அச்சுத் துறை சரிவைக் கண்டு வரும் இந்த நவீன கால கட்டத்தில் பதிப்பாளர் களும், எழுத்தாளர்களும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு குறைந்து விட்டனர். இந்த நிலையிலும் அங்கொன்றும் இங்கொன்று மாக சிறிய எழுத்தாளர்களும், பதிப்பாளர் களும் ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவும் வகையில் புதிதாக பிரின்ட் ஆன் டிமாண்ட் என்ற பதிப்புமுறை வந்துள்ளதாகக் கூறுகிறார் திரு. ஸ்ரீகுமார். அதைப்பற்றி மேலும் அவர் கூறுகையில்,
“அச்சுத்துறை கடந்த சில ஆண்டுகளாக மிகுந்த சரிவைக் கண்டு வருகிறது. அதற்குக் காரணம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அனைவரும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டோம். அதனால் தகவல் தொழில்நுட்ப முறைகளும் மாறிவிட்டன. இணையம் பெரிதாக வளர்ந்து விட்டது. அதனால் அனைத்துச் செய்திகளையும், உடனுக்குடன் அறிந்து கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.
அதனால் எழுத்தாளர்களும், தங்களது எழுத்துக்களையும், பதிப்புகளையும் இணையத்தில் பதிவிட ஆரம்பித்து விட்டனர். ஆனால் இப்போதும் புத்தகம் எடுத்துப் படிக்கும் ஆர்வம் உள்ள சிலர் இருக்கின்றனர். அவர்களுக்காக இயங்குகின்ற சில பதிப்பகங்களும் எழுத்தாளர்களும் இருந்து வருகின்றனர். ஒரு பதிப்பாளர் அல்லது எழுத்தாளரின் வாசகர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு தனது படைப்பைக் புத்தகமாகக் தனது சில வாசகர்களுக்காக கொடுக்க விருப்பம் உள்ளது. ஆனால் அந்த புத்தகத்தைப் பதிப்பிக்கச் செல்லும் போதுதான் சிக்கல்.
இந்த டிஜிட்டல் உலகிலும் ஆயிரக்கணக்கான பிரதிகளை வெளியிடும் பதிப்பகங்கள் உள்ளன. அவைகள் புத்தகங்களை பதிப்பிக்க ஆஃப்செட் முறையினையே பயன்படுத்துகின்றனர். இந்த ஆஃப் செட் முறையில் குறைந்த பட்சம் ஆயிரம் பிரதிகளையாவது அச்சிட வேண்டும். அதற்குக் குறைவாக பதிப்பிக்க வேண்டும் என்று எழுத்தாளர்கள் நினைத்தால் அதிக பொருட்செலவு செய்ய வேண்டி உள்ளது.
இந்த சிக்கலால் பல சிறிய எழுத்தாளர்களும், கவிதைத் தொகுப்பாளர்களும் குறைந்த அளவு புத்தகங்களை அச்சிட “பிரின்ட் ஆன் டிமாண்ட்” என்ற புதியமுறையைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளார். இதனால் என்ன பயன் என்றால், இதில் எத்தனை புத்தகங்கள் வேண்டுமோ அந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகளை அச்சிட்டுக் கொள்ளலாம். அதனால் வெறும் பத்து புத்தகங்கள்தான் வேண்டும் எனது வாசகர்களுக்கு என்றாலும், அதனை அச்சிட்டுக் கொள்ளலாம். இந்த முறையால் சிறிய எழுத்தாளர்கள் கூட தங்கள் புத்தகங்களை தாங்களே வெளியிடலாம். இதில் பயன்படுத்தப்படும் எந்திரமானது நாம் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டு இருக்கும் டிஜிட்டல் பிரின்டிங் கருவிதான்.
இந்த முறையைப் பயன்படுத்தி அச்சிடுவதற்கு, லேசர் பிரின்டிங் இயந்திரத்தில் சில மென்பொருட்களை மாற்றிப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் லேசர் தொழில்நுட்பம் என்பதால் சிறிது அதிக விலை தர வேண்டும். ஆனால் இந்த விலை என்பது ஆஃப் செட் பிரின்டிங் முறையில் அதிகப் பிரதிகளை அச்சிட்டு வீணாக்குவதை விட குறைந்த அளவில்தான் இருக்கும்.
நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்த ஒரு டெண்டருக்கு விண்ணப்பித்து இருந்தேன். அது, ஒரு கோடி வாக்காளர்களின் விவரங்களைப் பிரின்ட் எடுத்துத் தரும்படியான ஒரு டெண்டர். அதற்கு மிகக் குறைந்த கால அவகாசமே கொடுத்து இருந்தனர். அவ்வாறு விரைவாக பிரின்ட் எடுப்பதற்கு எனக்கு ஒரு அதிவேக பிரின்டர் தேவைப்பட்டது. அப்போதுதான் நான் லேசர் பிரின்டரைப் பயன்படுத்தி அந்த டெண்டரை முடித்துக் கொடுத்தேன்.
அந்த லேசர் பிரின்டரைப் பார்த்த எனது நண்பர் இந்த பிரின்டரைப் பயன்படுத்தி பிரின்ட் ஆன் டிமாண்ட் என்ற முறையில் புத்தகங்களை அச்சிட்டு குறைந்த அளவிலும் பிரதிகளை தயார் செய்து விற்பனை செய்யலாம் என்று கூறினார்.
அதன் பின்னரே இதனைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். நான் டிஜிட்டல் பிரின்டிங் துறையில் பல ஆண்டுகளாக இருந்து வந்ததால் எனக்கு இந்த பிரின்ட் ஆன் டிமாண்ட் தேவை இருக்கின்ற வாடிக்கையாளர்களை அடைவது மிக எளிதாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதனைச் செய்து வருகிறோம்.
இதனால் பல நன்மைகள் உள்ளன. பதிப்பாளர்களுக்கு மட்டும் அல்ல. பல அரிய படைப்புகளுக்கும்தான். இதனைப் பயன்படுத்தி பல பழைய அரிய காவியம், இலக்கியம் தொடர்பான புத்தகங்களையும் குறைந்த பிரதிகளாகப் பதித்து வைத்துக் கொள்ளலாம்.
இது, டிஎன்பிஎஸ்சி மற்றும் ஐஏஎஸ் அகாடமி, கோச்சிங் சென்டர்கள், பள்ளிகள் போன்ற சில பிரதிகள் தேவைப்படும் அலுவலகங்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த முறையில் பிரதிகளைத் தேவைப்படும் அளவிற்கு அச்சிட்டுப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் நிறைய புத்தகங்களை அடித்து இருப்பு வைத்திருக்கத் தேவை இல்லை” என்று கூறினார் திரு. ஸ்ரீகுமார்.
-உஷா. சி