விஸ்வநாத் பிரதாப் சிங் –
1931 ல் பிறந்தார்.
1980 ல் உ.பி.முதல்வரானார்.
1984 ல் மத்திய நிதியமைச்சரானார்.
பிற்பாடு ராணுவ அமைச்சரானார்.
1989 ல் பிரதமரானார்.
1990 ல் ஆட்சியை இழந்தார்.
2008 ல் இறந்தார்.
என வெறுமனே புள்ளிவிவரங்களுக்குள் புதைத்து விடக் கூடிய வாழ்க்கையா அவருடையது?
91 ஆம் ஆண்டு புது தில்லி ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். எதேச்சையாக எதிரில் நிற்கும் ரயில்களைப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி. வி. பி. சிங்குக்கு எதிராக உயர் வகுப்பினரால் எழுதப்பட்ட வாசகங்கள். வி.பி.சிங் அவர்கள் ஆட்சியை இழந்து ஆறு மாதமாகியும் அப்படியே அதை அழிக்காமல் விட்டிருக்கிறார்கள் என்றால் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன். ஒரே ஒரு காரணம்தான்.
அது: மண்டல் கமிஷன்.
ஆண்டாண்டு காலமாக தாங்கள் மட்டுமே அனுபவித்து வந்த கல்வியும், பதவிகளும், பெருமைகளும் இந்த மண்டலால் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டி வந்துவிட்டதே என்கிற எரிச்சல்…… மனுதர்மத்தின் பேரால் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு மண்டல் தர்மத்தின் மூலம் கல்விக் கூடங்களின் கதவு திறக்கப்படுகிறதே என்கிற ஆத்திரம்…… – இவை எல்லாம்தான் அவர்களை அப்படி எழுத வைத்திருக்கிறது.
ஆத்திரம் தலைக்கேற வி. பி. சிங் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு வெளியில் வருகிறார் அடல் பிகாரி. அடுத்து வி.பி.சிங்கை நோக்கி நீளுகின்றன ஊடகர்களின் மைக்குகள். “நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டு விட்டீர்களே..?”
“ஆம்…… நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். ஆனால்…… பல கோடி பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக வந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசியலின் நிகழ்ச்சி நிரலில் வைத்த பிற்பாடு (Yes. I am defeated.
But Mandal is in Agenda.).” என்று வெகு நிதானமாக தெரிவித்தபடி இறங்கிச் செல்கிறார் வி.பி.சிங்.
ஆம். அதுதான் உண்மை.
தங்களது இந்திரா காந்தியின் காலத்தில் கண்டுகொள்ளவே படாத மண்டல் குழுவின் பரிந்துரைகளை…… தங்களது ராஜீவ் காந்தியின் காலத்தில் குப்பைக் கூடையில் வீசப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரைகளை…… தங்களது நரசிம்மராவ் காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டது என்றால் அதற்குக் காரணம் விஸ்வநாத் பிரதாப் சிங்தான். அவ்வளவு ஏன்…… பா.ஜ.க.வின் கட்சித் தலைமையில் கூட பிற்படுத்தப்பட்டவர்களைக் கணக்குக் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றால் அதற்கும் விஸ்வநாத் பிரதாப் சிங்தான் காரணம்.
பிரதமர் பதவியை விட்டு விலகிய பின்பும், புற்று நோயோடு போராடியபடியும்…… வாரத்தில் மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்தபடியும் டெல்லி குடிசைப் பகுதி மக்கள், வண்டி இழுப்பவர்கள், தலித்துகள், தொழிலாளர்கள், விளிம்பு நிலை மக்களின் வாழ்வுரிமைக்காக அவர் நடத்திய போராட்டங்கள் ஏராளம். தொடர்ந்து அவர் இயங்கிக் கொண்டேதான் இருந்தார்.
எரிமலையற்ற வாழ்க்கைதான் அந்த எளிய மனிதனின் கனவு. பாதியில் அறுபட்ட அக்கனவின் மீதியை நனவாக்குவது நம் கைகளில்தான் இருக்கிறது. (பாமரன் பக்கங்களில் இருந்து)
இன்று (ஜுன், 25) முன்னாள் பிரதமர் திரு. வி. பி. சிங் பிறந்த நாள்.
– சந்த்ருமாயா. எஸ்