நமது நாட்டுப் பொருளாதாரம் வளர்ந்து வருவது போன்ற ஒரு தோற்றத்தை, நம்பிக்கையை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். அரசியல் சூதாட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் பகடைக் காயாக உருட்டப்படுகிறது.
நாட்டின் மொத்த உற்பத்தி, மொத்த வருவாய், சராசரி வருவாய் உயர்கின்றது என்ற புள்ளி விவரங்களை நமக்கு முன் அள்ளி வீசுகின்றனர். ஆனால் நடைமுறை நிலைகள் நம்மைத் திகைக்க வைக்கின்றன.
நகரங்கள் விரைந்து வளர்கின்றன; மிகப் பெரிய கிராமங்கள் நகரத்தின் தோற்றப் பொலிவைப் பெறுகின்றன; ஒரு வழிச் சாலைகள் இரு வழிச் சாலைகளாகவும், இரு வழிச் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாகவும் மற்றும் நான்கு வழிச் சாலைகள் எட்டு வழிச் சாலைகளாகவும் விரிவடைந்து வருகின்றன. நகரங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் விண்ணைத் தொட முயல்கின்றன.
உற்பத்தி அளவு தேவைக்கு ஏற்ற அளவிற்கு உயரவில்லை. குறிப்பாக வேளாண்மை, சிக்கல்களில் சிக்கித் திணறுகின்றது. கிராமப் பொருளாதாரம் நிலை குலைந்து இருக்கின்றது. சிறுதொழில்கள், நடுத்தரத் தொழில்கள் பல சிக்கல்களை எதிர் கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றன. பெரிய தொழில்கள் அரசைக் கைக்குள் போட்டுக் கொண்டு சிறு, நடுத்தர தொழில்களின் சறுக்கலுக்கு காரணமாகி வருகின்றன.
மிகப் பெரிய தொழில்கள் கூடுதலாக ஆதாயம் தரும் பொருட்களின் உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன. எடுத்துக் காட்டிற்கு கார், பைக் உற்பத்தியைக் கூறலாம். சேவைப் பணிகள் விரைந்து பெருகுகின்றன. உணவு விடுதிகள், கடைகள், கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், கணினிச் சேவைகள், விளையாட்டுப் போட்டிகள், திரைப்படங்கள், அரசியல் பணிகள் என்று அடுக்கிக் கொண்டு போகலாம்.
சட்டத்திற்குப் புறம்பான வகையில் லஞ்சம், இயற்கைச் செல்வங்களை கொள்ளையடித்தல் மற்றும் அரசு ஒப்பந்தங்கள் தொடர்பான ஊழல்களில் நிறையப் பணம் புரள்கின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக நமது பொருளாதாரம் கடன் பொருளாதாரமாக மாறி வருகின்றது. அரசியல் சட்ட திட்டங்கள் எல்லா பண நடவடிக்கைகளையும் வங்கிகள் மூலம் செயல்படச் செய்கின்றன. இதனால் மக்களின் சேமிப்புகள் அனைத்தும் வங்கிகளில் சேர்கின்றன. இதனால் தான் மிகப் பெரிய வணிகர்களுக்கு, தொழில் அதிபர்களுக்கு கணக்கு வழக்கின்றி கடன் தருகின்றனர். இதன் விளைவுகளை இப்பொழுது பார்க்கின்றோம்.
”விரலுக்கேற்ற வீக்கம்”, என்பது போல ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கேற்ப கடன் வாங்குகின்றனர். இன்று ஏதாவது ஒரு வகையில் கடன்படாதவர்களே இல்லை. அரசின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் குறைந்தபாடு இல்லை. அரசின் பற்றக்குறை வரவு செலவுத் திட்டம் தன் பங்கிற்கு பணப் புழக்கத்தைக் கூட்டுகின்றது.
இந்த கடன் பொருளாதார வளர்ச்சி, ஒரு பலூனை வாங்கி, காற்றை ஊதி பெரிதாக்கிக் கொண்டே போவதைப் போன்றது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலைக்குத்தான் அமெரிக்கா தள்ளப்பட்டது. அதனைச் சரி செய்ய அமெரிக்கா பெரும்பாடு பட்டதை மறந்து விட முடியாது.
இப்பொழுது இந்திய ரிசர்வ் வங்கி நிர்வாகத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றி இருப்பதற்குக் காரணம் இந்தப் பணப் புழக்கம்தான். நாம் உலகப் பொருளாதாரதில் உயர்ந்த இடத்தைப் பெற வேண்டுமானால் சரியான உற்பத்திக் கொள்கையைக் பின்பற்ற வேண்டும். அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளைப் பின்பற்றுவது சரியாக இருக்காது.
நாம் இரண்டு வகையான நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். ஒன்று உற்பத்தி, முதலீடு தொடர்பானது. மற்றொன்று பணப் புழக்கம் சார்ந்தது.
பொருள் உற்பத்தியும் அதனை ஒட்டிய சேவைப் பணிகளும்தான் உண்மையான நாட்டு வளத்தையும், வருவாயையும் பெருக்கும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை முதன்மைத் தொழிலாக வேளாண்மை கருதப்படுகின்றது. அதனைச் சார்ந்த தொழில்களும், வாணிபமும் இரண்டாம் வகையைச் சாரும். இன்று பெருந்தொழில்கள் பொருள் உற்பத்தியில் பெரும் பங்கு பெறுகின்றன. ஏற்றுமதி, இறக்குமதியும் இவற்றோடு சேர்ந்து கொள்கின்றன. இவை எல்லாம் நாட்டு வருவாய் பெருக்கத்திற்குத் துணை செய்கின்றன.
திரைப்படத் துறையிலும், கிரிக்கெட் போன்ற விளையாட்டுத் துறையிலும் சில சேவைப் பணிகளிலும் கோடிக் கணக்கில் பணம் புழங்குகின்றது. இவை பலரின் வருவாயைக் கூட்டுகின்றன. ஆனால், இது உண்மையான வருவாய்ப் பெருக்கம் அல்ல பணம் கைமாறுகின்றது. அவ்வளவுதான்.
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் கணக்கில் கொண்டு வரப்படாத கருப்புப் பணத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பணம் தான் அரசியலில் குத்தாட்டம் போடுகிறது.இரண்டாவதாக அரசு அச்சடித்து வெளியிடும் பணமும், வங்கி உருவாக்கும் கடன் பணமும் பொருளாதார நடவடிக்கைகளின் பெருக்கத்திற்குத் துணை செய்கின்றன. தேவைக்கு மேல் பண அளிப்பு கூடுகின்ற பொழுது பண வீக்கம் ஏற்படுகிறது. கட்டுக் கடங்காத பணப்புழக்கும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதைப் போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றது. இது உண்மையான வளர்ச்சி இல்லை.
நமது நாடு வேளாண்மையை மையமாகக் கொண்ட நாடு. வேளாண்மைக்கு வேண்டிய நீர்வளத்தைப் பெருக்கி, அவர்களது விளை பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்கச் செய்தால் வேளாண்மை வளரும். வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதே உண்மையான பெருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும்.
பரவல் முறையில் சிறு தொழில்களையும் பெருக்க வேண்டும். அதன் மூலம் நாட்டின் மொத்த உற்பத்தியைப் பெருக்க வேண்டும். நாம் நமது நிலவளத்தையும், இயற்கை வளங்களையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். ஐந்தாண்டுத் திட்டங்களில் நிறைவேற்றாத திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்.
அயல்நாட்டு கடன் உதவியையோ, முதலீட்டையோ சார்ந்து இருக்காமல் உள்நாட்டுச் சேமிப்பை எப்படி முதலீட்டிற்குப் பயன்படுத்த வேண்டும் என்று பார்க்க வேண்டும். நமது நாட்டுச் சேமிப்பு இங்கு வீட்டில் முடங்குவதோ, வெளிநாட்டிற்குச் செல்வதோ நல்லது அல்ல.
நமது நாட்டுக் கல்வி முறையில் நிறைய மாற்றங்கள் தேவை. கல்வியை வழங்குவது அரசின் பொறுப்பாக இருக்க வேண்டும். இப்பொழுது இந்தப் பொறுப்பை அரசு தனியாரிடம் விட்டு விட்டதால் கல்வி வாணிபம் ஆகி விட்டது. ஒரு மாயையை உருவாக்கி மழலையர் கல்வி முதல் பல்கலைக் கழக கல்வி வரை தேவையற்ற கல்வி வழங்கும் நிலை தொடர்கின்றது. படித்து விட்டு வேலையற்று நிற்கும் பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்களே இதற்குச் சான்று.
நமது நாட்டின் வேளாண்மை, தொழில்களின் வளர்ச்சிக்குத் துணை செய்யும் தொழிற்கல்வி தேவை. மேலை நாட்டு அறிவியல் தொழில் நுட்பத்தை நாம் அப்படியே பின்பற்ற முடியாது. நமக்கு ஏற்ற தொழில் நுட்பத்தைப் பின்பற்ற வேண்டும்.
இப்பொழுது சில மிகப் பெரிய தொழில்கள், பெரிய சாலைகள், மின் உற்பத்தி போன்ற திட்டங்களை விளைநிலங்களில் கொண்டு வர முயல்கின்றனர். பொருளாதார முன்னேற்றத்தின் பெயரால் கொண்டு வருவதாகக் கூறுகின்றனர். ஆனால் இவை மக்கள் நலனுக்கும், வேளாண்மைக்கும் பாதகமாக இருப்பதால் மக்களின் எதிர்ப்பு தோன்றுகின்றது.
உண்மையான பொருளாதார வளர்ச்சி என்றால் எல்லா மக்களின் வாழ்விலும் வளர்ச்சி இருக்க வேண்டும்.
இன்று எல்லா அதிகாரங்களும் அரசிடம் குவிந்து விடுகின்றன. தேர்தல் நடந்து முடிந்த உடன் ஐந்தாண்டு காலத்திற்கு சட்ட மன்றங்களும், நாடாளுமன்றங்களும், அமைச்சர்களுமே ஆற்றல் மிக்கவர்களாகி விடுகின்றனர். மக்கள் வெறும் பார்வையாளர்கள் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர்.
ஆட்சியாளர்கள் வெறும் அதிகாரம் செலுத்துபவர்களாக இல்லாமல், தொலை நோக்கோடு நாட்டின் நலம் காப்பவர்களாக இருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்பது மக்களின் முயற்சியால் வருவது. மக்களின் விழிப்புணர்ச்சியின் விளைவு அது. சிந்தித்து செயல்படுகின்ற அறிவார்ந்த மக்களால்தான் உண்மையான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்.
”வளர்ச்சி என்பது நம் கையில்” என்ற தெளிவினை, நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்போம்; முன்னேற்றம் காண்போம்.
– டாக்டர் மா. பா. குருசாமி