Latest Posts

கமலா ஆரஞ்சு எப்படி பயிரிடப்படுகிறது?

- Advertisement -

மான்டரின் ஆரஞ்சு அல்லது கமலா ஆரஞ்சு வணிக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பழப் பயிராகும். கமலா ஆரஞ்சு நீலகிரி மாவட்டத்தில் 500 எக்டர் நிலப் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு 2760 டன் மகசூல் கிடைக்கிறது. தமிழ்நாட்டின் பழப் பயிர்கள் சாகுபடியில் கமலா ஆரஞ்சு ஐந்தாம் இடத்தை வகிக்கிறது.


இரகங்கள்
கூர்க் ஆரஞ்சு, நாக்பூர் ஆரஞ்சு, கொடை ஆரஞ்சு.
மண் மற்றும் காலநிலை
இது கடல் மட்டத்தில் இருந்து 500 முதல் 1500 மீட்டர் உயரத்தில் மிதமான தட்ப வெப்ப நிலையில் வளரக் கூடியது. ஆரஞ்சு சாகுபடிக்கு சுமார் 150 முதல் 250 செமீ வரை ஆண்டு மழை அளவும், மிதமான குளிரும், வெப்ப நிலையும் அவசியம். ஆழம் மிகுந்த நல்ல வடிகால் வசதியுள்ள செம்புறை மண் மிகவும் ஏற்றதாகும்.


பருவம்
ஜூன்-ஜூலை மற்றும் நவம்பர்-டிசம்பர் மாதங்கள் நடவு செய்ய ஏற்ற பருவமாகும்.


நடவு
மழைக்காலத்தில் நடவு செய்வது ஏற்றது என்ற போதிலும் அதிகமாக மழை பெய்யும் காலங்களில் நடவு செய்வதால், நீர் தேங்கும் சிக்கல் ஏற்படுகிறது. மரத்தின் அடிப்பாகத்தில் இலைகள், காய்ந்த சருகுகள் இவற்றைக் கொண்டு நிலப் போர்வை ஏற்படுத்துவதன் மூலம், வேர் பகுதியில் ஈரப்பதத்தைப் பாது காக்கலாம். மொட்டுக் கட்டிய செடிகளை 6 * 6 மீ இடைவெளியில், 75 * 75 * 75 செமீ அளவுள்ள குழிகளில் மே, ஜூன், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் நட வேண்டும்.


உரமிடுதல்
மரங்கள் நல்ல செழிப்புடன் இருப்ப தற்கும் தொடர்ந்து அதிக மகசூல் தருவதற்கும் தவறாமல் உரமிடுதல் வேண் டும். காய்க்கத் தொடங்காத மரங்களில் மரத்தைச் சுற்றி 15 முதல் 30 செமீ தொலைவில் குழி அமைத்து உரமிட வேண்டும். மண்ணில் தேவையான அளவு ஈரத்தன்மை உள்ளபோது மட்டுமே உரமிடு தல் வேண்டும். காய்க்கும் மரங்கள் நிறைந்த தோட்டத்தில் பாதிக்கும் மேற் பட்ட நிலம் வேர்களின் வளர்ச்சியால் மூடப்படுகிறது. அவ்வாறு உள்ள தோட்ட த்தில் உரங் களை ஒவ்வொரு மரத்தில் இருந்தும், 30 செமீ தொலைவில் இட வேண்டும்.

நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறை – அறிகுறிகள்


துத்தநாகக் குறைபாடு


இளந்தளிர் அமைப்பில் குறுகியும், குவிந்தும், பளபளப்பு நீங்கி, தோல் போன்ற தன்மையுடையதும், கிளை நுனியில் கிளை மொட்டுக்கள் தோன்றுவதும், இலை அடுக்குகள் நெருக்கமாகவும் காணப்படும். துத்தநாகக் குறைபாடு ‘ரோசட்டி’ நோய் என்று அழைக்கப் படுகிறது. இளம் இலை களில் நரம்புகளின் இடையே வெளுத்து விடும். இலை நரம்புகள் இலைப் பரப்புக்கு மேல் தூக்கியது போலத் தெரியும். முற்றிய நிலையில் இலை நடு நரம்பு மட்டும் கரும் பசுமையுடனும் இதர பகுதிகள் வெளிர் பச்சை அல்லது மஞ்சள் நிறத்துடனும் தோன்றும்.


இலைகள் கெட்டித்தன்மை அடையும். சில நேரங்களில் இலைகள் நீண்டும், இலை ஓரங்கள் இரு பக்கமும் சுருண்டும் காணப் படும். இளந் தளிர்கள் தோன்றும், குறைபாடு கள், வளர்ச்சி அடைந்த பின்பும் மறையாது தங்கிவிடும். பொதுவாக ஆரஞ்சின் இலை யில் துத்தநாகச் சத்து 25 இல் இருந்து 50 பிபிஎம் அளவு இருக்க வேண்டும். மேற்படி அளவிற்குக் குறைவாக இலையில் துத்தநாகச் சத்துக் குறைபாடு இலைகளில் ஏற்படும்.


மாங்கனீசு குறைபாடு


இளந்தளிர்களில் வெளிர் பச்சையும், இலையின் நரம்புகள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகள் கரும்பச்சை நிறத்திலும் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் வெளிறிய மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மாங்கனீசு குறைபாட்டினால் இலைகளின் அளவு சிறுத்துக் காணப்படுவது இல்லை. மாங்கனீசு பற்றாக்குறை நன்கு வளர்ச்சி அடைந்த தளிர் இலைகளில் முதலில் தோன்றும். மேலும் நிழற்பாங்கான பகுதி யிலுள்ள மரங்கள் மற்றும் மரத்தின் உட்பகுதியில் உள்ள இலைகளில் அதிகம் தென்படும். சூரிய ஒளிபடும் இடங்களில் இலைகளின் மேல் எலுமிச்சம் பழ மஞ்சள் நிறம் தென்படும். முற்றிய இலைகளில் சூரிய ஒளி பட்டாலும் அவை மஞ்சள் நிறத்துடனேயே இருக்கும். சிலவேளை அத்தகைய இலை களில் மஞ்சள் நிறத்துடனே சிறுசிறு வெண் புள்ளிகள் தோன்றலாம். பொதுவாக ஆரஞ் சின் இலைகளில் மாங்கனீசு சத்து 25 முதல் 50 பிபிஎம் அளவில் இருக்க வேண்டும். அந்த அளவிற்குக் குறைந்தால் மேற்படி மாற்றங்கள் இலைகளில் காணப்படும்.


இரும்புச் சத்து குறைபாடு


இலைகளின் மேற்புற பகுதியில் இலை நரம்பு கள் மட்டும் பச்சை நிறத்துடன் காணப் படும். ஆனால் நரம்புகளுக்கு இடையே உள்ள பகுதி மஞ்சள் நிறத்துடன் காணப் படும். இரும்புச் சத்து பற்றாக்குறை அதிக மாக இருப்பின் இலை முழுவதுமே வெளுத்து விடும். புதிதாக வரும் இலைகள் வெளுப்பாக வரும். இளந்தளிர் இலைகளில் மட்டும் முதலில் இக்குறைபாடு மறைந்து போவதும் உண்டு. இலைகளில் இரும்புச் சத்து அளவு 50 இல் இருந்து 120 பிபிஎம் வரை இருத்தல் வேண்டும். அதற்குக் குறைந்தால் மேற்படி இரும்புச் சத்துக் குறைபாடு தோன்றும்.


செம்பு அல்லது தாமிரச் சத்து குறைபாடு


தாமிரச்சத்து குறைபாட்டின் அறிகுறி கள் இளம் இலைகளிலோ அல்லது தளிர்ப் பகுதிகளிலோதான் முதலில் தெரியவரும். நுனி இலைகள் வழக்கத்திற்கு மாறுபாடாக பெரியதாகவும், கரும் பச்சையாகவும் இருக்கும். அப்படியான இலைகளின் அடிப் பகுதியில் சிறுசிறு கொப்புளங்கள் அல்லது புள்ளிகள் தோன்றும். இவற்றுள் ஒரு வகையான பசை போன்ற நீர்மம் காணப் படும். இலை ஓரங்கள், இலைகள் முறுக்கிய நிலையிலும் வளைந்தும் வெளிறியும், துணை நரம்புகள் இலைப் பரப்பில் தூக்கியும் தென்படும்.


பழுப்பு நிறத்தில் அழுகிய பகுதிகள் காணப்படும். தாமிரக் குறைபாட்டை ‘சொறி நோய்’ என்று அழைக்கின்றனர். தாமிரக் குறைபாடு நீண்ட காலங்களுக்கு நீடித்தால் அடி நோக்கி கருகும் நோய் அதிகரிக்கும். பிறகு மரமே சிறுத்து முடிவில் பட்டுவிடும். தாமிரச் சத்து இலையில் 5 முதல் 12 பிபிஎம் அளவு இருத்தல் வேண்டும். அதற்குக் குறைந்தால் இலைகளில் தாமிரச் சத்துக் குறைபாடு தோன்றும்.

போரான் குறைபாடு


இலைகள் குறுகியும், நீண்டும் இருக்கும். இலையின் ஓரங்கள் சீராக இராது. இலைப் பரப்பு மென்மை இழந்து காணப்படும். இளந்தளிரில் இலை அமைப்பு மாறுதல், கொழுந்து கருகிப் போதல், கிளை நுனிகளில் வேறு மொட்டுகள் கிளைத்து வளருதல், இளந் தளிர்களில் ஏற்படும் இக் குறைபாடுகள் மறையாமல் தங்கிவிடும். போரான் குறைபாட்டால் பழங்களின் அமைப்பு மாறியும், அவற்றின் மேற்புறத்தில் கடினமான பகுதிகளும், பழுப்பு நிறப் புள்ளி களும் காணப்படும்.


மாலிப்டினம் குறைபாடு


இலைகள் கீழ்நோக்கி வளைந்து தொங்குதல், பெரிய அளவில் பழுப்பு கலந்த மஞ்சள் நிறப் பகுதிகள் இலைகளில் காணப் படும். இது மஞ்சள் புள்ளி நோய் எனப்படும்.

நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்

நுண்ணூட்டச் சத்துகளான துத்தநாக சல்ஃபேட் (0.5 விழுக்காடு) மாங்கனீசு சல்ஃபேட் (0.05 விழுக்காடு), இரும்பு சல்ஃபேட் (0.25 விழுக்காடு), மக்னீசியம் சல்ஃபேட் (0.5 விழுக்காடு), போரான் (0.1 விழுக்காடு) மற்றும் மாலிப்டினம் (0.003 விழுக்காடு) கொண்ட நுண்ணூட்டச் சத்துக் கலவையை மூன்று மாதங்களுக்கு அளிக்க வேண்டும். மேலும் மரம் ஒன்றுக்கு ஒவ் வோர் ஆண்டும் துத்தநாக சல்ஃபேட், மாங்கனீசு சல்ஃபேட் மற்றும் இரும்பு சல்ஃபேட் ஒவ்வொன்றிலும் 50 கிராம் உரமிடுதல் வேண்டும்.

கமலா ஆரஞ்சிற்கு ஏற்ற கரிம இலைவழி ஊட்டம்

கமலா ஆரஞ்சில் கரிம ஊட்டக் கலவையை இலை வழியாக தெளித்து மகசூலை அதிகரிக்கலாம். மரங்களில் நுண் ணூட்ட சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய கரிம ஊட்டக் கலவையை பின்வரும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கலாம்.


கருவாடு – 5 கிலோ, பொடியாக்கப்பட்ட எலும்புகள் – 5 கிலோ, ஈரமான சாணம் – 4 கிலோ, டிரைடாக்ஸ் புரோக்கும்பன்ஸ் களைகள் – 35 கிலோ பொடியாக வெட்டப்பட்ட இலைகள். மற்றும் வெல்லம் – 5 கிலோ, பால் – 5 லிட்டர். பசுமாட்டுக் கோமியம் – 5 லிட்டர்


மேற்சொன்ன அனைத்தையும் நன்றாகக் கலந்து, 200 விட்டர் தண்ணீருடன் கலக் கவும். இதனை நொதித்தல் முடியும் வரை ஒவ்வொரு நாளும் நன்றாகக் கலக்க வேண்டும். பொதுவாக 30-35 நாட்களுக்குள் நொதித்தல் முடிந்து விடும்.
இதற்கு அறிகுறி யாக நுரைத்தல் நின்றுவிடும். மேலும் கலவையின் மேல் பளபளக்கும் பச்சை நிறத்தில் நீர்போல் தேக்கம் காணப்படும். இதிலிருந்து 5 லிட்டர் கலவையை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். 45 நாட்களுக்குள் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு நீங்கிவிடும். மகசூலும் 15 விழுக்காடு அதிகமாகும்.


கவாத்து செய்தல்
நீர்த் தண்டுகள், காய்ந்த மற்றும் நோய் தாக்கப்பட்டுள்ள கிளைகள், உள்பக்கமாக வளரும் கிளைகள், வேர்களில் இருந்து வரும் தளிர்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். தரை மட்டத்தில் இருந்து 45 செமீ உயரம் வரை நடுத் தண்டில் இருந்து வளரும் இளந் தளிர்களை அகற்ற வேண்டும்.


நீர் பாய்ச்சல்
மண்ணின் ஈரப்பதம், மரத்தின் தோற்றம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டே நீர்ப் பாய்ச்சுதல் வேண்டும். நீர் பாசனம் செய்யும் பொழுது மரத்தின் அடிப் பாகத்தில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு மரத்தின் அடிப் பாகத்தில் நீர் தேங்குவதால் வேர் அழுகல் நோய் தாக்கு வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும், நீர் தேங்குவதால் மண்ணில் உள்ள சத்துகள் அடித்துச் செல்லப்படுகின்றன.
நீர் பாசனம் செய்யப் பயன்படுத்தும் தண் ரின் தரம் சரியில்லா விட்டால், மரத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில உப்புகள் வேர் பகுதிகளில் அதிகரித்து விடுகின்றன. தேவைக்கு அதிகமாக நீர் பாய்ச்சுவதாலும் மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும். எனவே, தேவைக்கேற்ப முறை யாக நீர் பாய்ச்சுதல் அவசியம்.


ஊடுபயிர்கள்
ஆரஞ்சு நடவு செய்த தொடக்கக் கட்டத்தில் மரங்களுக்கு இடையே உள்ள இடத்தை ஊடு பயிர்கள் நடவு செய்வதன் மூலம் லாபகரமாகப் பயன்படுத்தலாம். அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த பயிர் களான, பட்டாணி, பீன்ஸ் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம் ஆரஞ்சு மரங்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது. ஊடுபயிர்களைத் தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விபரங்கள்.
ஆழமாக வேர்விடும் பயிர்களைத் தவிர்க்க வேண்டும். குறைந்த காலத்தில் மகசூல் தரக் கூடிய பயிர்களாக இருத்தல் வேண்டும். நிலத்தை நன்கு மூடி வளரும் பயிர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மண் அரிப்பைக் கட்டுப்படுத்தலாம். தேர்ந்தெடுக்கும் பயிர்கள் இலாபம் தரக் கூடியதாகவும், நிலத்தின் ஊட்டச்சத்து மற்றும் நீரை அதிக அளவிற்குக் குறைக்காதது ஆகவும் இருத்தல் அவசியம்.


வளர்ச்சி ஊக்கிகள்
ஆரஞ்சு மரங்களில் காய் உதிர்வது விவசாயிகளுக்கு பெரும் சிக்கலாக உள்ளது. காய் உதிர்வதைக் குறைத்து காய் பிடிப்பை அதிகரிக்க 2, 4-டி – 20 பிபிஎம் அல்லது என்ஏஏ 30 பிபிஎம் ஆகிய வளர்ச்சி ஊக்கிகளை பூக்கும் காலத்தில் ஒருமுறையும், மீண்டும் காய் பிடிக்கும் காலத்தில் ஒரு முறையும் தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு


பச்சை இலைப்புழு
சிறிய செடியாய் இருப்பின் கைகளால் புழுக்களைப் பொறுக்கி எடுத்து அழித்து விடலாம். வளர்ந்த மரமாக இருப்பின் குளோபைரிபாஸ் 1 லிட்டர் நீரில் 2.0 மில்லி புதுத் தளிர் விடும் காலத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பதனால் முழுப் பாதுகாப்பு பெறலாம்.


இலைத் துளைப்பான்
இலைத் துளைப்பான் சேதத்தைக் கட்டுப்படுத்த மிதைல் டெமட்டான் அல்லது குயினால்பாஸ் ஒரு லிட்டர் நீரில் 2.0 மில்லி இளந்தளிர் தோன்றும் காலங் களில் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.
தண்டுத் துளைப்பான்
மரங்களில் புழுக்கள் துளைத்த ஓட்டை தெரிந்தால் மோனோ குரோட்டோபாஸ், 10 மில்லி மருந்தை பஞ்சில் நனைத்து உட் செலுத்தி களிமண்ணால் மூடிவிடவும். புழுக் களின் கழிவுகள் தென்படும் மரங்களில் ஆல்ட்ரின் 50 விழுக்காடு நனையும் தூள் ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் வீதம் கலந்து துளையிட்டு உட்செலுத்துவதன் மூலமும் கட்டுப்படுத்தலாம். நீர்ப்பாசன வசதியற்ற இடங்களில் செல்பாஸ் (பாஸ்டாக்சின்) மாத்திரை ஒன்றை துளையில் இட்டு களி மண்ணால் மூடிவிடவும். புழு தாக்கிய சிறிய கிளைகளை வெட்டி எரித்து விட வேண் டும். விளக்குப் பொறி வைத்துத் தாய் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.


அசுவிணி
ஒரு லிட்டர் நீருக்கு மிதைல் டெமடான் 2.0 மில்லி அல்லது மோனோ குரோட் டோபாஸ் 1.25 மில்லி என்ற அளவில் அசுவிணி தென்படும் காலத்தில் தெளிப் பதின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
செதிள் பூச்சி, மாவுப் பூச்சி, வெள்ளை ஈக்கள்
ஒரு லிட்டர் நீருக்கு கார்பரில் நனையும் தூள் 2 கிராம் அல்லது மிதைல் பாரத்தி யான் 1 மில்லி மருந்துக் கலவையை செடிக ளின் மீது நன்றாக நனையும்படி தெளிப்ப தால் இந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
மேற்கூறிய பூச்சிகளைத் தவிர தத்துப் பூச்சி இலைப் பேன், சிலந்திகள், இலைச் சுருட்டும் புழு, சிவப்பு எறும்புகள் போன்ற பூச்சி வகைகளும் ஆரஞ்சைத் தாக்குகின்றன.
இவற்றைக் கட்டுப்படுத்த மேற்கூறியுள்ள மருந்துகளின் கலவையே போதுமானது. மிதைல் டெமடான் மற்றும் மோனோ குரோட்டோபாஸ் மருந்து தெளித்த பிறகு குறைந்தது 12 நாட்கள் கழித்தே பழங்களை அறுவடை செய்தல் வேண்டும்.


சாம்பல் நோய்
எக்டருக்கு 25 கிலோ கந்தகத் தூளை தூவுவதன் மூலம், தொடக்க நிலையில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். நோய் முதிர்ந்த நிலையில் ஒரு லிட்டர் நீருக்கு கார்பன்டசிம் 1 கிராம் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.


நுனிக்கருகல் நோய்
பாதிக்கப்பட்ட கிளைகளை வெட்டி விடவும். வெட்டிய பகுதியில் 1 விழுக்காடு போர்டோக் கலவை அல்லது பைடோலான் 0.2 விழுக்காடு மருந்தைத் தெளிக்க வேண்டும். ஆரஞ்சுச் செடிகளை போதிய உரமிட்டு வளமாக்கினால் நோய் தாக்காது.


கேங்கா நோய்
இந்நோய் தோன்றியவுடன் மற்ற மரங்களுக்குப் பரவாமல் தடுக்க, அக்ரிமைசின் அல்லது போசாமைசின் அல்லது கிளாண்டாமைசின் 250 பிபிஎம் என்ற அளவில் (4 லிட்டர் நீரில் ஒரு கிராம் வீதம்) அல்லது ஒரு விழுக்காடு போர்டோக் கலவையைத் தெளிக்க வேண்டும்.


நலிவு நோய்
நோயைப் பரப்பும் அசுவிணியைக் கட்டுப்படுத்த வேண்டும். இந் நோய்க்கு எதிர்ப்புத் திறனுடைய வகைகளான சாத்துக்குடி. ஆரஞ்சு. ஜம்பேரி செடிகளை அடிக் கன்றுகளாகப் பயன்படுத்தி ஒட்டுக் கட்டுவதாலும், இந்நோய் வராமல் தடுக்க லாம்.
ஆரஞ்சின் வைரஸ் நோய்க்காக தடுப்பு ஆற்றல் ஊட்டப்பட்ட கன்றுகளை நடவு செய்தால் நோய் வராமல் தடுக்கலாம்.


வேர் நூற்புழு
பாதிக்கப்பட்ட செடிகளின் வேர்ப் பகுதியைச் சுற்றி இரண்டு அல்லது மூன்று செமீ ஆழம் வரை மேல் மண்ணை இலே சாகக் கிளறி ஒரு மரத்திற்கு கார்போ பியூரான் குருணை 280 கிராம் தூவி உடனே நீர் பாய்ச்ச வேண்டும். குருணை இட்ட மரங்களில் நூற் புழுவின் சேதம் 10 மாதங்கள் வரை கட்டுப்படுத்தப் படுகிறது.


அறுவடை
ஒட்டுக் கட்டிய செடிகளை நடவு செய்த மூன்றில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் காய்க்கத் தொடங்கும். விதைகளில் இருந்து வந்த நாற்றுகள் காய்ப்பதற்கு ஐந்தில் இருந்து ஏழு ஆண்டுகளாகும்.
நீலகிரி மாவட்டத்தில் ஒரு ஆண்டில் இரண்டு பருவங்களில் அறுவ டைக்கு வருகிறது. முதல் அறுவடை ஆகஸ்ட் மாதத்திலும், இரண்டாம் அறுவடை நவம்பர் – டிசம்பர் மாதங் களிலும் உள்ளன. நவம்பர் – டிசம்பர் மாதங்களில் 80 விழுக்காடு அறுவடைக்கு வருகிறது.


மகசூல்
ஒரு ஆண்டில் எக்டருக்கு 15 இல் இருந்து 20 டன் வரை கிடைக்கிறது.

-ஆ. பபிதா

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news