திருமதி. கிருஷ்ணவேணி, சென்னை குன்றத்தூரில் வசித்து வருபவர். தன் வீட்டருகே உள்ள மூன்று ஏக்கர் நிலத்தில் காய்கறித் தோட்டம், வாழைத் தோட்டம், மாந்தோப்பு அமைத்து உள்ளதோடு, கீரைகளையும் பயிர் செய்கிறார். பரபரப்பான நகரத்துக்கு நடுவே பசுமையான இவர்களின் தோட்டத்தைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. தாங்கள் செய்யும் வேளாண்மை குறித்து திருமதி. கிருஷ்ணவேணி கூறும்போது,
“காய்கறிச் செடிகளை முதலில் எங்கள் வீட்டுத் தேவைக்காக மட்டுமே வளர்த்தேன். பின்னர் படிப்படியாக அதிக அளவில் செடிகளை வளர்க்கத் தொடங்கினேன். காலப்போக்கில் நிறைய காய்கறிகள் விளையத் தொடங்கின.
இதனால் அவ்வாறு விளைந்த காய்கறிகளை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தேன். அடுத்ததாக காய்கறிக் கடைகளுக்கும் கொடுக்கத் தொடங்கினேன். வேளாண்மையைப் பொறுத்த வரை என் கணவர் திரு. பலராமன், மற்றும் வேளாண்மைப் பட்டதாரியான எனது மகன் திரு. ஆகியோர் எனக்கு மிகவும் துணையாக இருக்கிறார்கள்.
மூன்று தலைமுறையாக பேணிவரும் நிலம் இது. அக்கம் பக்கம் முழுவதும் நிலங்கள் விற்கப்பட்டு விட்டன. எங்கள் நிலத்தையும் விலைக்குக் கேட்கிறார்கள். எனக்கு அறுபத்து நான்கு வயது ஆகிறது. எனது கணவருக்கு அறுபத்து ஒன்பது வயது ஆகிறது. பிள்ளைகள் எங்களுடன் இருக்கிறார்கள். இந்த நிலத்தை விற்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. இந்த நிலத்தில் இருந்து வரும் வருமானத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதனால் நிலத்தை விற்கவில்லை. வெங்காயம், மிளகாய், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் என பலவகைக் காய்கறிகள், கீரைகள், கிழங்குகளை பயிரிடுகிறோம்.
தொழு உரம், கம்போஸ்ட் உரம், பிண்ணாக்கு உரம், பசுந்தாள் உரம் என பலவகை இயற்கை உரங்கள் உள்ளன. நாங்கள் வீட்டில் இருந்தே தொழு உரத்தைத் தயாரிக்கிறோம். வெளியில் இருந்து பசுந்தாள் உரம், கம்போஸ்ட் உரம், பிண்ணாக்கு போன்றவற்றை வாங்கிக் கொள்கிறோம்.தொழு உரம் வீட்டில் இருந்தே தயாரிக்கலாம். மாடுகளின் சாணத்தை வைத்து தொழு உரம் தயாரிக்கலாம். மாட்டுச் சாணத்தை விட மாட்டின் சிறுநீரில் தான் உரச்சத்து அதிகம் உள்ளது.
அதனால் மாட்டுக் கொட்டகையில் மண்பரப்பி, மாடுகள் தின்று கழித்த வைக்கோலை அதில் பரப்பி, அவற்றில் மாட்டை சிறுநீர் கழிக்கும்படி செய்து, அதைச் சேகரித்து மக்க வைத்து இந்த வகை உரம் தயாரித்துக் கொள்கிறேன். ஒரு சில பருவத்தில் மட்டுமே ஒரு சில காய்கறிகளை வளர்க்க முடியும். நிலத்தின் மண் உப்புத் தன்மை கொண்டதாக இருந்தால் பசுந்தாள், செம்மண் மற்றும் தொழு உரத்தை நிலத்தில் இட்டு இரண்டு அடி ஆழம் வரை மண்ணைக் கொத்தி விட வேண்டும்.
களிமண் நிலமாக இருந்தால் பசுந்தாள் உரம், தொழு உரம், சாம்பல் இவற்றைக் கலக்க வேண்டும். களர் மண்ணாக இருந்தால் பசுந்தாள் உரத்தை அதிக அளவில் இட வேண்டும். பொதுவாக தோட்ட மண்ணில் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இவற்றை அதிகமாக இட்டு மண்ணை வளப்படுத்திக் கொள்ளலாம்.
காய்கனிகளைப் பயிரிடும் போது நீண்டகாலப் பயிர்களான முருங்கை, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி போன்றவற்றை தோட்டத்தின் ஓரத்தில் நட வேண்டும். இந்த சிறிய வகை செடிகளின் நிழல், தோட்டத்தின் உள்பகுதியில் விளையும் காய்கனி பயிர்களின் மீது படாதவாறு இருக்க வேண்டும். விரைவில் பலன் தரக்கூடிய கீரை வகைகள், கொத்தமல்லி இவற்றைத் தோட்டத்தில் நடப்பதற்காக விடப்பட்ட நடைபாதைகளின் இரண்டு பக்கங்களிலும் சிறுபாத்தி அமைத்துப் பயிரிடலாம்.
பாத்திகளை கிழக்கு, மேற்கு பகுதியில் அமைப்பது நல்லது. நாள்தோறும் கிடைக்கும் சமையல் கழிவுகள் மற்றும் எளிதில் மக்கக்கூடிய கழிவுகளை பாத்திமேல் போடலாம். கீரைகள், காய்கறிகள் மற்றும் கொடி வகைகள் என அனைத்தையும் இதில் பயிர் செய்கிறோம்.
பாத்திகளைப் பிரித்து, வரப்புகளில் வெங்காயம், முள்ளங்கி, இஞ்சி இவற்றைப் பயிரிடுகிறோம். படரும் கொடி வகைகளை தனிக் கவனத்துடன் பயிரிடுகிறோம்.
அவரை மற்றும் புடலையை ஒரே பந்தலில் படர விட்டு விடுகிறோம். அவரை பூ விடும் முன் புடலை பூ விட்டு பலன் கொடுத்து விடும்.
அதிக வயதுடைய பயிரான கத்தரி, மிளகாய், நார்த்தங்காய், எலுமிச்சைப் பயிர்களுக்கு இடையே நடுவில் குறைந்த கால வயது பயிரான முள்ளங்கி, தண்டுக்கீரை இவற்றை விதைத்துப் பயன் பெறுகிறோம்.
தேவையில்லாத செடிகளைப் பிடுங்கி அவ்வப்போது களை எடுத்து விடுவோம். பயிர்களை நோய்களில் இருந்து காப்பாற்ற காணப்பட்டால் வேம்புக் கரைசல் பயன்படுத்துகிறோம். தோட்டம் அமைத்து இயற்கை உணவு வகைகளைப் பயிரிடுவதால் அருகில் உள்ளவர்கள் வீட்டுத் தோட்டம் வைப்பது பற்றி தெரிந்து கொள்ளவும், தோட்டம் வைக்கவும் என்னை அழைப்பார்கள்.
வீட்டுத் தோட்டம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை சம அளவு உள்ள பாத்திகளாகப் பிரித்துக் கொண்டால் முதல் பாதி ஃபிப்ரவரி, மே மாதத்தில் தக்காளிப் பயிரும். ஜூன், ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கத்தரியும், ஜனவரி மாதம் முதல் ஃபிப்ரவரி மாதம் வரை கீரை வகைகளையும் பயிர் செய்யலாம்.
இதேபோல் இரண்டாவது பாத்தியில், மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வெண்டையும், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கொத்தவரையும், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் முள்ளங்கியும், நவம்பர் மற்றும் ஃபிப்ரவரியில் வெங்காயமும் பயிரிடலாம்” என்றார் திருமதி. கிருஷ்ணவேணி.
இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் திரு. கணேசன் நடத்துநராகப் பணிபுரிகிறார். அடுத்த மகன் திரு. குமரன், பி.எஸ்.சி., வேளாண்மைப் பட்டதாரி.
– சை. நஸ்ரின்
(மாணவ பத்திரிக்கையாளர்)