Latest Posts

பால்பண்ணைகளை நம் நாட்டுக்கு ஏற்ப அமைக்க வேண்டும்

- Advertisement -

இஸ்ரேல் என்று அழைக்கப்படும் அந்த நாட்டில் வேளாண்மையும், பால்பண்ணைத் தொழிலும் உலகத்திலேயே மிகச் சிறப்பாக செய்யப்படுகிறது. இயற்கை வளம் குன்றிய வறண்ட பகுதி அதிகம் உள்ள இந்த நாட்டில், பசுக்கள், சராசரியாக ஒரு நாளைக்கு முப்பத்தைந்து லிட்டர் பால் தருவது ஒரு வியப்பு ஆகும். இதற்கு இங்கு குடியேறி உள்ள கூர்மதி நுட்பமும், ஆர்வமும் கொண்ட விவசாயிகளே காரணம்.
நாளொன்றுக்கு பன்னிரெண்டு லிட்டர் பால் தந்த பலாடி இனப் பசுக்கள் இருந்த இஸ்ரேல் நாட்டில் முப்பத்தைந்து லிட்டர் பால் தரும் பசுக்களை உருவாக்கி பெரும் பயன் அடைந்து உள்ளார்கள்.

இஸ்ரேல் மலைகளும், பாலைவனமும் கொண்ட ஒரு வறண்ட நாடு. இஸ்ரேலின் வடக்கு பக்கத்தில் மலைகளும், தெற்கு பக்கத்தில் பாலைவனமும் அமைந்து உள்ளன. இஸ்ரேல் நாட்டின் மொத்த நிலப்பரப்பு 27,800 சதுர மைல். அதில் 4,360 சதுர மைல் மட்டுமே பயிர் செய்யத் தகுதி வாய்ந்தது. ஆனால் தண்ணீர்ப் பற்றாக்குறையால் சுமார் இரண்டாயிரம் சதுர மைல் மட்டும்தான் விவசாயம் செய்கிறார்கள். இன்று உலகில் ஆரஞ்சு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இஸ்ரேல் நாட்டுக்கு ஒரு தனி இடம் உள்ளது.

பால் பண்ணைத் தொழில் அங்கு முழுமையாக கணினி மயம் ஆக்கப்பட்டு உள்ளது.­ சுமார் எண்ணூறு வகையான பால்பொருட்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

இங்கு அருங்காட்சியகங்கள் பல உள்ளன. நம் நாட்டில் உள்ளது போன்ற கலை, கலாச்சாரம், தொல்பொருள் ஆய்வுகள் சார்ந்த அருங்காட்சியகங்கள் தவிர பால்பண்ணைத் தொழில், அச்சுத் தொழில், தொடர்வண்டித் துறை, தானியங்களைப் பாதுகாத்தல் போன்ற பல தொழில்களுக்கும் தனித்தனியாக அருங்காட்சியகங்கள் உள்ளன.தொடக்கத்தில் இருந்த பலாடி இன பசுக்கள் குறைந்த அளவே பால் கொடுத்ததால் சிரியா. லெபனான் ஆகிய நாடுகளில் இருந்து அதிக பால் தரும் டமாஸ்கஸ் ரெட் என்ற இனப் பசுக்களை இறக்குமதி செய்தார்கள். இவற்றின் பால் அளவும் போதுமானதாக இல்லாததால் ஐரோப்பாவில் இருந்தும் அதிக பால் தரும் இனங்களை இறக்குமதி செய்தார்கள். இந்த பசுக்கள் உண்ணி காய்ச்சல் வந்து இறந்து விட்டன். ஆனால் டமாஸ்கஸ் ரெட் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து ஹாலந்து, அமெரிக்கா, கனடா நாடுகளில் இருந்து ஹால்ஸ்டீன், ஃப்ரீசியன் காளைகளை இறக்குமதி செய்து, டமாஸ்கஸ் ரெட் பசுக்களுடன் கலந்து ஆண்டுக்கு பத்தாயிரம் லிட்டருக்கு மேல் பால் தரும் இஸ்ரேலி ஹால்ஸ்டின் என்ற இனத்தை உருவாக்கினார்கள். இஸ்ரேலின் வறண்ட பகுதிகளில் வாழும் ஆற்றலும், அதிக பால் தரும் தன்மையும் உள்ளதாக இந்த இனம் அமைந்தது.

ஃப்,ரிசியன் போன்ற கால்நடைகளுக்கு குளம்புப் பகுதிகள் மிகவும் மென்மையாக இருக்கும். இவ்வகைக் கால்நடைகளுக்கு மென்மயான தரைதான் உகந்தது. இதனால் அங்குள்ள பால் பண்ணைகளில் கடினமான சிமென்ட் தளம் போடுவது இல்லை. தரை மென்மையாக இருக்க, ஆற்றுமணலைப் பரப்பி விடுகிறார்கள். ஆனால் நம் நாட்டில் சில பண்ணைகளில் விவரம் தெரியாமல் கான்கிரீட் தரை போட்டு விடுகிறார்கள். இது ஒரு தேவையற்ற செலவு ஆகும். பசுக்கள் உணவு உண்டபின் படுத்து ஓய்வு எடுக்க நல்ல மிருதுவான மெத்தை போன்ற தரையுள்ள கொட்டகைதான் உகந்தது. அவ்வாறு இல்லாமல் கடினமான கான்கிரீட் தரையிலோ, கருங்கல் பதித்த தரையிலோ படுக்க விட்டால், அவற்றுக்கு உடல்வலி ஏற்படும். அவ்வாறு வலி ஏற்படும்போது பசுக்களின் அசைபோடும் நிகழ்வுகள் தடைப்பட்டு செரிமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அது மட்டுமின்றி அதிக எடை உள்ள பசுக்கள் கருங்கல் அல்லது கான்கிரீட் தரை மீது நிற்க நேர்வதால் பலவிதமான குளம்பு நோய்கள் வந்து விடுகின்றன. மேலை நாடுகளில் ஒரு பழமொழி உண்டு. ”குளம்பில் வலி ஏற்பட்டால், இருபது குடம் பால் கொடுக்கும் பசு கூட இரண்டு குவளை பால் கொடுக்கும் பசுவாக ஓர் இரவுக்குள் மாறிவிடும்”. இந்த பழமொழியை அறிந்த மேலை நாட்டினர்,அவர்கள் பசுக்களுக்கான கொட்டகைகள் அமைக்கும் முன், இது பற்றி நன்கு தேர்ச்சி பெற்ற ஆர்க்கிடெக்ட்களின் ஆலோசனை பெற்றே இடம் தேர்வு செய்து கொட்டகைகள் அமைக்கிறார்கள்.

பால் பண்ணைகள் அமைக்கும்போது, புவியியல் ரீதியாக நம் நாட்டுக்கு, நம் மாநிலங்களுக்கு ஏற்றபடி திட்டமிடாமல், மேலை நாட்டின் ஏதாவது ஒரு பால்பண்ணையின் மாதிரி வரைபடத்தைத் தேர்வு செய்து இமயம் முதல் குமரி வரை இது போன்றே இருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது. அதனால்தான் அரசு அமைத்த பால்பண்ணைகளின் முதலீடு அதிகமானதோடு, வெற்றிகரமாகவும் இயங்க முடியாமல் போனது.
இஸ்ரேலில் பால்பண்ணை அமைக்கும்போது தரத்தோடும், குறைந்த செலவோடும் அமைப்பதற்கென்றே சிறப்பு பயிற்சி பெற்ற கட்டடக் கலைஞர்களைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் பால்பண்ணை அமையும் இடத்தை அறிவியல் சார்ந்து ஆய்வு செய்து தேர்ந்து எடுக்கிறார்கள். அந்த பகுதியில் அடிக்கும் காற்றின் வேகம், ஈரப்பதம், சுற்றுப் புறத்தில் எழும் ஒலியின் அளவு போன்ற அனைத்தையும் கணக்கில் கொண்டு கட்டட வரைபடத்தைத் தயாரிக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கான பொருட்களைத் தீர்மானிக்கிறார்கள். பசுக்களின் வாழ்வு முறையை அறிந்தவர்களாக இருப்பதால், அவர்களால் மாடுகளுக்கான வீடுகளை சிறப்பாக அமைக்க முடிகிறது. அவர்கள் மாட்டுக் கொட்டகை என்று அழைப்பதில்லை. கால்நடைகளின் வீடு என்றே குறிப்பிடுகிறார்கள்.

தகடுகளால் ஆன கூரைகள், இரும்புத் தூண்கள் கொண்டே பெரும்பாலும் மாட்டு வீடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் விலை மலிவான பொருட்களைக் கொண்டே கட்டி உள்ளனர். தண்ணீல் தொட்டகளைக் கூட கான்கிரீட்டால் கட்டவில்லை. பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளையே பயன்படுத்துகின்றனர்.
எல்லாப் பசுக்களையும் கட்டுப்பாடு இல்லாமல் திரிய அனுமதித்து உள்ளனர். பசுக்கள் வெளியே செல்லாமல் இருக்க சுற்றிலும் கழிகளைக் கொண்டு தடுப்பு அமைத்து உள்ளனர். தீவனம் இருக்கும் பகுதிக்கு பசுக்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லும் வசதியோடு அமைத்து உள்ளனர். சில பகுதிகளில் மட்டுமே மேல் கூரை அமைத்து உள்ளனர். சில பகுதிகளில் கூரை கிடையாது. ஆங்காங்கே பல தண்ணீர்த் தொட்டிகள் வைத்து இருக்கிறார்கள். தீவனம் உண்டபின் பசுக்கள் தங்கள் விருப்பம்போல் கூரைக்கு அடியிலோ அல்லது திறந்த வெளியிலோ எங்கு வேண்டுமானாலும் சென்று படுத்து அசை போடலாம்.
மாடுகளின் உடல் வெப்பத்தைக் குறைக்க தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளித்தல் (ஸ்ப்ரிங்ளர், தண்ணீரைப் பனித்துளிகள் போலாக்கி சாரல் பரப்புதல் (மிஸ்டர்ஸ்) என்ற இரண்டு முறைகள் உள்ளன. இரண்டு முறைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்துகிறார்கள்.

இஸ்ரேல் நாட்டில் நம் ஊர்களில் செய்வது போல், பசுக்களை அவை கட்டி இருக்கும் கொட்டகையிலேயே வைத்து பால் கறப்பது இல்லை. அங்கு பால் கறப்பதற்கு என தனி பகுதிகள் அமைத்து இருக்கிறார்கள். நாள்தோறும் காலையும், மாலையும் பசுக்களை அங்கு ஓட்டு வந்து பால் கறந்த பின் அவை தங்கும் கொட்டகைக்கே அனுப்பி விடுகின்றனர். பால் கறக்கும் கருவிகள் கொண்டு பால் கறக்கப்படுகிறது.
குறைந்த நிலப்பரப்பும், தண்ணீர் பற்றாக் குறையும் உள்ள அந்நாட்டில் அவர்களால் தீவனப் பயிர்களை அதிகம் பயிரிட இயலவில்லை. பருத்தி. ஆரஞ்சு, மற்றும் பேரிக்காய்களையே அதிகம் பயிரிடுகின்றனர். அங்கு எந்த கால்நடைகளுக்கும் பசும் புல்லையோ அல்லது வேறு பசுந்தீவனங்களையோ தனித் தீவனமாக கொடுப்பது இல்லை. அவர்கள் உணவாகக் கொடுப்பது அடர் தீவனம் மட்டுமே. அதை டிஎம்ஆர் என்று குறிப்பிடுகிறார்கள். டிஎம்ஆர் என்பது பசுக்கள் உண்ணும் எல்லா உணவுப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து கொடுப்பது ஆகும். எந்த ஒரு தனி தீவனப் பொருளையும் தனி உணவாகத் தருவது இல்லை.

இந்த அடர் தீவனம் தயார் செய்ய, வழக்கமான நார் தீவனங்களான உலர் புல், பதனப் பசுந்தீவனங்களை மிக குறைவாகவும், அத்துடன் ஆரஞ்ச் தோல்கள், காய்கறிக் கழிவுகள், உலர்ந்த கடலைக் கொடிகள், பீர் ஆலைகளில் கிடைக்கும் தானியப் புண்ணாக்குகள், கோழி எரு, பருத்திச் செடி தண்டுகள் என்று விவசாயக் கழிவுகளைக் கொண்டு தீவனம் தயாரிப்பதால் செலவும் குறைகிறது. இவை கூட தகுந்த ஆராய்ச்சி மற்றும் சோதனைகள் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
ஒரு பால் பண்ணையின் மொத்த செலவில் 65% தீவன செலவு ஆகும்.
வேளாண்மையில் கணினியைப் பயன்படுத்துவது போலவே, பால் பண்ணைத் தொழிலிலும் எல்லா நிலயிலும் எல்லா செயல்பாடுகளையும் கணினி மூலம் ஒருங்கிணைத்து உள்ளார்கள். பால் கறக்கும் கருவிகளுடன், கணினியால் இயக்கப்படும் பால் அளக்கும் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. பால் கறந்து முடிந்த உடன் அந்த பசு எவ்வளவு பால் கறந்தது என்ற செய்தி கணினியில் பதிவாகி விடுகிறது.

இஸ்ரேலில் பாலின் கொள்முதல் விலை, அந்த நாட்டில் உள்ள விவசாயிகள் ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய எவ்வளவு செலவழிக்க வேண்டி உள்ளது என கணக்கிட்டு, அதன் அடிப்படையிலேயே கொள்முதல் விலை ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகிறது.
பாலைப் பதப்படுத்தி விற்கும் தொழிற்சாலைகள் என்ன விலைக்கு பாலை விற்க வேண்டும் என்றும் முடிவு செய்து அறிவிக்கபடுகிறது. நாட்டின் குடிமக்கள் வாங்கும் திறனும் கணக்கில் கொள்ளப்படுகின்றனது.
பாலையும், பால் பொருள்களையும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சந்தைப்படுத்த பல புதிய உத்திகளை பால் பண்ணையாளர் குழுமம் வகுக்கிறது. அவர்களை பாலை ஏற்றுமதி செய்யாமல், மதிப்பு கூட்டப்பட்ட சீஸ் எனப்படும் பாலாடைக் கட்டிகளையே ஏற்றுமதி செய்கிறார்கள்.

அண்மைக் காலமாக பல முன்னோடி இந்திய பால் பண்ணையாளர்கள், இஸ்ரேல் நாட்டுக்கு சென்று, பல புதிய நுட்பங்களைக் கற்றிறிந்து வந்து செயல்படுத்தி வெற்றி பெறுகிறார்கள்.

– டாக்டர் வே. ஞானப்பிரகாசம்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news