் கடந்த காலம் அப்படியில்லை.


நவீன சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ, அந்நாட்டை கட்டமைத்து எழுப்பிக் கொண்டிருந்த நேரம் அது. நாட்டின் நிர்வாகத்தில், பல துறைகளிலும் அவர் செய்த ஏராளமான சீர்திருத்தங்களுக்குப் பின், சிங்கப்பூரின் உயரிய நிலையை – மற்ற நாடுகளில் விளம்பரப்படுத்த எளிதான… சிக்கன வழியைத் தேடினார். அப்போது, பல நாடுகளுக்கும் சென்று பயணிகளை இறக்கிவிட்டு… பின்னர் அங்கிருந்து மீண்டும் பயணிகளை ஏற்றிக் கொண்டு வரும் விமானம் போல – ‘சிறந்த, சிக்கன விளம்பர சாதனம் வேறு இல்லை’ என முடிவு எடுத்தார்.


அதனால் சிங்கப்பூர் ஏர்லைன்சை, சிங்கப்பூருக்கான விளம்பர சாதனமாக கருதி, அதில் கவனம் செலுத்த முடிவு செய்தாராம். ‘இருப்பதிலேயே சிறந்தது’ என, சிங்கப்பூர் ஏர்லைன்சை நிலைநிறுத்த யாரிடம் ஆலோசனை பெறுவது… யாரிடம் பயிற்சி பெறுவது என ஆராய்ந்தபோது, மற்ற பல நாடுகளின் விமான நிறுவனங்களை விட ஏர் இந்தியாதான் பொருத்தமானது என, அப்போது முடிவு செய்யப்பட்டதாம். அந்த அளவுக்கு எல்லா அம்சங்களிலும் உன்னத நிலையில் இருந்த ஒரு நிறுவனம், இன்று எட்டியுள்ள பரிதாப நிலைக்குச் செல்லக் காரணங்கள், அதன்பிறகுதான் தொடங்குகின்றன. எனினும், இந்தியன் ஏர்லைன்சின் ஆரம்ப நாட்கள் படு உற்சாகமானவை.


இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு விதை போட்டது ஜேஆர்டி டாட்டா என்பது, பலருக்கும் தெரிந்த தகவல். நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, 1930களில் அவர் தொடங்கி வைத்ததுதான் இந்திய விமான வரலாறு.


இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த 1945க்குப் பிறகு, விமான சேவைக்கு புதிதாகவும் ஏராளமான வாய்ப்புகள் உருவாகி இருப்பதை உணர்ந்தார் டாட்டா. அதனால், நவீன விமானங்களை வாங்கி, மிகப் பெரிய அளவில் தனது தொழிலை விரிவாக்கம் செய்ய நினைத்தார். அதற்கு தேவைப்பட்ட நிதியை பங்கு விற்பனை மூலம் பெற நினைத்தார். அதற்குமுன், தனது நிறுவனத்தின் பெயரை பொதுவானதாக மாற்றி அமைத்தார்.


இது டாட்டாவின் நிறுவனம் என்ற தோற்றத்தை மாற்றி, இந்தியாவுக்கான விமான நிறுவனம் என்ற அடையாளத்தைத் தர முயன்றார். அப்போதுதான் “ஏர் இந்தியா” உதயமாகிறது. பின்னர், ஏர் இந்தியா பங்குகளை பொது வெளியீடு மூலம் விற்று நிதி திரட்டினார். அதைக் கொண்டு, அந்த நாட்களில் இருந்ததிலேயே சிறந்தது என கருதப்பட்ட, 40 இருக்கைகள் கொண்ட ‘லாக்ஹீட் கன்ஸ்டலேஷன்’ விமானங்களை வாங்கினார்.


அதன் பிறகான நாட்கள் – ஏர் இந்தியா வரலாற்றில் பொற்காலம் என சொல்லலாம். சுதந்திர இந்தியாவில் சோஷிலிச கோஷம் ஓங்கி ஒலித்ததை ஒட்டி, அடுத்தடுத்து வந்த மாற்றங்களால், 1953ல் அப்போதைய பிரதமர் நேரு, திடீரென ஒரு நாள் ஏர் இந்தியாவை நாட்டு உடமையாக்கினார்.


நாட்டு உடமையாக்கப்பட்டாலும் ஏர் இந்தியாவின் தலைவராக ஜேஆர்டி டாட்டாவே தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார். இது மட்டுமல்ல. அதன்பிறகு, இந்திய விமானப் போக்குவரத்துத்துறை தொடர்பாக ஜேஆர்டி டாட்டா சொன்ன அனைத்து ஆலோசனைகளையும் பிரதமர் நேரு ஏற்றுக் கொண்டார். ஒரு கட்டத்தில் உள்ளுர் விமான சேவையையும், வெளிநாட்டு விமான போக்குவரத்தையும் தனித்தனியாக பிரித்து விடலாம் என ஜேஆர்டி டாட்டா சொன்னபோது உருவானதுதான் – ஏர் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்ட – இந்தியன் ஏர்லைன்ஸ்! இது மட்டுமின்றி, நிர்வாக முடிவுகளில் ஜேஆர்டி டாட்டாவுக்கு அனைத்து விஷயங்களிலும் முழு அதிகாரம் இருந்தது என்றே சொல்லப்படுகிறது. அதனால், ஏர் இந்தியாவை ஒரு லாபகரமான நிறுவனமாகவே டாட்டா நடத்தி வந்தார்.


ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் பிரதமராக பொறுப்பு வகித்த நேரம். பிப்ரவரி 13ம் நாள். அன்று மும்பையில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் தனது அறையில் இருந்த ஜேஆர்டி டாட்டாவிடம், தான் ஏர் இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளதாக ஒரு கடிதத்துடன், இந்திய விமானப் படையில் இருந்து ஓய்வுபெற்ற ஏர் சீப் மார்ஷல் பி சி லால் கை குலுக்குகிறார். இது, தனக்கு செய்யப்பட்ட மாபெரும் அநீதி என ஜேஆர்டி டாட்டா கருதினார்.


மொரார்ஜி தேசாய் மிகவும் நேர்மையானவர் எனச் சொல்லப்பட்டாலும், அவர் ஜேஆர்டி டாட்டாவை நடத்திய விதம்…., டாட்டாவின் பதவியைப் பறித்த முறை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.


ஜனதா கட்சி நீண்ட நாட்கள் நீடிக்காமல் தோல்வி கண்ட பிறகு, 1980ல் நடந்த தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராகப் பொறுப்பு ஏற்றபோது, அவர், ஜேஆர்டி டாட்டாவை அழைத்து, ஏர் இந்தியாவின் நிர்வாகக் குழுவில் ஒரு உறுப்பினராக்கினார். ஆனால், அப்போதே ஏர் இந்தியாவின் ஆளுமையிலும், வலிமையிலும் விரிசல்கள் விழத் தொடங்கி இருந்தன.


எப்படியானாலும் – கருவாகி, உருவான நேரத்தில் தனியார் நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா, மீண்டும் ஒரு தனியார் நிறுவனமாகப் போகிறது என்பதில் மட்டும் மாற்றமில்லை.

-ஆர். சந்திரன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news