யாரிடம் வேண்டுமானாலும், அவரை சந்திக்கும் நோக்கத்தில் செல்பேசி வாயிலாக பின்வரும் இந்த கேள்வியை கேட்டுப் பாருங்கள்.
”நீங்கள் பிசியாக இருக்கிறீர்களா?” ?
“ஆமாம். மிகவும் பிசியாக இருக்கிறேன்” என்றுதான் கூறுவார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் உண்மையிலேயே அந்த அளவுக்கு பிசியாக இருக்க மாட்டார்கள். இதே கேள்வியை உண்மையிலேயே பிசியாக உள்ள ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களின் பதில் இப்படி இருக்கும் – ”உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்க முயற்சிக்கிறேன்!” என்று கூறி எப்படியாவது நம்மைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருவார்கள்.
முதலில் பிசியாக இருப்பதாக கருதுபவர்கள் நேரத்தை சரியாக கையாளத் தெரியாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்ததாக பிசியாக இருப்பவர்கள் நேரத்தை சரியாக கையாளுகிறார்கள் என்று சொல்லலாம்.
உங்கள் வாழ்க்கை முறையை சிறிது மாற்றிக் கொண்டால் நேரத்தை திறமையாக மேலாண்மை செய்யலாம். என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அவற்றை திட்டம் இடுங்கள். பிறகு திட்டப்படி செய்து முடியுங்கள். நாளை என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இன்று மாலைக்குள் முடிவு செய்து நேர குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது செல்பேசியில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் இந்த பட்டியலில் உள்ளவற்றை செய்து முடித்து விடுங்கள். உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு பட்டியல் இடத் தொடங்கி விட்டால், எல்லா வேலைகளையும் நேரப்படி முடித்து விடலாம். உங்களுக்கு கூடுதல் நேரம் கிடைப்பதை அனுபவம் சார்ந்து உணர்வீர்கள்.
பல வேலைகளை ஒன்றாகச் சேர்த்து செய்து விடுங்கள். சான்றாக, அலுவலகத்தில் இருந்து திரும்பும் போதே வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி வந்து விடுங்கள். கொஞ்சம் கூடுதலாக செலவழிப்பது பற்றி கவலை இல்லை என்பவராக இருந்தால் ஆன்லைனிலேயே பொருட்களை வாங்கி விடலாம். அதற்கான வசதிகள் இப்போது வந்து விட்டன.
வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளா? அவற்றைச் செய்வதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.எடுத்துக் காட்டாக தோட்ட வேலைக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கினால் அதை விடக் கூடுதலாக செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஒரு வாரம் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே மூச்சில், ஒரே நாளில் செய்து விட வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
ஒரு வேலை மிகப் பெரியதாக இருக்கிறதா? அதற்காகவே அதைச் செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறீர்களா? இதை எப்படிச் செய்து முடிப்பேன் என்று தயங்கிக் கொண்டே இருக்கிறீர்களா? முதலில் தயக்கத்தை தள்ளிப் போட்டு விட்டு அதை மன உறுதியுடன் செய்யத் தொடங்கி விடுங்கள். நீங்கள் நினைத்ததை விட விரைவில் முடிந்து விடும்.
மின்னஞ்சல்களை அன்றாடம் பார்த்து விடுங்கள். பதில் அளிக்க வேண்டியவர்களுக்கு உடனுக்குடன் இரண்டு வரிகளிலாவது பதில் அளித்து விடுங்கள். தேவை அற்ற மின்னஞ்சல்களையும் அன்றன்றைக்கே நீக்கி விடுங்கள்.
திட்டம் இடும்போது உங்களுக்கான தனிப்பட்ட தேவைகளை மனதில் இருத்தி திட்டம் இடுங்கள். உங்களுக்கான ஓய்வு நேரம், குடும்பத்துடன் செலவிட வேண்டிய நேரம் அனைத்துமே முதன்மை ஆனவை.
திட்டம் இட்டு பணிகளை மேற்கொள்ளும்போது கிடைக்கும் கூடுதல் நேரத்தை தங்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். காலமும், கடல் அலையும் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை (Time and Tide Wait for No Man) என்று ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி இருக்கிறது.
– வெங்கடாசலம்